சுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி! | Smriti Irani lends a shoulder to close aide Surendra Singh’s mortal remains

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (26/05/2019)

கடைசி தொடர்பு:08:45 (27/05/2019)

சுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி!

அமேதி தொகுதி பிரசாரத்தில் தனக்கு உதவியாளராகச் செயல்பட்ட சுரேந்திர சிங் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கேட்டு, டெல்லியில் இருந்து அவசரமாக இன்று அமேதி திரும்பினார் ஸ்மிருதி இரானி. 

ஸ்மிருதி இரானி

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் களமிறங்கினர். கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்த ஸ்மிருதி இரானி, இந்தத் தேர்தலில் எப்படியும் வென்றுவிட வேண்டும் என பிரசார களத்தில் சுழன்றடித்தார். தேசிய அளவில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சூழலில், அமேதிக்குத் தனிக் கவனம் செலுத்த இயலவில்லை. இந்த நிலையில், ராகுல் காந்தியைவிட 55,000 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார். 

இந்த நிலையில், அமேதி தொகுதி பிரசாரக் களத்தில் ஸ்மிருதிக்கு உதவியாளராக இருந்து பல்வேறு பணிகளைச் செய்த பா.ஜ.க-வைச் சேர்ந்த சுரேந்திர சிங், மர்ம நபர்களால் நேற்று இரவு சுடப்பட்டார். போலீஸார் தகவலின்படி, அவரது இல்லத்துக்கு அருகில் நின்றிருந்த சுரேந்திர சிங்கை, மோட்டார் பைக்கில் வந்த அடையாளர் தெரியாத மர்ம நபர்கள் சுட்டதாகத் தெரிகிறது. இதில், படுகாயமடைந்த அவர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். 
இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்மிருதி இரானி, டெல்லியிலிருந்து அவசரமாக அமேதி திரும்பினார். சுரேந்திர சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஸ்மிருதி இரானி, அவரது உடலையும் சுமந்து சென்றார். மேலும், அவரைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுப்பேன் என உறவினர்களுக்கு ஸ்மிருதி உறுதியளித்திருக்கிறார்.

சுரேந்திர சிங்குடன் ஸ்மிருதி இரானி (பழைய படம்)

சம்பவம் பேசிய சுரேந்திர சிங்கின் மகன், `ஸ்மிருதி இரானியின் வெற்றிக்காக பாடுபட்டவர்களில் முக்கியமானவர் எனது தந்தை. வெற்றிக்குப் பின்னர் வெற்றி யாத்திரை நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அது இங்குள்ள காங்கிரஸார் சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், என் தந்தையை அவர்கள் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்'' என்று குற்றம்சாட்டியிருக்கிறார். `சுரேந்திர சிங்கின் பழைய எதிரிகள் அவரை சுட்டுக்கொன்றதாக  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதேநேரம், அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்' என உத்தரப்பிரதேச மாநில டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் சிங் கூறியிருக்கிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள உ.பி. போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். 

ஸ்மிருதி இரானி

Photo Credit: ANI

பரௌலி கிராமத்தின் முன்னாள் தலைவரான சுரேந்திர சிங், பா.ஜ.க-வின் தேர்தல் பிரசாரத்துக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர், ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாகத் தேர்தல் பணியாற்றியிருக்கிறார். தன் குழந்தைகளின் கல்விச் செலவை ஸ்மிருதி ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்திருப்பதாக சுரேந்திரசிங்கின் மனைவி ருக்மணி சிங் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய ஸ்மிருதி இரானி, ``மறைந்த சுரேந்திர சிங்கின் குடும்பத்தினர் முன் நான் உறுதி எடுத்திருக்கிறேன். அவரைச் சுட்டுக்கொன்றவர்கள் மற்றும் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தவர்கள் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் சென்றாவது மரண தண்டனை வாங்கிக் கொடுப்பேன் என்று. நாங்கள் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுவோம்'' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.