மதம், மனிதநேயம், விண்ணப்பத்தில் அசத்தும் கொல்கத்தா கல்லூரி! | Kolkatta's Bethune college revolutionize admissions form mentioning humanity in the religion column

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (03/06/2019)

கடைசி தொடர்பு:15:15 (03/06/2019)

மதம், மனிதநேயம், விண்ணப்பத்தில் அசத்தும் கொல்கத்தா கல்லூரி!

கல்லூரி

கொல்கத்தாவைச் சேர்ந்த பெத்தூன் கல்லூரி, தனது கல்லூரி விண்ணப்பத்தில் மதம் என்ற பிரிவின் கீழ் ‘மனிதம்’ (Humanity) என்றொரு பிரிவை இணைத்துள்ளது. எந்தவொரு மத அடையாளமும் வேண்டாம் என நினைக்கும் மாணவர்கள், தங்களது மதமாக மனிதத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இக்கல்லூரி நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்தக் கல்லூரி, இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. 

"கல்லூரியின் நுழைவுக் குழுவோடு ஆலோசனை செய்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மதங்களைப் பின்பற்றும் சுதந்திரத்தைக் கல்லூரி நிர்வாகம் எதிர்க்கவில்லை. ஆனால், மதங்கள்மீது நம்பிக்கை  இல்லாத மாணவர்களுக்காக இப்படிச் செய்துள்ளோம்" என்று கல்லூரி முதல்வர் மமதாராய் செய்தியாளரிடம் கூறியுள்ளார். கல்லூரியின் இந்த முன்னெடுப்புக்கு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

சுப்பராஜூசில மாதங்களுக்கு  முன், தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிநேகா, `சாதி,மதம் அற்றவர்’ என்ற சான்றிதழைப் பெற்றது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்கவைத்தது. அப்படியிருக்கும் சூழலில், சாதி மதங்களுக்கு எதிரான எவ்வித நடவடிக்கையிலும் எப்போதுமே முன்மாதிரியாக இருக்கும் தமிழகத்தில், இதுபோன்ற கல்வியியல் துறை மாற்றங்கள் சாத்தியமா எனப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவரிகளிடம் பேசினோம். கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பராஜு கூறுகையில், “இது வரவேற்கவேண்டியது. கல்லூரிகள் மற்றும் பள்ளி நிறுவனங்களில் மாணவர்கள் தங்களுடைய மதத்தையும் சாதியையும் குறிப்பிடுவது அவசியமில்லை. மதம் என்பது புள்ளிவிவரத் தேவைக்காகத்தான் கல்லூரி நிறுவனங்களில் இருக்கிறது. சாதியைக் குறிப்பிடுவது, அவர்களுக்கான சலுகைகள் கிடைக்க  வழிசெய்கிறது. ஒரு சிலர் அந்தச் சலுகைகள் வேண்டாம் எனக் கூறலாம். ஆனால், பலர் அந்தச் சலுகைகள் உதவியுடன்தான் படிக்கிறார்கள். அதனால் இதைத் திணிக்காமல், அந்தச் சலுகைகள் இனிமேற்கொண்டு தேவையில்லை என்கிற சூழல் உருவாகும் நிலையில், அதுகுறித்து விவாதிக்கலாம்”  என்றார்.