`பேரு ஞாபகம் இருக்கில்ல... கல்யாண், பவன் கல்யாண்’! | A story about Pawan Kalyan

வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (02/06/2019)

கடைசி தொடர்பு:17:07 (02/06/2019)

`பேரு ஞாபகம் இருக்கில்ல... கல்யாண், பவன் கல்யாண்’!

`பேரு ஞாபகம் இருக்கில்ல... கல்யாண், பவன் கல்யாண்’!

நடிகர் பவன் கல்யாண், நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மிகமோசமாகத் தோற்றிருக்கிறார். வெறும் ஆறு சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது, அவரின் ஜனசேனா கட்சி. `பவன் இனி அவ்வளவுதான்’ என்று, முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள், அவருடைய எதிர்ப்பாளர்கள். அதேநேரம், `தோல்விகள் எனக்குப் புதிதல்ல. நான் களம் நிற்பேன்’ என்று அறிவித்திருக்கிறார், பவன். அவர் நிற்கட்டும் அல்லது விலகட்டும், அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், அந்த `தோல்விகள் எனக்குப் புதிதல்ல’ என்ற வார்த்தை, இரண்டு நாள்களாக இம்சிக்கிறது. இனியும் எழுதாவிட்டால், தலையே வெடித்துவிடும். ஏனென்றால், திரைத்துறையில் அவர் விதியால் வீழ்த்தப்படும் அனைவருக்குமான உந்துசக்தி!

பவன்

 ஆரம்பிப்போம்...

பவன் வயதில் என்னவோ விஜய். ஆனால், புகழில் ரஜினி. தென்னிந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய வசூல் மன்னர்களில் பவனுக்குத் தனியிடம் உண்டு. கப்பார் சிங்கின் வசூல் சாதனையை முறியடிக்க மூன்று வருடங்களுக்கு மேலானது. அதுவும், அதிக தியேட்டர்களைக் கொண்டு ஆரோக்கியமாக இருக்கும் அக்கட தேசத்திலேயே! சுருக்கமாக பவனின் சினிமாக்களை இப்படிச் சொல்லலாம். `ஓஹோ' லெவல் பட்ஜெட்டை வைத்து பாகுபலி அள்ளுவதை, பவன் `ஓ.கே' லெவல் பட்ஜெட்டை வைத்தே அள்ளுவார்.

ஆந்திராவில் பவன்தான் இப்போது சூப்பர் ஸ்டார். ஆனால், அவருடைய பட்டம் `பவர் ஸ்டார்'. `சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வைத்திருப்பவர் மகேஷ்பாபு. அவரது அப்பா கிருஷ்ணா, `சூப்பர் ஸ்டார்' போட்டுக்கொண்டார். அப்படியே அடுத்த தலைமுறையில் மகேஷூம் போட்டுக்கொண்டார். அடுத்த `சூப்பர் ஸ்டார்' மகேஷின் மகன் கெளதம். அது அப்படியே போகும். இதைவிட பயங்கரம் எது தெரியுமா... ராம் சரணின் பட்டமான `மெகா பவர் ஸ்டார்தான்'. அப்பா சிரஞ்சீவியிடமிருந்து `மெகா'வையும் , சித்தப்பா பவனிடமிருந்து `பவரை'யும் எடுத்து `மெகா பவர் ஸ்டார்' ஆக்கிக் கொண்டார். ஜூனியர் என்.டி.ஆர் ஒருபடி மேலேபோய் தாத்தாவின் `என்.டி.ஆர்' பெயரையே போட்டுக்கொண்டார். எல்லோரும் பொதுவாக அழைப்பது `ஜூனியர் என்.டி/ஆர்' என்றுதான். ஆனால், உண்மையில் அவர் `என்.டி.ஆர்'! அப்படித்தான் படங்களிலேயே வரும்.

