Chennai Salem Highway: `நிலம் கையகப்படுத்தியதில் குளறுபடி!’ - 8 வழிச் சாலைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | salem 8 way project latest judgement in supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (03/06/2019)

கடைசி தொடர்பு:18:08 (03/06/2019)

`நிலம் கையகப்படுத்தியதில் குளறுபடி!’ - 8 வழிச் சாலைக்கு விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சேலம் - சென்னை 8 வழிச் சாலைக்குத் தடை விதித்துக் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்தது. அது தேர்தல் நேரம் என்பதால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வந்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது தமிழக அரசு. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது, நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான கோடைக்கால அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

சேலம் 8 வழிச் சாலை

"சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியதில் அதிக குளறுபடிகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. திட்ட அறிவிப்பை வெளியிடும் முன்னரே அதிகமான நிலங்கள் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. திட்டத்துக்கான அனுமதி கிடைக்கும் முன்னரே நிலத்தை எப்படி வாங்க முடியும். இதைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்யும்படி, எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கிறோம்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்ட விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததை எதிர்த்து 23 கிராம மக்கள் வாயில் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.