``இந்தியாவுக்குள் என்னை அனுமதியுங்கள்!"- பிரதமர் மோடிக்கு போலந்து சிறுமி கைப்பட எழுதிய கடிதம் | "Miss Life In India" Polish Girl Asks Modi

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (03/06/2019)

கடைசி தொடர்பு:15:45 (03/06/2019)

``இந்தியாவுக்குள் என்னை அனுமதியுங்கள்!"- பிரதமர் மோடிக்கு போலந்து சிறுமி கைப்பட எழுதிய கடிதம்

11 வயது போலந்து சிறுமி அலிக்ஜா வனட்கோ, கோவாவில் தங்கி படித்து வருகிறாள். அவரின் தாய் மார்த்தா கோட்லர்ஸ்கா, ஓவியராகவும், போட்டோகிராபராகவும் இருக்கிறார். மல்ட்டிபிள் என்ட்ரி பி-2 விசா மூலமாக தன் மகளைப் பார்ப்பதற்காக இந்தியாவுக்கு வந்த அவர், இங்கே கூடுதல் நாள்கள் தங்கியதாக உத்தரகாண்ட் மாநில அரசின் வெளிநாட்டினர் மண்டலப் பதிவு அலுவலகத்தால் குற்றம்சாட்டப்பட்டு, இந்தியாவுக்குள் நுழையத் தடைசெய்யும் கறுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டார்.

அலிக்ஜா

அவரின் மகள் அலிக்ஜாவை தன்னோடு அழைத்துச்செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டதால் தற்போது அலிக்ஜாவாலும் இந்தியாவுக்குள் வர முடியவில்லை. தற்போது, தாயும் மகளும் கம்போடியாவில் தங்கியிருந்தபடி இந்தியாவுக்குள் மீண்டும் வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். ஏப்ரல் 25-ம் தேதிக்குப்பிறகு அலிக்ஜாவால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. இதுகுறித்து அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இம்முறை ட்விட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். அந்தக் கோரிக்கைக் கடிதத்தை சிறுமி அலிக்ஜா, தன் கைப்படவே எழுதியிருக்கிறாள். 

அலிக்ஜா

அந்தக் கடிதத்தில், ``தற்போது நான் என் அம்மாவுடன் இருந்தாலும் இந்தியாவைப்பற்றிய நினைப்பாகவே இருக்கிறேன். எனக்கு இந்தியாவைத்தான் தெரியுமென்பதால் அம்மாவோடு இருந்தாலும் தனிமையில் இருப்பதாகவே உணர்கிறேன். கோவாவில் எனது பள்ளியைத் தொலைத்து நிற்கிறேன். அங்குள்ள விலங்கு மீட்பு மையத்தில் நான் பராமரிக்கும் பசுக்கள், நான் இல்லாமல் தவித்துப்போகுமே என்ற மன உளைச்சல் காரணமாக தூக்கமின்றித் தவிக்கிறேன். இந்து கலாசாரத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள நான், பத்ரிநாத், கேதாரிநாத் கோயில்களுக்கெல்லாம் சென்றுள்ளேன். இந்தியா திரும்புவதில் எனக்கு உதவும்படி சிவனையும், நந்தா தேவியையும்தான் தினமும் வேண்டுகிறேன்.

நீங்கள் இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர் என்பதால்தான் இந்தியாவுக்கே நான் திரும்பவும் வருவதற்கு உங்களுடைய உதவியை நாடி கடிதம் எழுதுகிறேன். இந்தியாவுக்குள் நுழையத் தடைவிதிக்கும் கறுப்புப்பட்டியலிலிருந்து என் தாயின் பெயரை நீக்குவதற்கு உத்தரவிட வேண்டும்" என பிரதமர் மோடிக்கு உருக்கமாக எழுதியிருக்கிறாள். இவளது கடிதத்துக்கு உரிய பதில் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது அலிக்ஜா எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.