பவன்

மகேஷின் ரசிகர்களுக்கு மகேஷ்தான் `சூப்பர் ஸ்டார்'! ஆனால், பொதுவான மக்களுக்குப் பவன்தான் `மக்கள் சூப்பர் ஸ்டார்'! ஆந்திர சினிமாவை அப்போது என்.டி.ஆர் ஆண்டார். அடுத்துவந்தார் சிரஞ்சீவி. இதோ இப்போது... பவன் கல்யாண்! அவர்கள் இருவரையுமே எல்லாவிதத்திலும் தாண்டி நிற்கிறார்! ஆனால், பவன் எப்போதுமே `தானே எல்லாம்' என்று சொன்னதில்லை. உண்மையில், பவனுக்கும் `மெகா' குடும்பத்துக்கும் ஆகவே ஆகாது. சிரஞ்சீவியின் குடும்பம்தான் ஆந்திராவில் `மெகா' குடும்பம். பவனும் `மெகா' குடும்பத்திலிருந்து வந்தவர்தான். ஆனால், அதில் சேராதவர். விலகியே இருப்பவர். அதனால்தான், `மெகா' குடும்பத்தின் எந்தவிழாவாக இருந்தாலும், `பவர் ஸ்டாரின்' பெயர் பயங்கரமாக ஒலிக்கும். பவன் பெயரை உச்சரிக்காமல் விழாவை முடிக்கவே முடியாது. அந்தளவுக்குக் கட்டளையிடும் பவனின் படை. அல்லு அர்ஜூனையெல்லாம் கதறவிட்டார்கள் ஒருதரம். அண்ணன் நாகபாபுவே மேடையில் கதறிப்பார்த்தார். வேலைக்கே ஆகவில்லை. சொல்லியே ஆகவேண்டும் பவனின் பெயரை! சொல்லித்தான் முடிக்கவும் செய்வார்கள். 

ஆந்திராவில் அங்கிங்கெனாதபடி, நீக்கமற நிறைந்திருக்கும் பவனின் படை. `மெகா' குடும்பம் என்றில்லை. எந்தக் குடும்பத்தின் விழாவாக இருந்தாலும் அங்கே ஒலிக்கும் `பவன்... பவன்...' எனும் முழக்கம். நாமெல்லாம் பெரிதாகப் பேசும் `பாகுபலி புகழ்' பிரபாஸையே கதற விட்டிருக்கிறார்கள். உண்மை தெரியுமா?! பாகுபலி படத்தின் இன்டர்வெல் பிளாக்குக்கு இன்ஸ்பிரேஷனே பவன் கல்யாண்தான்! அரங்கில் யாருக்கோ, பட்டாபிஷேகம் நடக்க, அரங்கிலேயே இல்லாத பவனின் பெயர்தான் அதிகமாக ஒலிக்கும். விருதுவிழா, ஆடியோ விழா, அறிவிப்பு விழா, வெற்றிவிழா... இப்படி எந்த விழாவாக இருந்தாலும் கூட்டத்தினர் எழுப்புவர் `பவனின்' பெயரை. அதுதான் `பவன் பவர்'! இந்தச் சம்பவங்களே, பாகுபலி படத்தில் நாம் பார்த்த இன்டர்வெல் சீக்குவன்ஸ். இதைச் சொல்லியது பாகுபலி படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத். ராஜமெளலியின் தந்தை. அவ்வளவு ஏன்? பாகுபலி விழாவிலேயே எழுந்தது பவனின் பெயர். ராஜமெளலி கண்களை விரித்து சிரித்துக் கொண்டிருந்தார் அப்போது.

பவன்

`இதெல்லாம் சரியில்லை' என்று சொல்லிப் பார்த்தார்கள். அதட்டிப் பார்த்தார்கள். அப்புறம் கெஞ்சியும் பார்த்தார்கள். அல்லு அர்ஜூனெல்லாம் அரைமணிநேரம் ஸ்பீச் கொடுத்துப் பார்த்தார். விடுவார்களா?! அல்லுவின் அடுத்த படத்தின் டீசர் வெளியானபோது தீயாய் வேலை பார்த்தார்கள். லைக்ஸ் நாற்பதாயிரம். டிஸ்லைக்ஸ் நாலு லட்சம். காரணமில்லாமல் இல்லை. அல்லு கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டார். கெட்டவார்த்தை அர்ச்சனைகள் அதிகமில்லாமல், வெயிட்டான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அப்புறம் அல்லு அர்ஜூன் இறங்கிவந்து விளக்கம் கொடுத்தார். அமைதியானார்கள். இதையெல்லாம் அவர்களால் தடுக்கவே முடியாது. ஏன் தெரியுமா? பவனுக்கு ரசிகர்களுக்குச் சமமாக ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். பொதுவானவர்களில் அதிகம்பேர் பவனின் ஆதரவாளர்கள்.

