சுதந்திர இந்தியாவில் ஓகேதான்; ஆனால் உலகளவில்..? - பெண் உறுப்பினர்களுக்காகக் காத்திருக்கும் நாடாளுமன்றம் | 78 women members of parliament will be part of the 17th Lok Sabha

வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (25/05/2019)

கடைசி தொடர்பு:14:56 (27/05/2019)

சுதந்திர இந்தியாவில் ஓகேதான்; ஆனால் உலகளவில்..? - பெண் உறுப்பினர்களுக்காகக் காத்திருக்கும் நாடாளுமன்றம்

நடந்து முடிந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் நிறைய புதிய விஷயங்களும் சாதனைகளும் நடைபெற்றுள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு தனிப் பெரும் கட்சியாகப் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை தேசிய கட்சிகள் நுழையாத சில மாநிலங்களிலும் பா.ஜ.க நுழைந்துள்ளது. அதே போன்று சில மாநிலக் கட்சிகளும் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த முறை போட்டியிட்ட பெண்களும் தனிப்பட்ட ஒரு சாதனையைப் படைத்துள்ளனர்.

நாடாளுமன்றம்

இந்தியா சுதந்திரம் பெற்று இந்த 72 வருடங்களில் முதல்முறையாகப் 78 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்பு இருந்ததைவிட தற்போது 14 சதவிகிதம் அதிகமான பெண்கள் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளனர். இருந்தாலும் 24 சதவிகிதம் கொண்ட உலக அளவையும் 18 சதவிகிதம் கொண்ட தெற்கு ஆசிய அளவையும்  இந்திய பெண்களால் முந்த முடியவில்லை என்பது சிறிய வருத்தம்தான்.

மக்களவை கூட்டம்

இவர்களில் அதிகமானவர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உ.பி-யில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலிருந்தும் 11 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே போன்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, இந்த முறைப் பெண்களுக்கு அதிக வாய்ப்பளித்துள்ளார். அங்கு உள்ள 42 தொகுதிகளில் 11 பெண்கள் எம்.பி-யாகத் தேர்வாகியுள்ளனர். மம்தா 41 சதவிகிதம் பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். 

இந்த மாநிலங்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஒடிஷா உள்ளது. அங்கு மாநில கட்சியாக உள்ள பிஜு ஜனதா தள கட்சி 33 சதவிகித பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. அந்த மாநிலத்திலிருந்து 7 பெண்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர். கேரளா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆண் வாக்காளர்கள் அதிகம். இந்த இரண்டு மாநிலங்களிலும் தலா ஒரு பெண் என இருவர் வெற்றி பெற்றுள்ளனர். கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்க பாண்டியன் ஆகிய மூவரும் தமிழகத்திலிருந்து நாடாளுமன்றம் செல்கின்றனர்.

தமிழக பெண் எம்.பிக்கள்

இந்தியா முழுவதும் காங்கிரஸும் பா.ஜ.க-வும் 12 சதவிகிதம் மட்டுமே பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. 10 சதவிகிதம் பெண்கள் சுயேச்சையாகத் தேர்தலைச் சந்தித்தனர். மேலும், ஐந்து திருநங்கைகளும் தேர்தல் களத்தில் இருந்தனர். அவர்களில் நான்கு பேர் சுயேச்சையாகவும் ஒருவர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் போட்டியிட்டார். 72 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தனை பெண்கள் நாடாளுமன்றம் நோக்கிச் செல்கின்றனர். இந்த முறையேனும் பெண்களுக்கான 33 சதவிகிதம் கிடைக்குமா எனப் பார்ப்போம்!