`பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா; மன்னித்துவிடுங்கள்' - கோ ஏர் நிறுவனத்தை சுற்றும் பயிற்சி ஊழியர் தற்கொலை சர்ச்சை! | private airline staff commits suicide

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (31/05/2019)

கடைசி தொடர்பு:21:00 (31/05/2019)

`பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா; மன்னித்துவிடுங்கள்' - கோ ஏர் நிறுவனத்தை சுற்றும் பயிற்சி ஊழியர் தற்கொலை சர்ச்சை!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் செயல்படும் தனியார் நிறுவனமான கோ ஏர் விமான சேவையில் பயிற்சி ஊழியராகப் பணியாற்றி  யுள்ளார், 19 வயதான மந்தன் மகேந்திர சாவன். இவர் நாக்பூர், அஜ்னி நகரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

தற்கொலை

தற்கொலை பற்றிப் பேசிய அஜ்னி காவல் துறையினர், “ சாவன் தன் வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று பிற்பகல் 2:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தகவல் அறிந்து நாங்கள் வந்து பார்த்தபோது, அவர் உயிரற்ற நிலையில் வெண்டிலேட்டரில் தொங்கியபடி இருந்தார். அந்த சாவனின் வீட்டில், தற்கொலை தொடர்பான எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. ஆனால், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள்’ என்ற ஒரு துண்டுச்சீட்டு மட்டுமே அங்கு கிடந்தது”  என்று தெரிவித்துள்ளனர். 

இறப்பு

மகனின் தற்கொலை பற்றிப் பேசிய சாவனின் தந்தை, “ சமீபத்தில் என் மகன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அதனால் இரண்டு வாரங்கள் விடுப்பு எடுக்கும்படியான நிலை ஏற்பட்டது. அப்போதும் அவனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மேலும் விடுப்பு எடுக்க அவனது அலுவலகத்தில் கேட்டுள்ளான். அவர்கள் விடுப்பு அளிக்க மறுத்துள்ளனர். உடல்நிலை பற்றிய அனைத்து காரணங்களைக் கேட்ட பின்னும் அவர்கள் விடுப்பு வழங்கவில்லை. மேலும், பணியில் இருந்து நீக்கிவிடுவோம் என்று அவனை மிரட்டியுள்ளனர். இதில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாகவே சாவன் தற்கொலை செய்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஆனால், கோ ஏர் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “ சாவன் எங்கள் நிறுவனத்தில் கடந்த ஒன்பது மாதங்களாகப் பயிற்சி ஊழியராகத்தான் பணியாற்றிவருகிறார். அவரது இறப்புக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். கடந்த இரண்டு வாரங்களாக சாவன் வேலைக்கு வரவில்லை. நிறுவனத்திலிருந்து அவருக்குச் சேரவேண்டிய  பணம் விரைவில் அனுப்பப்படும். சாவன் தற்கொலை தொடர்பாக எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கு அனைவரும் ஒத்துழைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.