மகேஷ்பாபு ரசிகனுக்குள் ஒரு `பவன் ரசிகன்' இருப்பான். பிரபாஸ் ரசிகனுக்குள் ஒரு `பவன் ரசிகன்' இருப்பான். அதனால்தான், அதையெல்லாம் தடுக்கவே முடிவதில்லை. நாகர்ஜூனா, சிரஞ்சீவி போன்ற சீனியர்களின் விழாவிலேயே அதுதான் நிலைமை. சிரஞ்சீவி கையெடுத்தெல்லாம் கும்பிட்டிருக்கிறார். ஆனால், முடியாது! சந்தேகமே வேண்டாம்... பவன்தான் உண்மையான `பாகுபலி'! இன்னும் சந்தேகமா? நம்மூர் விஜய், ஆந்திரா போனாலும் இதைத்தான் சொல்வார், `நானொரு பவன் ரசிகன்'! தனுஷ் போனாலும் அதைத்தான் சொல்வார், `நானொரு பவன் ரசிகன்'! ரஜினியே போனாலும் அதையேதான் மாத்திச் சொல்வார், `எனக்கு பவனைப் பிடிக்கும்' என்று.

பவன்

ஏன் பவனுக்கு இப்படியொரு மதிப்பு? எல்லா ஹீரோக்களும் ஒரு ரகம் என்றால், பவன் வேறொரு ரகம். ஒருமுறை ஒரு பேட்டியில் கேட்டார்கள்... 'ஆந்திர சினிமாவில் குடும்ப ஆதிக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?'. பவனின் பதில் இது... `இங்கே யாரும் வரலாம். எவரும் வரலாம். திறமையிருந்தால் ஜெயிக்கலாம். என்னைப் பொறுத்தவரை, வருசத்தில் ஒருநாள் மட்டும்தான் என்னுடைய நாள். மீதியிருக்கும் நாளெல்லாம் எல்லோருக்குமானது'. அதோடு நிற்கவில்லை. அறிவிக்கவும் செய்தார். `ஆம், நான் தீவிர அரசியலில் இறங்கப் போகிறேன். இறங்கிவிட்டால் படங்களில் நடிக்கமுடியாதென்றே நினைக்கிறேன். அரசியலில் இறங்குவதால் இம்முடிவல்ல. உண்மையில் எனக்கு வயதாகிவிட்டது. இன்னும் எத்தனை நாள்களுக்கு ஆடவும், ஓடவும் முடியுமெனத் தெரியவில்லை. அப்படி முடியாதபட்சத்தில் விலகுவதே சரியாக இருக்கும். ஆனாலும், நான் படங்கள் தயாரிப்பேன். என்னுடைய வாழ்வாதாரமே அதுதான். எனக்கும் உதவியாளர்களுக்குச்  சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. கடன் இருக்கிறது. ஆனால், புதிய முகங்களை அறிமுகப்படுத்த முயல்வேன். இளந்திறமைகளுக்கே முன்னுரிமை. அவர்களே அடுத்து வரும் காலத்தை ஆளப்போகிறார்கள். பெரிய நடிகர்களை வைத்துப் படம் தயாரிப்பது எனக்கு ஒத்துவராது' என்றார்.

பவன் எப்போதுமே மற்ற மாஸ் ஹீரோக்களைப் போல அல்ல. நினைவு தெரிந்து, மாவோயிஸ்டாக நடித்த மாஸ் ஹீரோ அவராகத்தான் இருப்பார். ஒரு ஜனரஞ்சக கமர்சியல் படத்தில் மாவோயிஸ்டாக எந்த மாஸ் ஹீரோ நடிப்பார்?! அதுவும் மறைமுகமாக அல்ல. சொல்லிவிட்டே நடித்தார். அந்தப் பக்கத்தின் நியாயத்தையும் கொஞ்சம் பேசியிருப்பார். பவன் அடிப்படையில் கம்யூனிசம், சோசலிஸம் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டவர். `இஸம்' என்றொரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அவர் கட்சியின் கொள்கை விளக்கப் புத்தகமாக வந்தது அது. எதையும் சிறப்பாகச் செய்கிறாரோ, இல்லையோ, செய்வதற்கு முயல்வார். அதனாலேயே ஏதோ ஒருவிதத்தில் ஈர்ப்பவராக இருக்கிறார். 

