அதானி Vs கிராம மக்கள்... நில உரிமைக்காகப் போராடும் ஜார்க்கண்ட் கிராமங்கள்! | This village in Jharkand is losing its land and water rights for the sake of Adani

வெளியிடப்பட்ட நேரம்: 05:39 (26/05/2019)

கடைசி தொடர்பு:14:26 (26/05/2019)

அதானி Vs கிராம மக்கள்... நில உரிமைக்காகப் போராடும் ஜார்க்கண்ட் கிராமங்கள்!

தண்ணீர் பஞ்சம் அவர்களுடைய வாழ்வைப் பெரும் சோகமயமாக்கிவிட்டது. கிணற்று ஓரத்தில் வரிசைகட்டி நின்றிருக்கும் பெண்கள் கயிற்றில் தொங்கும் இரும்பு வாளி எப்போது தம் கைக்கு வரும் என்ற ஏக்கத்துடனே தினமும் காத்திருப்பார்கள்.

அதானி Vs கிராம மக்கள்...  நில உரிமைக்காகப் போராடும் ஜார்க்கண்ட் கிராமங்கள்!

மே மாதத்தின் கடுமையான வெயில் கொளுத்தும் ஒரு மதிய வேளை. அந்தப் பெண்கள் தங்கள் பானைகளைத் தூக்கிக்கொண்டு வரிசையாகச் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் முகங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தைப் பறைசாற்றுகின்றது. ஆம், வரிசையில் கடைசியாக நிற்கும் அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றம். ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள கோடா (Godda) என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது மோடியா (Motiya) என்ற கிராமம். ஒவ்வொரு நாளும் அந்தக் கிராமத்துப் பெண்கள் தங்கள் வீட்டுத் தேவைக்கு வேண்டிய தண்ணீரைத் தேடி இப்படித்தான் அலைந்துகொண்டிருக்கின்றனர். அந்த அலைச்சலுக்குக் காரணம் காலநிலை மாற்றமல்ல. கார்ப்பரேட் நிறுவனம் உண்டாக்கிய மாற்றம். அந்த நிறுவனம் அவர்களின் நீர் மற்றும் நில உரிமைகளைப் பறிக்க அரசாங்க உதவியோடு முயல்கின்றது.

கிணற்று ஓரத்தில் வரிசைகட்டி நின்றிருக்கும் பெண்கள் கயிற்றில் தொங்கும் இரும்பு வாளி எப்போது தம் கைக்கு வரும் என்ற ஏக்கத்துடனே தினமும் காத்திருப்பார்கள். நள்ளிரவு சமயங்களிலோ அல்லது இது மாதிரியான கொளுத்தும் மதிய வேளையிலோதான் தண்ணீர் பிடிப்பதற்கு வருவார்கள். ஏனென்றால் காலை நேரத்திலோ மாலை நேரத்திலோ வந்தால் மதியம் இருப்பதைவிட அதிகமாகக் கிணற்றடியில் கூட்டம் அலைமோதும். தண்ணீர் பஞ்சம் அவர்களுடைய வாழ்வைப் பெரும் சோகமயமாக்கிவிட்டது. இந்தத் தண்ணீர்கூட கிடைக்காமல் போனால்! 

தண்ணீர் பஞ்சம்

Photos Courtesy: News Laundry

அந்த கிராமத்துப் பெண்கள் தண்ணீர் தேடி அலையும் அதே பாதையில் டிராக்டர்களும் வரிசைகட்டிச் சென்றுகொண்டிருந்தன. மோடியா கிராமத்திலிருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் அதானி நிறுவனம் அமைத்துக் கொண்டிருக்கும் புதிய அனல் மின் நிலையத்தின் கட்டுமானத்திற்காக, டிராக்டர்களோடு அந்த மக்களின் மண்ணும் சென்றுகொண்டிருந்தது. மேற்கு வங்க எல்லைக்கு அருகிலுள்ள அந்தக் கிராமம் உட்படச் சுமார் பத்து கிராமங்களிலிருந்து விவசாய நிலங்களை அதானி நிறுவனம் ஆக்கிரமிக்க அனுமதி வாங்கியுள்ளது. 1600 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனுடைய, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் செயல்படப் போகிறது அந்த உற்பத்தி நிலையம். அது தான் உற்பத்தி செய்யப்போகும் மின்சாரத்தை பங்களாதேஷுக்கு விற்கப்போகின்றது. 

ஆரம்பகட்டமாக 2,120 ஏக்கர் நிலம் அந்த மக்களிடமிருந்து கையகப்படுத்திக் கொடுக்குமாறு 2017-ம் ஆண்டு அதானி நிறுவனம் தரப்பிலிருந்து கேட்கப்பட்டது. அந்தத் திட்டம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குமென்றும் அந்தப் பகுதியில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டுவருகிறதென்றும் கூறி நிலம் கையகப்படுத்துதல் மாநில அரசு தரப்பு நியாயப்படுத்தியது. ஆனால், அந்த நிறுவனம் கொண்டுவந்துள்ள ஒரேயொரு வேலைவாய்ப்பு அந்தப் பகுதியின் மணல் மாஃபியாக்களுக்கு மணல் விநியோக செய்ய ஒப்பந்தம் கொடுத்ததுதான். அனல்மின் நிலையத் திட்டம் வெற்றியடைந்தால் அது 840 குடும்பங்களைப் பாதிக்கும். இதற்காக டிசம்பர் 2016 மற்றும் மார்ச் 2017-ம் ஆண்டுகளில்  நடத்தப்பட்ட இரண்டு கட்ட மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்களும் நியாயமாக நடைபெறவில்லை. மக்கள் அங்கு வரக்கூடாதென்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள். அங்கு வந்திருந்த மக்கள் தங்கள் நில உரிமையைப் பறிக்கும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அதுவே வன்முறையில் முடித்துவைக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு மக்கள் வாக்கெடுப்பில் அவர்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். 

