`3 நிமிட அதிர்ச்சி வீடியோ!’ - தாய், தம்பி மரணத்தில் தந்தையை சிக்க வைத்த மகள் #Bengaluru | Bengaluru man kills his son

வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (03/06/2019)

கடைசி தொடர்பு:20:58 (03/06/2019)

`3 நிமிட அதிர்ச்சி வீடியோ!’ - தாய், தம்பி மரணத்தில் தந்தையை சிக்க வைத்த மகள் #Bengaluru

காவல்துறை குற்றம்

தொழில் நஷ்டம் கடன் சுமை வேற வழி தெரியவில்லை.... பெங்களூரில் மனைவி மற்றும் குழந்தையைக் கொலை செய்தவர் காவல்துறையில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் இது.

பெங்களூரைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் பாபு, கீதாபாய் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். சுரேஷ் பாபு தனியார் நிறுவனத்தில் சேல்ஸ்  பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். முன்னதாக, சிட்பண்ட் நடத்தி வந்த இந்தத் தம்பதி கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்துள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரி செய்வதற்காக பல்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளார். கடனுக்கான வட்டியானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் அவரால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. வேறு வழியின்றி தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளனர். தன் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து, தனது 12 வயது மகனைக் கொலை செய்கிறார். இதை அவரின் மகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 3 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அந்தக் கொடூர சம்பவம் எப்படி அரங்கேறியது எனப் பதிவாகியுள்ளது. சுரேஷ் பாபு தன் மகனைக் கொலை செய்கிறார். அவரின் 17 வயது மகள் தம்பியை விட்டுவிடுமாறு கதறுகிறாள். ஒரே அறையில்தான் நால்வரும் உள்ளனர். தம்பியை விட்டுவிடுங்கள் என மராத்தியில் கூறுகிறார். மகன் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் கீதா தலையால் சுவரில் முட்டிக்கொள்கிறார். இதையடுத்து, கீதாபாய் தன் மகளிடம் இருந்து செல்போனை பறித்துவிடுகிறார். இதன்பின்னர் கீதாபாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அடுத்து மூன்றாவதாக மகளைக் கொலை செய்ய முடிவுசெய்துள்ளார். ஆனால், மகள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவர் தற்கொலை முடிவைக் கைவிட்டுள்ளார்.

கீதாபாய்

அக்கம்பக்கத்தினரை அழைத்து தன் மகனைக் கொலைசெய்துவிட்டு மனைவி தற்கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இவர்களின் இறுதிச்சடங்குக்கும் சுரேஷ் பாபு ஏற்பாடு செய்துள்ளார். காவல்துறையினரிடம் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். இந்த வீடியோவைப் பார்க்கும் வரை காவல்துறையினரும் சுரேஷ் பாபு கூறியதை நம்பியுள்ளனர். ஆனால், தந்தை செய்த கொடூரச் செயலை உறவினர்களிடம் அவரின் மகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுரேஷ் பாபு மற்றும் அவரின் மகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது தந்தை மகள் இருவரும் முரண்பட்ட தகவலைத் தெரிவித்தனர்.

காவல்துறை விசாரணையில் முதலில், மகன், மனைவி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவைக் காட்டிய பின்னர் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.  மகனைக் கொலை செய்ததாக அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், சிட்பண்ட் நிறுவனத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க கடன் வாங்கினேன். கடன் சுமை மேலும் அதிகரித்தது. சனிக்கிழமையன்று கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கே வந்துவிட்டனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை என காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.