பவன்

சொல்லித் தெரிய வேண்டியதில்லை... பவன் சிரஞ்சீவியின் தம்பி! சிரஞ்சீவிக்கு மொத்தம் இரண்டு தம்பிகள். ஒருவர் நாகேந்திர பாபு. இவர் அவ்வப்போது கேரக்டர் ரோலில் திரையில் தோன்றுகிறவர். தமிழில் வெளியான `விழித்திரு' படத்தில், ஒரு மெயின் கேரக்டர் பண்ணியிருந்தார். அண்ணனையும் தம்பியையும் போல பெரிய அளவில் வர முடியாதவர், இவர். ஆக தெரிந்திருக்கும்...  இக்கட்டுரையின் நாயகன் கடைக்குட்டி! நிஜப்பெயர் கல்யாண் பாபு. சினிமாவுக்காக `பவன் கல்யாண்' ஆனார்.

உண்மையைச் சொன்னால், தம்பி பவனுக்கு சினிமா அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அண்ணன் சிரஞ்சீவிதான். `அக்கட அம்மாயி இக்கட அப்பாயி' மூலம் பவன் அறிமுகமானார். ஆனால், அடித்தளம் மட்டுமே சிரஞ்சீவி அமைத்துக் கொடுத்தார். அடுத்தடுத்த தளங்களில் பவனே அமர்ந்தார். தனக்கான களத்தை தானே அமைத்தார். அப்போதிருந்த இளம் ஹீரோக்களில் இல்லாத ஏதோ ஒன்று பவனிடம் இருந்தது. இளைஞர்கள் கொண்டாடினார்கள். இப்போதிருக்கும் ஹீரோக்களில் இல்லாத பல திறமைகளும் பவனிடம் இருக்கின்றன. இப்போதும் கொண்டாடுகிறார்கள். பவன் நின்றால் மாஸ்... நடந்தால் மாஸ்... திரும்பினால்கூட மாஸ்! அதனால்தான் இன்று அண்ணனை விஞ்சி நிற்கிறார் தம்பி. அதை யாருமே சொல்ல வேண்டியதில்லை. சிரஞ்சீவியே பெருமையாகச் சொல்வார். பவனும் பல விஷயங்களில் சிரஞ்சீவியுடன் முரண்பட்டாலும், எந்த இடத்திலும் அண்ணனை தாழ்த்திப் பேச மாட்டார். அப்படிப்பேச நினைப்பவர்களையும் அனுமதிக்க மாட்டார். விமர்சனம் வைப்பார். ஆனால், விட்டுக்கொடுக்க மாட்டார். 'அண்ணனின் வியர்வை நாத்தத்தை மோந்து வளர்ந்தவன் நான்' என்பார். அவரின் வார்த்தையே இது.

பவன், சிரஞ்சீவி

பவன் அடிப்படையில் பயங்கரமான கூச்ச சுபாவம் கொண்டவர். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால், அறைக்குள்ளேயே ஒளிந்துகொள்ளும் அளவுக்குக் கூச்ச சுபாவி! இலக்கியவாதியாக வேண்டுமென்பதை இலக்காக வைத்துக் கொண்டிருந்தார். அப்படிப்பட்டவருக்கு எப்படி சினிமா ஆசைவந்தது என்பது புரியாத புதிர்தான். பவனுக்கு அடிப்படையிலேயே சண்டைகளில் ஆர்வம் அதிகம். வளர்ந்ததே அண்ணன் சிரஞ்சீவியின் ஆக்ஷன் படங்களைப் பார்த்துதான். அதனால், அடம்பிடித்து தற்காப்புக்கலை பயின்றார். கராத்தேவில் பவன் கில்லாடி! தமிழில் விஜய் நடித்த 'பத்ரி', தெலுங்கில் பவன் நடித்த 'தம்முடு'வின் ரீமேக். இங்கே விஜய் செய்த ஸ்டன்ட் காட்சிகளுக்கு ரெஃப்ரன்ஸ், அங்கே பவன் செய்த ஸ்டன்ட் காட்சிகளே. பவன் படங்களுக்கு கதையும் எழுதுவார். திரைக்கதையும் எழுதுவார். இயக்கவும் செய்வார். சண்டைக் காட்சிகளையும் அமைப்பார். நடனக் காட்சிகளையும் அமைப்பார். அவரே தயாரிக்கவும் செய்வார். கமலையும் ரஜினியையும் கலந்த மாதிரி ஓர் ஆள், அவர்! கமல் அளவுக்கு இல்லையென்றாலும், தன்னால் முடிவதை முயன்று பார்ப்பவர்.

