பி.ஜே.பி-யோ, காங்கிரஸோ யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் `மினிஸ்டர்' - அதிரடி காட்டும் ராம்விலாஸ் பஸ்வான்! | Story about ram vilas baswan's political journey

வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (31/05/2019)

கடைசி தொடர்பு:20:43 (31/05/2019)

பி.ஜே.பி-யோ, காங்கிரஸோ யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் `மினிஸ்டர்' - அதிரடி காட்டும் ராம்விலாஸ் பஸ்வான்!

வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங் மற்றும் மோடி என ஆறு பிரதமர்களுடன் பணியாற்றியவர், ராம் விலாஸ் பஸ்வான்.  எட்டு முறை மக்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த முறை நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவரின் அரசியல் பயணம் பிரமிக்கத்தக்கது. யார் வெற்றிபெறுவார் எனச் சரியாகக் கணித்து, அவர்களுடன் கூட்டணி வைப்பது இவரின் தனிச்சிறப்பு.  

ராம்விலாஸ்

பீகார் மாநிலம், ககாரியா மாவட்டத்தில் உள்ள சஹார்பானி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர், ராம்விலாஸ் பஸ்வான். முதன்முதலாக, சம்யுக்த சோசலிசக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, 1969-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1974- ம் ஆண்டில், லோகதளம் கட்சி உருவானபோது, அதில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்த்து 15 மாதங்கள் சிறை சென்றார். வெளியில் வந்தவுடன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான ஜனதா தளம் சார்பில், ஹாஜிப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட 4.24 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். உலகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். அதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியிலிருந்து 1980, 1984, 1989, 1996 மற்றும் 1998 ஆகிய ஐந்து பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.  2000 - ம் ஆண்டில் ஜனதா தளத்திலிருந்து விலகி, லோக் ஜனசக்தி என்கிற கட்சியைத் தொடங்கினார். 

அதைத் தொடர்ந்து, நடந்த 2004 மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். தன் 33 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், முதன்முறையாக 2009- ம் ஆண்டு ஹாஜீப்பூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார் ராம்விலாஸ் பஸ்வான். ஆனால், 2010-ல் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து,       2014 -ம்  ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். 

புதிய அமைச்சரவை

பாராளுமன்ற  உறுப்பினராக மட்டுமல்லாமல், மத்திய அமைச்சராகவும் சாதித்தவர் ராம் விலாஸ் பஸ்வான். முதன்முதலில் வி.பி சிங் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். தொடர்ந்து 1996 -ம் ஆண்டு, தேவகவுடா தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சரானார். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சுரங்கத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில், ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர். மோடி தலைமையிலான அமைச்சரவையில் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். தற்போதைய புதிய அமைச்சரவையிலும் அவருக்கு அதே துறை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க