`ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தால்தான் உயிர் வாழ முடியும்!'- யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதிய கேரள பெண் | Woman Takes UPSC Exam With Oxygen Cylinder

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (03/06/2019)

கடைசி தொடர்பு:11:09 (04/06/2019)

`ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தால்தான் உயிர் வாழ முடியும்!'- யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதிய கேரள பெண்

லதீஷா

தன்னம்பிக்கை... இந்த ஒற்றைச் சொல்லை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கார் லதீஷா. வீல் சேரில் தனது வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கும் கேரளாவைச் சேர்ந்த லதீஷாவுக்கு ஐ.ஏ.எஸ் என்பது கனவு. 2 அடி உயரமும், 14 கிலோ எடையும் கொண்ட லதீஷா பிறக்கும்போதே அரிதான எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் முழுமையாக குணமடையாது என்பது அவருக்குத் தெரியும். சுவாசித்தால் மட்டுமே நம்மால் உயிர்வாழ முடியும். அப்படி நீங்கள் சுவாசிக்கும்போது உங்கள் எலும்புகள் நொறுங்கினால் எப்படி இருக்கும். இந்தக் கடுமையான நோயினுடன்தான் போராடிக்கொண்டிருக்கிறார் அவர். வலுவிழந்த தசைகள், வளர்ச்சியில் பிரச்னை, முதுகுத்தண்டு கோளாறு என ஏகப்பட்ட பிரச்னைகள். தனக்குள் இருக்கும் இவ்வளவு பிரச்னைகளையும் தன்னம்பிக்கையுடன் கடந்துவருகிறார். 

கேரளாவை சேர்ந்த இளம்பெண்

குழந்தைப் பருவத்தில் பள்ளியில் சேர்ப்பதில் கூடப் போராட்டம்தான். தொடக்கக் கல்விக்குப் பல பள்ளிகளைக் கடந்து வந்துள்ளார். இந்தக் கடுமையான நோயுடன் போராடிக்கொண்டே முதுகலை வணிகவியல் பட்டத்தையும் பெற்றார். தான் ப்ளஸ் டூ படிக்கும்போதே ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என உறுதியாக இருந்து வந்துள்ளார். அதற்காகக் கடுமையாக உழைத்து வந்தார்.  விதி மீண்டும் விளையாடியது லதீஷாவால் சரியாகச் சுவாசிக்கக்கூட முடியவில்லை சுவாசமின்றி சிரமப்பட்டார். வாழ்க்கையை வலிகளுடன் கடந்து வந்தவருக்கு இந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் மனவலிமை இருந்தது. ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியுடன்தான் அவரால் உயிர் வாழ முடியும் என்ற நிலை. சாப்பிட, பேச என எல்லாவற்றுக்கும் அந்த சிலிண்டரின் உதவி வேண்டும். நாம் சாதாரணமாக செய்யக்கூடிய அனைத்துப் பணிகளையும் அவர் வலியுடன் செய்து வருகிறார்.

தேர்வு மையம்

இந்த நிலையில்தான் நேற்று இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கோட்டயத்தில் உள்ள யூ.பி.எஸ்.சி தேர்வு மையத்துக்கு வந்தார். ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் அவரின் தந்தை அழைத்துவந்தார். லதீஷா தேர்வு எழுதுவது தொடர்பாக முன்னரே மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவருக்குத் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தேர்வு முடித்து வந்து பேசியவர், கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் கூறினார். இதில் தேர்ச்சியடைய கடவுளிடம் பிரார்த்திப்பதாகக் கூறினார். ``நான் இந்தத் தேர்வை வெற்றிகரமாக முடித்தால்தான் மற்றவர்களுக்கு இது ஒரு ஊக்கமாக இருக்கும்'' என்றார். லதீஷாவின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்...