`நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு' - அத்வானி காலில் விழுந்து ஆசி வாங்கிய மோடி! | Narendra Modi elected as the leader of the BJP Parliamentary Party

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (25/05/2019)

கடைசி தொடர்பு:19:10 (25/05/2019)

`நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு' - அத்வானி காலில் விழுந்து ஆசி வாங்கிய மோடி!

நடந்து முடிந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் நிறைய புதிய விஷயங்களும் சாதனைகளும் நடைபெற்றுள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு தனிப் பெரும் கட்சியாகப் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை தேசிய கட்சிகள் நுழையாத சில மாநிலங்களிலும் பா.ஜ.க நுழைந்துள்ளது. அதே போன்று சில மாநிலக் கட்சிகளும் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் அதிகமாக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது.

மோடி

இந்நிலையில் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காகப் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மாலை துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்கப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தனர். அதேபோல் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் சோஷி உள்ளிட்டோருடன், தமிழக முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். 

அத்வானி

அப்போது, கூட்டத்தில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் முன்மொழிய அவர்களைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களும் முன்மொழிந்தனர். இதன்பின் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின் பேசிய மோடி, ``மக்கள் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. என்னை நம்பிய கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், மக்களும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் உங்களில் ஒருவன் தான். யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம்" எனப் பேசினார். 

முரளி மனோகர் சோஷி

முன்னதாக நாடாளுமன்ற குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார். கடந்தமுறை ஆட்சிக்கு வந்த பிறகு அத்வானியை மோடி புறக்கணிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்குச் சான்றாகவும் சில சம்பவங்கள் நடந்தன. திரிபுரா முதல்வர் பதவியேற்பு கூட்டம் உள்ளிட்ட பாஜக கூட்டங்களில் அத்வானி பங்கேற்ற போது அவரைக் கண்டுகொள்ளாமல் சென்றார் மோடி. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அத்வானி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில் இன்று அத்வானி காலில் விழுந்து மோடி ஆசி பெற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க