`பா.ஜ.க 250 இடங்களில் வென்றிருந்தால்..!’ - ஜெகன் மோகன் ரெட்டி போட்ட கணக்கு | "Had BJP Got 250": Jagan Reddy On Special Status After Meeting With PM

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (27/05/2019)

கடைசி தொடர்பு:15:28 (27/05/2019)

`பா.ஜ.க 250 இடங்களில் வென்றிருந்தால்..!’ - ஜெகன் மோகன் ரெட்டி போட்ட கணக்கு

 

ஜெகன்மோகன் ரெட்டி

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் மற்ற மாநிலங்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது ஆந்திராவின் தேர்தல்தான். அங்கே வென்றிருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி பற்றிதான். பத்தாண்டுகளுக்குப் பிறகு இழந்த செல்வாக்கை அவர் மீட்டிருப்பதாகவும் ஊடகங்கள் பேசத் தொடங்கியுள்ளன. விரைவில் ஆந்திராவின் முதல்வராக பதவி ஏற்க உள்ள அவர், நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது, மாநிலத்தின் நிதிப்பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டது.

ரெட்டி

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நான் நாட்டின் நம்பர் ஒன் மற்றும் நம்பர் 2 நபர்களை சந்தித்துப் பேசினேன். அவர்கள் ஆந்திராவுக்கு உதவுவதாக உறுதியளித்தனர். மத்தியில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கக் கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அப்போதுதான் அவர்களிடம் ஆந்திரா மாநிலத்துக்கான அந்தஸ்தை டிமாண்ட் செய்து பெற முடியும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இருந்தபோதிலும் சிறப்பு அந்தஸ்து பெறும் வரை நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக்கொண்டிருப்போம். ஒருவேளை பா.ஜ.க அரசாங்கம் நாடு முழுவதும் 250 இடங்களை வென்றிருந்தால், நாங்கள் அவர்களை இந்த அளவுக்கு சார்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இப்போது அவர்களுக்கு நாங்கள் தேவையில்லை. எங்களால் முடிந்ததை நாங்கள் கண்டிப்பாகச் செய்வோம். மேலும், மோடியிடம் எங்கள் நிலைமையை விளக்கியுள்ளோம்.

மோடி

ஒரு விஷயத்தைப்பற்றி இங்கே நான் குறிப்பிட வேண்டும். நான் சந்திரபாபு நாயுடுக்கு எதிரானவன் அல்ல. என்னுடைய அரசாங்கம் புரட்சிகரமான அரசாங்கமாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். ஆறு மாதம் அல்லது ஒருவருடத்தில் ஆந்திர அரசாங்கம் நாட்டுக்கே முன்மாதிரியாக விளங்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு நரேந்திர மோடி ட்விட்டரில், ``ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டியுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. ஆந்திராவின் வளர்ச்சி குறித்து விவாதித்தோம். மத்திய அரசிடமிருந்து முடிந்த அளவு ஒப்புதல் அளிக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பா.ஜ.க அரசாங்கம், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுத்து வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு பலமுறை கோரிக்கைவைத்தார். அந்தக் கோரிக்கை நிறைவேறாதது, மத்திய அரசுக்கும், ஆந்திரா அரசுக்கும் இடையே கசப்பை ஏற்படுத்தியது. இதன் நீட்சியாக பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறினார் சந்திரபாபு நாயுடு.