பவன் அவ்வளவு அழகெல்லாம் கிடையாது. பக்கத்துவீட்டுப் பையன் மாதிரிதான் இருப்பார். ஹீரோ அல்ல, ஹீரோ ஃப்ரெண்ட் ரோலுக்குக் கூட எடுபடாதவராகப் பவன் பார்க்கப்பட்டார். ஆனால், பவன் எல்லா விமர்சனங்களையும் ஒவ்வொன்றாக உடைத்தார். `உன்னால் எண்பது லட்சம்கூட வசூலிக்க முடியாது' என்றார்கள் சொந்தக்காரர்கள். எண்பது கோடியையே தொட்டுக் காட்டினார். நூறு கோடியையே தாண்டிக் காட்டினார். இதுக்கு பவனின் படத்தில் பட்ஜெட்டெல்லாம் பெருசாக இருக்காது. சாதாரண கமர்சியல் படம்தான். ஆனால் அடித்து நொறுக்கும் பாக்ஸ் ஆபீஸை! பவன் இதுவரை கொடுத்திருப்பது ஒரு சில மெஹா ஹிட்களே. காரணம், கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது முயற்சி பண்ணுவார். அதுவும் ஆந்திர சினிமாவில்! பாக்ஸிங்கை மையமாக வைத்து ஒரு படம் எடுத்தார். ஃபிளாப்! பழைமைவாதம் பயங்கரமாக இருக்கும் மாநிலத்தில், செம முற்போக்காக ஒரு இந்திப் படத்தை ரீமேக் செய்தார். அட்டர் ஃபிளாப்! இப்படி நிறைய ஃபிளாப்களை பார்த்தவர் பவன்!

பவன்

பவனின் சினிமா வாழ்க்கையில் சில படங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. முதலிடம் 'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி' படத்துக்கு. காரணம், முதல் படமது என்பதால் மட்டுமே. பயங்கரமான ஃபிளாப் அது. இரண்டாவது, பவனின் வாழ்க்கையில் வெற்றியின் சுவையைக் காட்டிய 'தொலி பிரேமா'. இப்போதுவரை பவனின் ஆல்டைம் கிளாஸிக் இதுவே. 'பூவே உனக்காக...' ஸ்டைல் சினிமாதான். ஆனால், அதிலும் பவனின் துள்ளல் பார்ப்போரை துள்ளவைக்கும். விருதுகளையும் அள்ளிய படமிது.

மூன்றாவது... அதேதான் 'குஷி'. நம்மூர் குஷியேதான். இயக்கமும் அதே எஸ்.ஜே.சூர்யாதான். இங்கே விஜய். அங்கே பவன். இங்கே ஜோதிகா. அங்கே பூமிகா. பவனை ஸ்டாராக்கிய படம் குஷியே. அடித்துப்பிரித்து தோரணம் கட்டியது பாக்ஸ் ஆபீஸில். ஆந்திர இளசுகளின் ஆல்டைம் ஃபேவரைட் அந்தப் படம். பவனும் சீனுக்கு சீன் வெளுத்து வாங்கியிருப்பார். அந்த ஊரில் அந்த மாதிரி நடிப்பு அப்போது அபூர்வம். ஒருவகை துள்ளல் இருந்துகொண்டே இருக்கும்.

 

