ஏ.என்.32 ரக விமானங்களும் பறக்கும் சவப்பெட்டிதான்... காரணம் என்ன? | Last time an An-32 aircraft went from chennai missing, it was never found

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (04/06/2019)

கடைசி தொடர்பு:14:30 (04/06/2019)

ஏ.என்.32 ரக விமானங்களும் பறக்கும் சவப்பெட்டிதான்... காரணம் என்ன?

மியூசியத்தில் வைக்கவேண்டிய விமானங்களை இன்னும் விமானப்படை பயன்படுத்திவருவதாக சென்னை பல்கலைக்கழக  பாதுகாப்பு மற்றும் புள்ளியியல் ஆய்வுத்துறை பேராசிரியர் கோபால்ஜி மால்வியா குற்றம் சாட்டியுள்ளார். 

விமானம்

விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என். 32 ரக விமானம், நேற்று முதல் காணாமல் போய்விட்டது. அருணாசலபிரதேசத்தில்  சீன எல்லையையொட்டிய பகுதியில் பறந்தபோது,  தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இந்த விமானம் இழந்துள்ளது. விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை தெரியவில்லை. ஏ.என். 32 ரக விமானம் காணாமல்போவது, இது முதன்முறையல்ல. இதற்கு முன், 2016- ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி, தாம்பரம் விமானப்படை தளத்தில் புறப்பட்ட ஏ.என்.32 ரக போர் விமானமும் காணாமல்போனது. போர்ட் பிளேர் நோக்கிப் பயணித்த இந்த விமானத்தைப் பற்றி  இன்று வரை எந்தத் தகவலும் இல்லை. காலை 8 மணியளவில் புறப்பட்ட விமானம், வங்காள விரிகுடா மேல் பறந்துகொண்டிருந்தபோது தரைக் கட்டுப்பாட்டுத் தொடர்பை இழந்து, ரேடாரிலிருந்து மாயமானது. 2 மாதங்கள் தேடலுக்குப் பிறகு,  விமானத்தில் பயணித்த 29 பேரும் பலியாகியிருப்பார்கள் என  ஊகிப்பதாக விமானப்படை அறிவித்தது. 

இந்திய விமானப்படை, பழைய  ரக விமானங்களை இன்னமும் பயன்படுத்தி வருவதாக சென்னை பல்கலைக்கழக பாதுகாப்பு மற்றும் புள்ளியியல் ஆய்வுத்துறை பேராசிரியர் கோபால்ஜி மால்வியா குற்றம் சாட்டியுள்ளார். ``இந்திய விமானப்படையில் 40 வருடங்களுக்கு முன் ஏ.என்.32 ரக விமானங்கள் சேர்க்கப்பட்டன. இந்த ரக விமானங்களின் பயன்பாட்டுக் காலம் 20 முதல் 25 ஆண்டுகள்தான். மியூசியத்தில் வைக்கவேண்டிய விமானங்களை இன்னமும் அப்கிரேடு செய்து  விமானப்படை பயன்படுத்திவருகிறது. இத்தகைய விமானங்களுக்கு உடனடியாக ஓய்வு அளிக்க வேண்டும். போர் விமானங்கள் மட்டுமல்ல, போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் விமானங்களையும் நவீனப்படுத்தவேண்டியது கட்டாயம்'' என்று கோபால்ஜி மால்வியா தெரிவித்துள்ளார். 

மிக் போர் விமானம்

Antonov-32  ரக விமானங்கள் உக்ரைன் நாட்டு தயாரிப்பு. காணாமல்போன விமானம், அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படைத் தளத்தில் இருந்து அருணாசலபிரதேசத்தில் மெசூக்கொ நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது மாயமானது. மதியம் 12.27 மணிக்கு பயணத்தைத் தொடங்கிய விமானம், 1 மணியளவில் தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது. கடந்த 2009- ம் ஆண்டு இதே ரக விமானம் ஒன்று இங்கு விபத்தில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. 

மிக் ரக போர் விமானங்கள் போல போக்குவரத்துக்குப் பயன்படும் ஏ.என்.32 ரக விமானங்களும் பறக்கும் சவப்பெட்டிதான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க