`பெண்களைக் கொல்வதுதான் எனது முதல் இலக்கு!' - மேற்குவங்கத்தை மிரட்டிய சீரியல் கில்லர் | Serial killer arrested in West Bengal 

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (04/06/2019)

கடைசி தொடர்பு:11:29 (07/06/2019)

`பெண்களைக் கொல்வதுதான் எனது முதல் இலக்கு!' - மேற்குவங்கத்தை மிரட்டிய சீரியல் கில்லர்

சீரியல் கில்லர்

மேற்கு வங்க மாநிலம் கோரா கிராமத்தில் கடந்த மே 25-ம் தேதி 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண் கழுத்து இறுக்கப்பட்டும் தலையில் பலத்த காயங்களும் உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. இந்தக் கொலை சம்பவத்தில் சிசிடிவி கேமரா மூலம் காவல்துறைக்கு ஒரு துப்பு துலங்கியது. சிவப்பு கலர் பைக்.. அதே கலரில் ஹெல்மேட் அணிந்த ஒரு டிப்டாப் ஆசாமி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வந்தது.

இதையடுத்து இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களும், டிப்டாப் ஆசாமியின் புகைப்படங்களும் மாநிலத்தில் உள்ள மற்ற சரக காவல்நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மெமரி (Memari) காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதே பாணியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்த இந்தக் கொலையில் துப்பு கிடைக்காமல் திணறிவந்ததுள்ளனர். டிப்டாப் ஆசாமி குறித்த புகைப்படங்கள் கிடைத்ததையடுத்து இந்த வழக்கு விசாரணை தீவிரமானது. கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் தீவிரமாக ஆராயப்பட்டது.

இந்த மூன்று சம்பவத்திலும் கொலையான பெண்கள் 40 வயதைக் கடந்தவர்களாக இருந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த பெண்களை குறிவைத்துதான் சம்பவம் நடைபெற்றுள்ளது. மூன்று பெண்களும் கழுத்து இறுக்கப்பட்டு தலையில் பலமான காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியாமல் காவல்துறையினர் விழிபிதுங்கி இருந்தனர். அவர்களுக்கு கிடைத்த அந்த சிவப்பு கலர் பைக் என்ற துப்பே இந்த வழக்கு விசாரணையைக் கொண்டு சென்றது.

கைது

இந்த நிலையில், 42- வயது மதிக்கத்தக்க சர்கார் என்ற நபர் மீது காவல்துறைக்கு சந்தேகம் வந்தது. அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்த காவல்துறை சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சர்காருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சர்கார் அப்பகுதி மக்களுக்கு சிறு, குறு தொழில் செய்யும் நபராகவே அறிமுகமாகியுள்ளனர். காவல்துறையின் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் சொன்ன தகவல்தான் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

பணம், நகை அல்லது பாலியல் வன்முறையால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் நினைத்திருந்த வேளையில், இதையெல்லாம் இரண்டாம் பட்சம்தான் பெண்களைக் கொலை செய்வதே தனது  முதல் குறிக்கோள் எனத் தெரிவித்துள்ளார். இதையெல்லாம் ஏன் செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை எனக்கூறி போலீஸை மிரள வைத்துள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிவப்பு கலர் பைக், அதே கலரில் ஹெல்மெட் என டிப்டாப் ஆசாமியாக வலம் வந்தார் சர்கார்.  வீட்டில் இருக்கும் மின் மீட்டரை கணக்கெடுப்பதாகக் கூறி வீட்டுக்குள் நுழைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். கைகளில் ரீடிங் மீட்டருடன் செல்லும் அவர் வீட்டில் யார் இருக்கிறார்கள் என நோட்டமிடுகிறார். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை தான் கொண்டு வந்த சைக்கிள் செயினைக் கொண்டு இறுக்கியும் இரும்பு ராடுகளைக் கொண்டு தலையில் பலமாக அடித்தும் கொலை செய்துள்ளார். இதன்பின்னர் ரத்தவெள்ளத்தில் கிடக்கும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், இதையடுத்து வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்.

குறிப்பாக 40 வயதுமதிக்கத்தக்க பெண்களை மட்டுமே தேர்வு செய்து கொலை செய்துள்ளார். அந்த வயதுமதிக்கத்தக்க பெண்களுடன் அவருக்கு ஏதேனும் கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டிருக்கும். அதுவே அவரைக் கொலை செய்யும் மனநிலைக்குக் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் விசாரித்து வருகிறோம்.  இவரது தாக்குதல்களில் இருந்தும் சில பெண்கள் தப்பித்துள்ளனர். சர்காரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளோம். மேற்கு வங்கத்தில் நடந்த 5 கொலைகளில் இவருக்கு தொடர்பு இருக்கிறது’ என்றனர்.

சர்கார் தற்போது 12 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  முழுமையான விசாரணைக்குப் பின்னரே இந்த வழக்கில் மேற்கொண்டு தகவல்கள் தெரியவரும் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.