அடுத்த பதினொரு வருடங்களுக்குப் பவனுக்கு ஹிட்கள் இல்லை. இல்லையென்றால், சுத்தமாகவே இல்லை. நடுவில் `ஜல்ஸா' மட்டுமே கொஞ்சம் தேறியது. தொட்டது எதுவுமே சரிவரவில்லை. ஏதேதோ முயன்றார். வேலைக்காகவில்லை. ரசிகர்கள் வேறேதோ எதிர்பார்த்தார்கள். அந்தப் பழைய `பவன் கல்யாணை' எதிர்பார்த்தார்கள். அதே ஸ்டைல், அதே மாஸ் பவனை எதிர்பார்த்தார்கள். ஆனாலும், காத்திருந்தார்கள். இளம் இயக்குநர் ஹரிஷ், பவன் கல்யாணைச் சந்திக்கிறார். `டபாங்' ரீமேக் கதையைத் தருகிறார். பவன் படித்துவிட்டு ஹரீஷை பார்க்கிறார். ஹரீஷூக்கு மூச்செல்லாம் நின்னுபோகும் நிலை. அதுக்கு முன்னால் எடுத்த இரண்டு படங்களும் அட்டர் ஃபிளாப். ராசியில்லாத இயக்குநராகப் பார்க்கப்பட்டார், ஒதுக்கப்பட்டார். ஹரிஷீன் எதிர்காலம் ஒரு நொடியில் முடிவாகப் போகிறது. பவன் மெல்லச் சிரித்து `பண்ணுவோம்!' என்கிறார். ஹரீஷுக்கு வந்தது உயிர். 

துயரம் வேறுமாதிரி தொடர்ந்தது. ஹரீஷைப் பற்றி பவனிடம் வத்தி வைக்கிறார்கள். `ஹரீஷ் ராசியில்லாதவர். அனுபவமில்லாதவர்' என போட்டுக் கொடுக்கிறார்கள். பவனும் யோசிக்க ஆரம்பித்தார். ஹரீஷை வரவழைத்தார். ஹரீஷூக்கும் `போட்டுக்கொடுத்த' மேட்டர் தெரியும். ஹரீஷ் விழிதூக்கிப் பார்க்கிறார். பவன் அணைக்கிறார். அறிவிக்கிறார். `பண்றோம்டா... இதுக்காகவே பண்றோம்டா'. ஹரீஷ் அழ ஆரம்பிக்கிறார். `எதுக்கும் ஒருமுறை...' என இழுக்கிறார். பவன் சொல்கிறார். `வந்துவிட்டாய். தந்துவிட்டேன். நடப்பதை நாமறியோம்'. இடைவெளிவிட்டு மீண்டும் சொல்கிறார். `நானும் ராசியில்லாதவனே'. ஹரீஷ் அப்புறம் எப்போதோ சொன்னார். `எனக்காகப் பண்ணினார். என்னை நம்பி மட்டுமே பண்ணினார்'.

பவன்

வந்தான் `கப்பார் சிங்...!' தியேட்டருக்கு உள்ளேபோன ரசிகர்கள் கண்ணீர்வழிய வெளியே வந்தார்கள். கிட்டத்தட்ட பதினொரு வருடக் காத்திருப்பு, தவம்! ஒரு ரசிகன் அறிவித்தான்... `தலைவா! அடுத்த பதினொரு வருசத்துக்கு நீ ஃபிளாப்பே கொடு, பரவாயில்லை. ஆனால், அதுக்கடுத்த வருசம் இதேமாதிரி ஒரு `கப்பார் சிங்' கொடு' என்று! ராம்கோபால் வர்மா அறிவித்தார்... `படம் நல்லா ஓடினால் ஹிட். அதுக்கும் அதிகமா ஓடினால் மெஹா ஹிட். அதைவிட அதிகமா ஓடினால் பிளாக் பஸ்டர். அதையும் தாண்டி ஓடினால்?! ங்கொய்யால... வார்த்தையே இல்லடா, அதுக்குப் பேரு `கப்பார் சிங்'டா! என்று. 

`கப்பார் சிங்' அல்லு சில்லெனத் தெறிக்கவிட்டது தியேட்டர்களை. அடித்து நொறுக்கியது அத்தனை ரெக்கார்டுகளையும். ஒவ்வொரு சீனிலும் பவன் பின்னிப்பெடல் மட்டுமல்ல, சைக்கிள் செயினையும் எடுத்துச் சுத்தியிருந்தார். பவனிஸம் உச்சத்தைத் தொட்டது. பவன் கல்யாண் டோலிவுட்டின் ரஜினிகாந்த் ஆனார். ரஜினியே படம்பார்த்துவிட்டு `மிரட்டியிருக்கிறார் பவன்' என்றார். படத்தில் அப்படி என்ன இருக்கும்?! ஒண்ணுமே இருக்காது. பவன் மட்டுமே இருப்பார்.

