இந்தியாவை வாட்டும் தண்ணீர் பிரச்னை... மோடியின் புதிய 'ஜல் சக்தி' செய்யவேண்டியது என்ன? | Challenges before the Modi cabinet's new portfolio jalsakthi

வெளியிடப்பட்ட நேரம்: 07:27 (02/06/2019)

கடைசி தொடர்பு:07:27 (02/06/2019)

இந்தியாவை வாட்டும் தண்ணீர் பிரச்னை... மோடியின் புதிய 'ஜல் சக்தி' செய்யவேண்டியது என்ன?

தற்போது சுமார் 60 கோடிப்பேர் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். ஆண்டுதோறும் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி உயிரிழக்கின்றனர். நிலை இப்படியே தொடர்ந்தால், 2050-ல் இந்தியாவின் ஜி.டி.பியில் 6 சதவிகிதம் அளவுக்குத் தண்ணீர்ப் பிரச்னையால் பாதிப்பு ஏற்படலாம்.

இந்தியாவை வாட்டும் தண்ணீர் பிரச்னை... மோடியின் புதிய 'ஜல் சக்தி' செய்யவேண்டியது என்ன?

குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து, மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு  நீர்ப்பாசன வசதிகள் வழங்குவதற்காக ‘ஜல் சக்தி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதற்காக தனித்துறை ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி பிரதமர் மோடியின் அமைச்சரவை அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டபோது, ஜல் சக்தி துறை தனியே உருவாக்கப்பட்டது.

இத்துறை குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாத்து, விவசாயிகளுக்கு உரிய நீர்ப்பாசன வசதிகளை உறுதிசெய்யும். இந்தத் துறையின் அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் இணை அமைச்சராக இருந்தவர் தற்போது கேபினட் அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார். ஜல் சக்தி துறையானது, மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையை மறுசீரமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையும் இந்தத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் எனவும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நதிகளை இணைக்கும் திட்டத்தையும் விரைவாக முன்னெடுத்துச் செல்லும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற நீர் மற்றும் நிலத்தடி நீர் மறுசீரமைப்பிற்காகச் சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஜல் சக்தி

சுத்தமான குடிநீருக்காகவும், விவசாய மேம்பாட்டுக்காகத் தண்ணீர் கொடுப்பதற்காகவும் அமைச்சரவையில் தனித்துறை அமைக்கப்பட்ட தருணத்தில் அந்தத் துறையின் முன்னர் பல சவால்கள் இருக்கின்றன. இதனை நிச்சயமாக இந்தப் புதிய துறை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அவை என்ன சவால்கள்... வாருங்கள் பார்ப்போம்.

மத்திய நீர்வளத் துறை அமைச்சகம், மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரம் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துடன் இணைந்து, நிதி ஆயோக் அமைப்பு இந்தியா முழுவதும் இருக்கும் நீர்வளம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. கடந்த 2018-ம் ஆண்டு, அந்த ஆய்வு முடிவுகளை நிதி ஆயோக் வெளியிட்டது. அதில் சொல்லப்பட்டிருந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிதரும் ரகம்.

'2020-ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற இந்தியாவின் 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும். நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீராதாரங்களை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டு வெறும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் மாநிலங்களுக்கு இந்த அறிக்கை சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. 

தண்ணீர்

இந்திய மாநிலங்களின் நீர் மேலாண்மை தொடர்பான தரவுகள் அனைத்தையும் ஒப்பிட்டு, ஆய்வுசெய்து வெளியிடப்பட்ட Composite Water Management Index அறிக்கையில் 24 மாநிலங்களின் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. காஷ்மீர், மிசோரம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்குப் போதிய தரவுகள் இல்லாததால் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மதிப்பீடு செய்யப்பட மீதி 24 மாநிலங்களும், நீராதாரங்கள் மறுசீரமைப்பு, நீர் மேலாண்மைக்கான அரசின் கொள்கைகள், நிலத்தடி நீர் மேலாண்மை, குடிநீர் விநியோகம் உட்பட மொத்தம் 9 விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டன. 2016-17 நிதியாண்டுக்கான புள்ளிவிவரங்களைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டதில் சிறந்த நீர் மேலாண்மை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலிடத்தையும், ஜார்கண்ட் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. தமிழகத்திற்கு இந்தப் பட்டியலில் 7-வது இடம். 

தற்போது சுமார் 60 கோடிப்பேர் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். ஆண்டுதோறும் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி உயிரிழக்கின்றனர். நிலை இப்படியே தொடர்ந்தால், 2050-ல் இந்தியாவின் ஜி.டி.பியில் 6 சதவிகிதம் அளவுக்குத் தண்ணீர்ப் பிரச்னையால் பாதிப்பு ஏற்படலாம். இந்திய மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேருக்கு 2030-ல் குடிநீர் கிடைக்காது. 2020-ல் தேசத்தின் 21 பெரிய நகரங்களில் நிலத்தடி நீர் முழுவதுமாகக் குறைந்துவிடும். அதனால், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். இப்போதும் 75 சதவிகித குடியிருப்புகளுக்குச் சரியான குடிநீர் கிடைக்கவில்லை. 84 சதவீத கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்பு கிடைக்கவில்லை. இதுதவிர, நாட்டில் உள்ள தண்ணீரில் 70 சதவீதம் மாசுபடுத்தப்பட்டுள்ளது. அதனால் பாதுகாப்பான நீர் கொண்ட நாடுகளின் பட்டியலில், 122 நாடுகளில் இந்தியா 120 வது இடத்திலுள்ளது' என அறிக்கை தெரிவிக்கிறது.

தண்ணீர்

சமீபத்திய மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் கணக்குகள் பற்றிய அறிக்கையின்படி, 'பாசனத்திற்கான நீரின் தேவை 2010-ம் ஆண்டில் 688 பில்லியன் கன மீட்டர் (BCM) எனும் அளவில் இருந்தது. இது 2025-ம் ஆண்டில் 32.27 சதவீதத்திலிருந்து 910 பில்லியன் கன மீட்டர் (BCM) எனும் அளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நீரைச் சேமிக்கவும், அதனைப் பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வும் அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.' எனத் தெரிவித்திருக்கிறது.

எனவே எதிர்காலத் தேவையான தண்ணீரைக் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 'ஜல் சக்தி' துறை, அதனைப் பூர்த்தி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  


டிரெண்டிங் @ விகடன்