``அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால்..!” - பெண் மருத்துவரின் தற்கொலையால் கலங்கும் பழங்குடியின குடும்பம் #justiceforpayal | Dr. payal suicide because of issues she faced in the name of caste

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (27/05/2019)

கடைசி தொடர்பு:12:36 (28/05/2019)

``அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால்..!” - பெண் மருத்துவரின் தற்கொலையால் கலங்கும் பழங்குடியின குடும்பம் #justiceforpayal

தற்போதைய  `புதிய’ இந்தியாவில் சாதிக் கொடுமைகள் இல்லை என நீங்கள் நம்புவீர்கள் என்றால் நீங்கள் இந்தியா குறித்து எதுவும் அறியாமல் இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். தேர்தல் முடிவுகள் வெளியான சத்தத்தில், சத்தமே இல்லாமல் கடந்து போனது ஒரு பழங்குடியின பெண் மருத்துவரின் தற்கொலை. இதைக் கொலை என்றுதான் பதிவு செய்திருக்க வேண்டும் என்கின்றனர் அப்பெண்ணுக்காக நீதி கேட்டுப் போராடும் உறவுகள். 

பெண் மருத்துவர் பயல் சல்மான்

என்ன நடந்தது?

மும்பையில் உள்ள பி.ஒய்.எல் நாயர் மருத்துவமனையில் கடந்த 22 -ம் தேதி பெண் மருத்துவர் பயல் சல்மான் தத்வி என்பவர் மருத்துவமனை விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலைக்குப் பின்னர் மூன்று சீனியர் பெண் மருத்துவர்கள் உள்ளனர். ஆம், பயல் பழங்குடியின பெண் மருத்துவர். அவர் குடும்பத்தின் முதல் மருத்துவர். இளங்கலை பட்டம் பெற்ற அவர், முதுகலைப் பட்டம் பெற மும்பையில் தங்கி படித்து வந்தார். அப்போதுதான் அவருக்கு அந்தக் கொடுமை நடந்தது. 

பயல் சல்மான்

இடஒதுக்கீடு மூலம் படிக்க வாய்ப்பு கிடைத்த பயல் தத்விக்கு முதல் 6 மாதம் நன்றாகத்தான் சென்றது என்கிறார் அவரின் தந்தை. இது தொடர்பாக பேசிய அவர்,  ``பயல் அங்கு சேர்ந்த முதல் 6 மாதங்களில் பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. சில சிக்கல்கள் இருந்தாலும் பெரிதாக எதுவும் இல்லை. ஆனால், அதன்பின்னர் சாதியின் பெயரால் அவர் கேவலப்படுத்தப்படுவதாகவும் இடஒதுக்கீடு மூலம் வந்ததாகக் கேவலமாக திட்டுவதாகவும் எங்களிடம் கூறி வந்தார். இதை உடனடியாக பயலின் கணவர் சல்மான் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் இதெல்லாம் மருத்துவக் கல்லூரியில் இருப்பதுதான். இதைக் கடந்து வரவேண்டும் என்று நம்பிக்கை அளித்தார். ஆனாலும் இந்தத் கொடுமை நிற்கவே இல்லை” என்றார்.

பயல் சாதி ரீதியாக தொல்லை அளித்த சீனியர் மருத்துவர்கள், ஹேமா அஹுஜா, பக்தி மேஹர் மற்றும் அன்கிதா ஆகியோர் ஆவர்.

பயல் சல்மானின் தாய் 

மகளை இழந்த தாய், இது தொடர்பாக முன்னதாகவே புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார். கேன்சர் நோயுடன் போராடும் பயல் சல்மானின் தாய் அபேதா,  ``என் மகள் என்னுடன் பேசும்போதெல்லாம், அந்த மூன்று பெண் மருத்துவர்கள் குறித்து சொல்லிக்கொண்டே இருப்பார். அவர்கள் அளிக்கும் தொல்லையைப் பொறுக்கமுடியவில்லை என்பார். சாதியின் பெயரால் அவர் மிகவும் துன்புறுத்தப்பட்டார். இது தொடர்பாக ஏற்கெனவே புகார் அளித்தோம். ஆனால், அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் எச்சரிக்கையுடன் அந்த மூவரையும் அனுப்பி விட்டனர். ஆனால், அதன் பின்னரும் சீண்டல்கள் தொடர்ந்தது. இது தொடர்பாக நாங்கள் புகார் அளிக்க வந்தபோது கல்லூரி டீனை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அவர் பிரிவு பேராசிரியரைத்தான் பார்க்க முடிந்தது. மீண்டும் புகார் அளிக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்குள் இப்படி ஆகிவிட்டது. அன்று உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் என் மகளுக்கு இப்படி நடந்திருக்காது. அவளின் மரணத்துக்கு நீதி வேண்டும்” என்றார். 

பயல்

ஆனால், இது தொடர்பாக பேசிய டீன் ரமேஷ், ``டாக்டர் பயல் சல்மானின் தாய் சொல்வதுபோல் எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. குறிப்பிட்ட துறை மாணவர்களிடம் நான் பேசினேன். அவர்கள் யாரும் இது குறித்து தெரிந்திருக்கவில்லை. எனினும் ராகிங் தடுப்பு பிரிவு மூலம் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார். 

இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் மீதும் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.  மூத்த போலீஸ் அதிகாரி தீபக் கூறுகையில், ``குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். அவர்கள் மூவரும் தற்போது மகாராஷ்டிராவில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

JusticeForPayal

இதனிடையே பயல் சல்மானின் மரணத்துக்கு நீதி வேண்டும் என முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பக்கங்கள் தொடங்கப்பட்டு அவருக்காகக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. சாதியக் கொடுமைகளுக்கான குரல்கள் இன்னும் சத்தமாகவே ஒலிக்கட்டும்...