ஒருவருக்கு வைரஸ் உறுதி; தீவிர கண்காணிப்பில் 86 பேர்! - கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா | Suspected Nipah infection in Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (04/06/2019)

கடைசி தொடர்பு:10:02 (04/06/2019)

ஒருவருக்கு வைரஸ் உறுதி; தீவிர கண்காணிப்பில் 86 பேர்! - கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா

கேரள மக்களின் வாழ்வில் 2018-ம் வருட நிகழ்வுகளை மறக்கவே முடியாது. வருடத்தின் தொடக்கத்தில், நிபா வைரஸாலும் இறுதியில் பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு, மிகவும் சிரமப்பட்டு மீண்டு வந்துள்ளனர்.

நிபா வைரஸ்

கடந்த வருட கோடை மாதத்தில்தான், கேரளாவை ஆக்கிரமித்திருந்தது நிபா வைரஸ். வௌவால்களின் மூலம் பரவும் இந்த வைரஸைக் கண்டுபிடிக்கவே காலம் எடுத்தது. பின்னர், அதைக் கட்டுப்படுத்தும் மருந்து உள்ளிட்டவற்றைக் கண்டறிவதற்குள், சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோயினர். தீவிர சிகிச்சை, முன்னெச்சரிக்கை, அவசரகால நடவடிக்கை போன்ற பல செயல்களின்மூலம், ஒரு வழியாக வைரஸ் பரவுவதைத் தடுத்துநிறுத்தியது, கேரள அரசு. 

 வைரஸ்

சரியாக ஒரு வருடத்துக்குப் பிறகு, தற்போது மீண்டும் அம்மாநிலத்தில் நிபா வைரஸ் அறிகுறி உள்ளதாகக் கண்டறியப்பட்டது. கொச்சியைச் சேர்ந்த 23 வயது நோயாளிக்கு தற்போது வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவரின் ரத்த மாதிரிகள் புனே -யில் உள்ள வைரஸ் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கிருந்து வந்த முடிவுகளில் நோயாளி நிபா வைரஸால் பாதிக்கட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.  நோயாளி, தற்போது எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 86 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கே.கே ஷைலஜா

“நிபா வைரஸை சமாளிக்க, கேரள அரசு எல்லா விதத்திலும் தயாராக உள்ளது. கடந்த வருடம், இதே வைரஸ் தாக்கத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தினால், தற்போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊடகங்கள், வைரஸ் பற்றிய பீதியை மக்களிடம் பரப்ப வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வரவேண்டும். ஒரு நோயாளிக்கு நிபா வைரஸ் அறிகுறி இருந்து தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை தடுக்க எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, நோய் பரவாமல் தடுப்போம்” என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே ஷைலஜா தெரிவித்துள்ளார்.

நேற்று எர்ணாகுளத்தில், மருத்துவர்கள், அதிகாரிகளுடன் நிபா வைரஸ் பற்றிய அவசர உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மருத்துவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும், போதுமான மருத்துவர்கள் உள்ளனரா என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த நிபா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது கூடுதல் செய்தி.