`கங்கையின் நீர் குடிக்கவோ, குளிக்கவோ ஏற்றதல்ல' - எச்சரிக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் | Pollution Control Board warning Ganga River water not suitable for drinking and bathing

வெளியிடப்பட்ட நேரம்: 07:22 (01/06/2019)

கடைசி தொடர்பு:07:29 (01/06/2019)

`கங்கையின் நீர் குடிக்கவோ, குளிக்கவோ ஏற்றதல்ல' - எச்சரிக்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

கங்கை

நாட்டின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றான கங்கை தொடர்ந்து கழிவுகள் கலப்பதால் மாசடைந்து காணப்படுகிறது. அதைச் சுத்தப்படுத்தப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் ஆறு பாயும் பெரும்பாலான பகுதிகளில் உள்ள நீரானது குடிக்கவோ, குளிக்கவோ ஏற்றதாக இருக்காது என்று எச்சரித்திருக்கிறது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். ஆற்று நீரில் கோலிஃபார்ம் என்ற பாக்டீரியா அதிக அளவில் காணப்படுவதுதான் அதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசுபாடு

கங்கை ஆறு முழுக்க பல இடங்களில் மாசுபாட்டின் அளவைக் கண்டறியும் வகையில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 86 இடங்களில் 7 இடங்களில் உள்ள நீர் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் குடிக்க ஏற்றதாக இருக்கிறது. மற்றபடி 78 இடங்களில் உள்ள நீர் எந்த விதத்திலும் நேரடியாகப் பயன்படுத்த ஏற்றதாக இருக்காது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ``கங்கை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள 1100 தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலந்து வந்தன. ஆனால், இப்போது அது முழுமையாகத் தடுக்கப்பட்டு விட்டது. சாக்கடை கழிவுநீர்தான் இப்போது இருக்கும் பெரிய சவாலாக இருக்கிறது. இப்போது இருக்கும் நிலைமை மகிழ்ச்சியளிக்காத ஒன்றுதான். கங்கையைச் சுத்தப்படுத்தும் பணிகள் தொடரும்" எனச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் சி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.