`குறைந்த உள்நாட்டு உற்பத்தி!' - அதிவேகமாக வளரும் நாடு, பெயரை இழந்ததா இந்தியா? | Lowest ever GDP since two years, India is no more a growing economy

வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (03/06/2019)

கடைசி தொடர்பு:13:00 (03/06/2019)

`குறைந்த உள்நாட்டு உற்பத்தி!' - அதிவேகமாக வளரும் நாடு, பெயரை இழந்ததா இந்தியா?

இந்தியா

கடந்த மே 30-ம் தேதி, இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற மறுநாளான மே 31-ம் தேதி இரண்டு அறிவிப்புகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய தொழிலாளர் அமைச்சகம், மே 31-ம் தேதி வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதில், கடந்த 2017- 18 நிதியாண்டில் மட்டும் நாட்டில் வேலைவாய்ப்பின்றி இருப்பவர்களின் எண்ணிக்கை 6.1 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. தேசிய அளவில் 6.2 சதவிகித ஆண்களும், 5.7 சதவிகித பெண்களும் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், கிராமப்புறங்களில் 5.3 சதவிகிதம் பேரும்,  முக்கியமாக 7.8 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வேலை செய்யக்கூடிய தகுதியும், திறமையும் வாய்ந்த இளைஞர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்து, கடுமையான நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது. இதேபோன்ற அறிவிப்பை, தேர்தலுக்கு முன்பாகக் கடந்த ஜனவரி மாதம் தேசிய சர்வே அலுவலகம் (National Sample Survey Office NSSO) வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது, மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, தற்போதைய அதிகாரபூர்வ அறிவிப்புக்கு இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை.

மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistics Office CSO) வெளியிட்ட  தரவுகளின்படி, 2019 ஜனவரி-மார்ச் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product GDP) 5.8 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. 6.6 சதவிகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை, தொழில் மற்றும் உற்பத்தி போன்ற முக்கியத் துறைகளில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாகக் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்பு ரிசர்வ் வங்கி, 2019- 20 காலாண்டில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 6.8 சதவிகித வளர்ச்சி மட்டுமே இருக்கும் எனத் கூறியிருக்கிறது. இதன் காரணமாக, உலகில் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியடையும் நாடு என்ற பெயரை இந்தியா இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2014- 2015 முதலே, மொத்த உள்ளநாட்டு உற்பத்தி மந்தமாகவே இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.