பவன்

அடுத்து வந்தது `அத்தாரிண்டிக்கி தாரேதி'. படமும் பக்கா கமர்சியல்தான். திரிவிக்ரமின் கலக்கலான கலர்ஃபுல் ட்ரீட்மென்ட். வெளிவந்தால் அடித்துக்கிழித்து தொங்கவிடும் என்றே சொல்லியிருந்தார்கள், படத்தை முன்னாலேயே பார்த்தவர்கள். ஆனால் அங்கே ஒரு விதி விளையாடியது. பாதிப்படத்தை ரிலீஸுக்கு முன்பே நெட்டில் விட்டுவிட்டார்கள் சிலர். ஓரிரு சீன்கள் இல்லை, கிட்டத்தட்ட பாதிப்படம். எல்லோரும் `முடிந்தது' எனத் தலையில் கைவைக்க, பவன் உள்ளே இறங்கினார். ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். `படத்தை தியேட்டரில் பாருங்கள்...' என்றார். ஆல்டைம் ரெக்கார்டு ஹிட் அடித்தது `அத்தாரிண்டிக்கி தாரேதி'கிட்டத்தட்ட கப்பார்சிங்கை விஞ்சும் வசூல். வெற்றிவிழாவில் நன்றி சொன்னார் ரசிகர்களுக்கு. கூட்டம் திருப்பிச் சொன்னது `எல்லாம் உனக்காக தலைவா...'! தன் சம்பளப் பணத்தை தயாரிப்பாளருக்கு அளித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார் பவன்!

இங்கே, போக்கிரியில் விஜய் காட்டியது `மகேஷ்பாபு மேனரிஸம்' என்பார்கள். ஆனால், மகேஷ்பாபுவே காட்டியது `பவன் மேனரிஸம்' தான். பவனின் கழுத்தைத் தேய்க்கும் மேனரிஸத்தை, ஒருமுறையேனும் செய்து பார்க்காத இளைஞர்கள் ஆந்திரதேசத்தில் இருக்கமாட்டார்கள். இளைஞர்கள் என்ன?! குழந்தைகள் கூட இருக்கமாட்டார்கள். தமிழகம்வரை எதிரொலித்த `எவடே சுப்ரமண்யம்' திரைப்படத்தில் ஒரு சீன் வரும். அந்த சீனில், இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு டீக்கடையில் நானி அமர்ந்திருப்பார். பக்கத்தில் இருக்கும் பையன் நானியைப் பார்த்து `எந்த ஊர்' என்பான். நானி மெல்லிய சிரிப்புடன் `ஆந்திரா' என்பார். அந்தப் பையன் கழுத்தைத் தேய்த்துக் கொண்டே சொல்வான் `ஓ... பவன் கல்யாண்...'! நானியும் கழுத்தைத் தேய்த்து `ஆங்... ஆங்...' என்பார். அந்த `ஆங்... ஆங்'கும் பவன் மேனரிஸம்தான். அந்தப் படத்தில் ரஜினியை வைத்தும் ஒரு ரெஃபரன்ஸ் வரும். கதைக்களம் இமயமலை என்பதால்!

பவன்

பவன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, அந்த மேனரிஸம்தான். அது அப்படியொரு மாஸ்! பவன் அதை 'தொலி பிரேமா'விலேயே செய்துவிட்டார். தெலுங்கில் இப்போதிருக்கும் ஹீரோக்களில் பவனின் தாக்கம் இல்லாதவர்கள் யாருமே இல்லை எனலாம். அவர்கள் எல்லோருமே பவன் ஆகவேண்டும் என்றுதான் ஆண்டுக்கணக்கில் முயன்றுகொண்டிருக்கிறார்கள். இங்கே ஒரு தகவல்... பவன் இதுவரைக்கும் நடித்திருக்கும் படங்கள் வெறும் இருபத்தைந்துதான்!

இவ்வளவு பெரிய பீடிகை எதற்காக என்றால், பவன் மீண்டும் நடிக்க வரப்போகிறாராம். அவர் ரசிகர்கள் சமூகவலைதளத்தை மொத்தமாக ஆக்கிரமித்து, பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆந்திரத்தின் அத்தனை நடிகர்களுக்கும் அவர்கள் தரப்பில் ஒருவரிச் செய்தி சென்றிருக்கிறது.

அது இதுதான்...

‘ஊரு ஆந்திரா... பேரு பவன் கல்யாண்... பட்டம் பவர் ஸ்டார்... ஒத்தையா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி... வாங்கலே’!


டிரெண்டிங் @ விகடன்