`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்?!' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக் வைக்கும் பா.ஜ.க | subramaninan sway tried to get central minister post

வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (26/05/2019)

கடைசி தொடர்பு:07:45 (27/05/2019)

`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்?!' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக் வைக்கும் பா.ஜ.க

பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமியை மையமாக வைத்து பல்வேறு பரபரப்பு செய்திகள் உலாவரத் துவங்கியுள்ளன. ஒன்று, அவர் மத்திய அமைச்சர் ஆவாரா என்பது. இரண்டாவது, அவரை வைத்தே தமிழகத்தில் சமீபத்திய தேர்தலில் ஜெயித்த 4 எம்.பி-க்களுக்கு அவர்கள் மீதான பழைய வழக்குகளில் தண்டனை வாங்கிக்கொடுப்பது என்று பிஸியாகியிருக்கிறார். மூன்றாவது விஷயம், தமிழகத்தில் பி.ஜே.பி. தோல்வியடைந்ததையடுத்து, மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிகிறது. காலியாகும் அந்த இடத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி முக்கிய ஆதரவாளரான சந்திரலேகாவை நியமிக்கப்போகிறார்கள் என்று ஒரு வதந்தி திடீரென பரவி அடங்கியது. 

சுப்பிரமணிய சாமி

சுப்பிரமணியன் சுவாமி நிதி அமைச்சர் ஆவாரா? 

சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, அப்போதைய மத்திய அரசில் வர்த்தகத்துறை அமைச்சராக ஒரு வருடம் பதவியில் இருந்த அனுபவம் சுவாமிக்கு உண்டு. இதுபோக பி.ஜே.பி.யின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், ராஜ்யசபா எம்.பி. பதவியிலும் இருக்கிறார். மேலும், பொருளாதார நிபுணரான அவர், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பாடத்தில் சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகிறார். இவருக்கும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் எப்போதும் ஆகாது. இருவரும் ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், அடுத்த சில நாள்களில் மத்தியில் மீண்டும் பி.ஜே.பி. அரசு பதவி ஏற்கிறது. அப்போது, யார் நிதி அமைச்சராகப் பதவி ஏற்பார் என்கிற பேச்சு பரபரப்பாகப் பேசப்படுகிறது. அருண் ஜெட்லிக்கு உடல்நிலை சரியில்லாததால், அந்தப் பதவியில் அவர் மீண்டும் அமரமாட்டார். அவருக்குப் பதில் பலரது பெயர் பரிசீலனையில் இருந்தாலும், சுவாமியின் பெயரும் முக்கியமாக இடம்பெற்றிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடியைப் பொறுத்தவரையில், சுவாமிக்கு நிதி அமைச்சர் பதவி கொடுத்தால், தனது கட்டுப்பாட்டில் இருக்கமாட்டார் என்றே கருதுகிறார். கடந்த 5 வருட காலத்தில் ஒரு முறைதான் பிரதமர் மோடியை நேரில் பார்த்து பேசியிருக்கிறார்.

எந்தப் பிரச்னை தொடர்பாகவும் அவரை இவர் சந்திக்கவில்லை. பொது இடங்களில் சந்தித்துக்கொள்வதோடு சரி. சுவாமியின் ஸ்டைலே.. அவரது பேச்சு, கருத்து சுதந்திரத்தில் யாரும் கட்டுப்படுத்தக்கூடாது என்று நினைப்பவர். சோனியா, ராகுல் உள்ளிட்ட பலரது மீது இவர் போட்டிருக்கும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்தத் தருணத்தில், அவரை எப்படி நிதி அமைச்சராக ஆக்குவது என்று யோசிக்கிறார் மோடி. எனவே, மீண்டும் வர்த்தகததுறையே தரலாமா என்று பி.ஜே.பி. தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடக்கிறது. 

ஸ்மிருதி இரானி வெற்றி ரகசியம் இதுதான்..!  

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்துப்போட்டியிட்ட ஸ்மிருதி  இரானி சுமார் 55,000 ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரின் வெற்றி ரகசியம் எது தெரியுமா? அதற்கும் காரணம் சுவாமிதான். எப்படி என்று கேட்கிறீர்களா?.

