`நோ ஸ்கூல் பேக்; முதியோர் பென்ஷன்; மதுவிலக்கு’ - மாஸ் காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி! | No School Bag on Saturdays says jagan mohan reddy

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (03/06/2019)

கடைசி தொடர்பு:11:07 (04/06/2019)

`நோ ஸ்கூல் பேக்; முதியோர் பென்ஷன்; மதுவிலக்கு’ - மாஸ் காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி!

நடந்துமுடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில், புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. தன் தந்தை இறந்து 10 வருடங்களுக்குப் பிறகு இவர் முதல்வராகியுள்ளதால், மக்களுக்கு இவர் ஆட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆந்திரா முதல்வர்

மக்களின் எதிர்பார்ப்பை சற்று பூர்த்திசெய்யும் வகையில் தன் புதிய திட்டங்களால் அதிரடிகாட்டிவருகிறார், ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த மாதம் 30-ம் தேதி, முதல்வராகப் பதவியேற்றவுடன் தன் முதல் கையெழுத்தாக, ரூ.1,500 ஆக இருந்த முதியோர்களுக்கான  உதவித்தொகையை ரூ. 2,300 ஆக அதிகரித்தார். விரைவில் இது ரூ.2,500 ஆக மாற்றப்படும் எனவும் அறிவித்தார்.

பள்ளி மாணவர்கள்

இதைத் தொடர்ந்து, தற்போது மாணவர்களுக்காக இவர் அறிவித்துள்ள திட்டம் ஆந்திரா முழுவதும் நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது.  சமீபத்தில், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். அதில், “இனி வரும் சனிக்கிழமைகளில், மாணவர்கள் புத்தகப் பையுடன் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும், சனிக்கிழமைகளில் படிப்பு அல்லாத பிற திறன்கள் மற்றும் விளையாட்டுக்காக மட்டுமே மாணவர்கள் செலவழிக்க வேண்டும்” என்றும் அறிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இது மட்டுமல்லாது, சத்துணவுப் பணியாளர்களுக்கான சம்பள உயர்வை 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளார்.  ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

சத்துணவு

”மாணவர்களுக்கு நிலையான கல்வி வழங்க வேண்டும் என எங்கள் அரசு முடிவுசெய்துள்ளது. சில தனியார் பள்ளிகள், மாணவர்களை மதிப்பெண்கள் பின்னால் மட்டுமே ஓட வைக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ பல பெற்றோர்களும் இதற்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆனால் அதை உடைத்து, மாணவர்கள்  விளையாட்டு போன்ற பிற திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” என விஜயவாடா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். 

மதுக்கடை

பள்ளி மட்டுமல்லாது இன்னொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.  நிதித் துறை தொடர்பான அதிகாரிகளுடன் தனது வீட்டில் நடந்த ஆலோசனையில், பல முக்கிய பிரச்னைகள்குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஆந்திரா முழுவதும் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் முதல் படியாக, நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தியுள்ளார்.