மணல் கொண்டுசெல்லும் டிராக்டர்கள்

அவர்களின் விவசாய நிலங்கள் புல்டோசர்களால் சீரழிக்கப்படுகின்றன. அவர்களுடைய நிலத்தைக் கொடுத்துவிடுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதை எதிர்த்து அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

தொடர்ச்சியாகக் கட்டுமானத் தேவைக்காக என்று கூறி விவசாய நிலங்களிலிருந்து மணல் எடுத்துக்கொண்டேயிருப்பதால் அங்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு அங்கிருக்கும் நீர்நிலைகளிலிருந்து நீர் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், அவர்கள் ஆற்றுநீரை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அதோடு அவர்களின் கட்டுமான பகுதியைத் தாண்டியும் பல இடங்களில் நிலத்தடி நீரையும் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இது அந்தப் பகுதியின் விவசாயத்தைப் பாதித்ததோடு தண்ணீர் பஞ்சத்தையும் உண்டாக்கியுள்ளது. அதானியின் அனல் மின் நிலையக் கட்டுமானம் தொடங்கியதிலிருந்து மோடியா மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள மற்ற கிராமங்களிலும் தண்ணீர் இருப்பு வேகமாகக் குறைந்துவருகிறது. 

அவர்களின் கிணறுகள் வற்றிக் கொண்டிருக்கின்றன. முப்பது அடியில் கிடைத்துக் கொண்டிருந்த தண்ணீர் இப்போது நாப்பத்தைந்து அடியில்தான் கிடைக்கின்றது. அந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அவர்கள் இப்படியே எடுத்துக் கொண்டிருந்தால் அந்த மக்கள் நீரே இல்லாத மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

நில உரிமை

விவசாயம் செய்யமுடியாமல் போனதால் அங்கு சில இளைஞர்கள் கைத்தொழில் செய்வதிலும் ஈடுபட்டனர். ஆனால், முன்பு அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த மின்சாரம் இப்போது கிடைப்பதில்லை. அது அவர்களைக் கைத்தொழில் வேலையிலும் ஈடுபடவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. அங்கு தற்போது முழுமையாக முப்பது நிமிடங்கள் மின்சாரம் தடைப்படாமல் இருப்பதே அபூர்வமாக இருக்கிறது. சில நாள்களில் மொத்த பொழுதுமே அவர்களுக்கு விநியோகிக்கப்படுவது வெறும் முப்பது நிமிடங்கள்தான். இந்த அனல் மின் நிலையம் வந்தால் அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் நான்கில் மூன்று பங்கு பங்களாதேஷுக்கு அனுப்பப்படும். நான்கில் ஒரு பங்கு, அதாவது 25 சதவிகிதம் அந்தக் கிராமங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தார்கள். அதை அவர்கள் செய்வார்களோ இல்லையோ, ஆனால் இப்போது அந்த மக்களின் மின்சாரத்தை அல்லவா சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நில உரிமைக்கு அல்லவா எமனாகிக் கொண்டிருக்கிறார்கள்.

"எங்கள் நிலத்தை நாங்கள் கொடுத்தாக வேண்டுமென்று இந்த அரசு முடிவு செய்துவிட்டது. இனி எதுவுமில்லாமல் நாங்கள் ஆதரவின்றி நிறுத்தப்படுவோம்" என்று வேதனைப்படுகிறார்கள் மோடியா கிராமத்து விவசாயிகள். 2017-ம் ஆண்டு அந்தக் கிராம மக்களுக்காகப் போராடிய அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பிரதீப் யாதவ் ஐந்து மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். கொலைக் குற்றவாளிக்குக்கூட மூன்றே மாதத்தில் ஜாமீன் கிடைத்துவிடும் ஊரில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஐந்து மாதம் சிறையிலிருந்திருக்கிறார். அதற்குக் காரணம் அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. அவர் மக்களின் பக்கம் நின்றிருக்கிறார். இந்த அரசின் நிலைப்பாடு, ஆக்கிரமிப்பு மனப்பான்மை, நில உரிமைகளைப் பறிக்கும் செயல்கள், இவர்கள் சொல்லும் பொருளாதார வளர்ச்சி என்று எதிலுமே அவர்களுக்கு உடன்பாடில்லை. கோடா மாவட்டத்து மக்கள் மத்திய அரசின்மீது மிகுந்த கோவத்தில் உள்ளனர். இந்த அரசு ஏழைகளுக்கானது இல்லையென்று அவர்கள் உரக்கக் கூறுகின்றனர். அதை எதிர்த்துப் போராடுகின்றனர். 

அனல்மின் நிலையம்

சில ஆண்டுகளாக நில உரிமைப் போராட்டங்களின் புகலிடமாக மாறிவருகிறது கோடா மாவட்டம். தற்போது அந்த மக்கள் பசுமைத் தீர்ப்பாயத்தையும் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். நிலம் கையகப்படுத்தத் தடை விதிக்கவேண்டியும் விவசாய நிலங்களை விவசாயிகளிடமே திருப்பிக் கொடுக்கவும் கோரி அந்தக் கிராம மக்கள் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளனர். 

அந்த மக்களை அரசு ஏமாற்றிவிட்டது. அதனால், அதானியின் அனல் மின் நிலையத் திட்டம் தொடர்பாகத் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயத்திற்காக அந்த மக்கள் நீதிமன்றங்களை நாடியுள்ளனர். இனி அவைதான் அவர்களுக்கான நீதியைக் கொடுக்கவேண்டும். அதானியா மக்களின் நில உரிமையா எது முதன்மையானது என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்