கடந்த முறை ராகுலிடம் தோற்றுப்போனார் ஸ்மிருதி  இரானி. இருந்தாலும், மத்திய அரசில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அமேதி தொகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ராகுல்காந்தியால் அந்தத் தொகுதி மக்களை அடிக்கடி சந்திக்கமுடியவில்லை. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஸ்மிருதி இரானி அடிக்கடி சந்தித்து மக்கள் பணிகளை தொய்வில்லாமல் செய்து வந்தார். கடைசி அஸ்திரமாக ஸ்மிருதி  இரானி எதைப் பயன்படுத்தினார் தெரியுமா? ராகுல் இரட்டைக் குடியுரிமை பெற்றவர். அவருக்கு லண்டனில் குடியுரிமை இருக்கிறது என்று சொல்லி அதற்கான ஆதாரத்தை சுவாமி வெளியிட்டார். அதற்கு இதுவரை ராகுல் தரப்பில் பதிலே சொல்லவில்லை என்பது வேறு விஷயம்.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இது ஒருபுறமிருக்க.. ஸ்மிருதி  இரானி தனது தேர்தல் பிரசாரத்தில் ராகுலின் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை மக்களிடம் கொண்டு சென்றார். சமூக வலைதளங்கள், நோட்டீஸ்கள், போஸ்டர்கள் மற்றும் மேடைகளில் உரக்கப் பேசினார். அவை அமேதி மக்களிடம் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. அதன் எதிரொலியாக, ஸ்மிருதி இரானியை ஜெயிக்கவைத்துவிட்டதாக பி.ஜே.பி-யினர் சந்தோஷமாகச் சொல்கிறார்கள். 

சுவாமியின் அதிரடியில் சிக்கியிருக்கும் தமிழக எம்.பி-க்கள் நால்வர்

3 தி.மு.கழக எம்.பி-க்கள், காங்கிரஸ் எம்.பி. ஒருவர்... ஆக நால்வரும் மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ.. இரண்டின் வளையத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக, காங்கிரஸ் எம்.பியான கார்த்தி சிதம்பரத்தின் மீது பல்வேறு விவகாரங்களில் போடப்பட்ட வழக்குகளைத் துரிதப்படுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர சுவாமி தற்போது தீவிரமாகியிருக்கிறார். இதுகுறித்து, சென்னையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமியின் ஆதரவு பிரமுகர் கூறும்போது, ``ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தவிர காங்கிரஸ் எம்.பியான கார்த்திக் சிதம்பரம், தி.மு.கழக எம்.பி-யான தயாநிதி மாறன் இருவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் தி.மு.க எம்.பி-யான ஆ.ராசா மற்றும் கனிமொழி இருவர் மீதும் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நால்வர் தொடர்பான விசாணையை நீதிமன்றத்தில் சட்டப்படி சுவாமி துரிதப்படுத்தப்போகிறார்" என்கிறார். 

ஏர்செல் - மேக்ஸிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான விவகாரத்தில் தனது அதிகாரத்தை மீறி அப்போதைய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அனுமதி கொடுத்தாகச் சொல்லி சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தை அணுகினார். சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு முதலீடு தொடர்பான சில ஆவணங்களை விசாரணை அதிகாரிகளிடம் அவர் அளித்தார். இந்த புகார்கள் தொடர்பாக, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விசாரித்தது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதே ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், அவரின் சகோதரர் கலாநிதிமாறன் இருவருக்கு எதிராக சி.பி.ஐ-யும், அமலாக்கப்பிரிவும் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் தயாநிதிமாறன் மீது குறி வைத்திருக்கிறார் சுவாமி. 

இதுஒருபுறமிருக்க, மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு, `2 ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு. இந்த வழக்கின் மூலகர்த்தாவே சுப்பிரமணியன் சுவாமிதான். இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கும், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் ஒரு வழக்கும் தொடுத்தன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அமலாக்கப்பிரிவும், சி.பி.ஐ-யும் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த வழக்குகளில் முடிவை எட்டுவதில் பிரதமர் மோடியும் ஆர்வம் காட்டிவருகிறாராம். இனி வரும் நாள்களில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது போலிருக்கிறது!