ஸ்கெட்ச் போட்ட பி.கே; தட்டித்தூக்கிய ஜெகன்! - பாபு கோட்டையைத் தகர்க்க வகுக்கப்பட்ட வியூகம் | Prashant Kishor, political strategist scored YSR Congress

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (24/05/2019)

கடைசி தொடர்பு:10:45 (24/05/2019)

ஸ்கெட்ச் போட்ட பி.கே; தட்டித்தூக்கிய ஜெகன்! - பாபு கோட்டையைத் தகர்க்க வகுக்கப்பட்ட வியூகம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், முன்பைவிட பா.ஜ.க அதிக இடங்களைக் கைபற்றி தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் மூன்று மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலும் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த 3 மாநிலத்திலும் மாநில கட்சிகளே கோலோச்சியுள்ளன.

ஜெகன்மோகன் ரெட்டி

குறிப்பாக, ஆந்திராவில் தனது  தந்தை மறைந்து 10 வருடங்களுக்குப் பிறகு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்க உள்ளார். ஆந்திராவில் நடந்த இந்த சட்டமன்றத் தேர்தலில், மூன்று பி.கே-க்கள் முக்கியப் பங்காற்றின. அதில் ஒரு பி.கே-வின் வியூகம் மட்டுமே ஆந்திர மக்களிடம் நன்கு வேலைசெய்துள்ளது. 

பசுப்பு கும்குமா

முதல் பி.கே - பசுப்பு கும்குமா (Pasupu-Kumkuma, தமிழில் மஞ்சள்- குங்குமம்) ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி இந்தத் திட்டத்தை முன்வைத்தது. இதன்படி சுய உதவிக்குழுக்களின் மூலம் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.10,000 வழங்கப்படும். சுமார் 95 லட்சம் பெண்களுக்கு இந்தத் தொகை வழங்குவதாக சந்திரபாபு அரசு அறிவித்தது. இந்தத் திட்டம், ஆந்திரப் பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பவன்கல்யாண்

இரண்டாவது பி.கே -  சினிமா நடிகர் பவண் கல்யாண் (Pawan Kalyan). சமீபத்தில் கட்சி தொடங்கிய இவருக்கு, மிகவும் விரைவாக ஆந்திர மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்தது.  நடந்து முடிந்த தேர்தலில், அதிக செல்வாக்கு கூடும்; ஆந்திராவில் சில தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்றே கருத்துக் கணிப்புகள் கூறின.

ப்ரசாந்த் கிஷோர்

மூன்றாவது பி.கே - ப்ரசாந்த் கிஷோர். தேர்தல் வித்தகரான இவர், 2012-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் நரேந்திர மோடிக்கு ஆதரவாக சில தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்தார். அதை  செயல்படுத்தி, பா.ஜ.க பெருவாரியாக வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மத்தியில் ஃபேமஸ் ஆன இவர், சில மாநிலக் கட்சிகள் சார்பாகவும் அழைக்கப்பட்டார். அதன்படி உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இவர் பங்காற்றிய கட்சி, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  இந்த முறை ப்ரசாந்த் கிஷோர், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகக் களமிறங்கினார். 

பிரசாரம்

முதலில் கூறிய இரண்டு பி.கே-க்களையும் உடைத்து சுக்கு நூறாக்கியது இந்த மூன்றாவது பி.கே தான். ஜெகன் மோகன் ரெட்டியின் அசாத்திய வெற்றிக்கு ஸ்கெட்ச் போட்டுத் தந்ததும் இவர்தான். 2017-ம் ஆண்டு முதல், ஆந்திராவின் பல பகுதிகளுக்குச் சென்று மக்களின் நிலை அறிந்து ஜெகனுக்காக வியூகம் வகுக்கத் தொடங்கினார், கிஷோர். அதை அப்படியே செயல்படுத்தினார் ஜெகன் மோகன் ரெட்டி. இவரின் வியூகங்கள் அனைத்தும் பூத் அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இவரைப் பயன்படுத்தி, ஆந்திர மக்களிடம் தன்னை முன்னிறுத்தி, தற்போது அந்த மாநிலத்தின் முதல்வராக உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. தன் தந்தை இறந்து சரியாக 10 வருடங்களுக்குப் பிறகு, ஆந்திராவில் தான் இழந்த செல்வாக்கை இரட்டிப்பாக மீட்டெடுத்துள்ளார்.

ஜெகன்

பி.கேவின் வியூகம் மட்டுமில்லாது, ஜெகன் செய்த சில காரியங்களும் அவரை ஆந்திர மக்கள் மனதில் பதியவைத்தது. அதில்,  ‘ப்ரஜா சங்கல்ப பாதயாத்ரா’ என்ற பேரணி மிகவும் முக்கியமானது. 15 மாதங்கள் சுமார் 3000 கி.மீ வரை பயணம் செய்து, இரண்டரை கோடி மக்களை நேரில் சந்தித்தார். இதைத் தொடர்ந்து,  ‘ஜெகன் அண்ணா அழைக்கிறார்’  என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை அவர் முன்னெடுத்தார். அதன்மூலம், கிராம அளவில் செல்வாக்குப்பெற்ற 60,000 பேருக்கு தன் கைப்படக் கடிதம் எழுதி, அவர்கள்மூலம் அந்தந்த கிராமத்தின் நிலையை அறிந்துகொண்டு, அதைக்கொண்டு தன் தேர்தல் அறிக்கையை உருவாக்கினார். 

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும், பல பிரசாரம் மற்றும் பயணத்தின்மூலம் ஆந்திராவில் உள்ள நான்கு கோடியே என்பது லட்சம் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆதரவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டினார். ஜெகனுக்காக உருவாக்கப்பட்ட தேர்தல் பாட்டுகளும் ஆந்திராவில் செம்ம வைரலானது. இணையம் மூலமும் தன் செல்வாக்கைப் பலப்படுத்தினார் ஜெகன். இதற்கு அடுத்தபடியாக,  ‘உங்களை நம்பமாட்டோம் பாபு’   'பை-பை பாபு’ என்ற வாசகங்களுடன்கூடிய ஜெகனின் தேர்தல் பிரசாரமும் அவர் அங்கே முதல்வராவதற்கான அடித்தளத்தைப் பலப்படுத்தியது. இதே நேரத்தில், சந்திரபாபு நாயுடுவின் அரசு ஜெகன் மோகன் ரெட்டியின் தொண்டர்கள் மீது நடத்திய தாக்குதல், விசாகப்பட்டினத்தில் ஜெகன் கத்தியால் குத்தப்பட்டது, சந்திரபாபுவின் ஊழல் தொடர்பான பிரச்னை, கூட்டணி மாற்றம் போன்றவையும் ஜெகனுக்கே கைகொடுத்தது. 

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரசாரம்

இந்தத் தேர்தலுக்காக இந்திய அரசியல் நடவடிக்கை குழுவைச் சேர்ந்த 400 பேர், ஜெகனுக்கு ஆதரவாக அடிமட்ட அளவிலிருந்து வேலை செய்துள்ளனர். இவர்கள், அரசியல் சார்ந்த பல நடவடிக்கைகள், இணையம் மூலம் ஜெகனை பலப்படுத்துவது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்தனர். இவை அனைத்தையும் வெறும் இரண்டு வருடத்துக்குள் கச்சிதமாகச் செய்துமுடித்து, தற்போது ஆந்திராவின் 18-வது முதலமைச்சராக அரியாசனம் ஏறுகிறார், ஜெகன் மோகன் ரெட்டி.