`அனைத்து விவசாயிகளுக்கும் 6,000 ரூபாய்...' பயனளிக்குமா மோடியின் புதிய திட்டம்? | PM-KISAN Scheme's extension is really helpful to farmers?

வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (04/06/2019)

கடைசி தொடர்பு:21:17 (04/06/2019)

`அனைத்து விவசாயிகளுக்கும் 6,000 ரூபாய்...' பயனளிக்குமா மோடியின் புதிய திட்டம்?

2006-ம் ஆண்டு மத்திய அரசிடம் எம்.எஸ்.சுவாமிநாதன் கொடுத்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதாக 2014-ம் ஆண்டே பிரதமர் மோடி சொல்லியிருந்தார். அதை விரைந்து அமைக்க வேண்டும். விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல திட்டங்களையும் மத்திய அரசு கவனிக்க வேண்டும்... என்பதே விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக இருக்கிறது. 

`அனைத்து விவசாயிகளுக்கும் 6,000 ரூபாய்...' பயனளிக்குமா மோடியின் புதிய திட்டம்?

ந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி, 2019 - 20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார். அதில், விவசாயிகளுக்கு சில திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. ரூபாய் 75,000 கோடி செலவில் குறு விவசாயிகளுக்கு, 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பயனடைவார்கள். இது, 3 தவணைகளாக 2,000 வீதம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். 22 விவசாயப் பொருள்களின் ஆதார விலை 50 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிராமங்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பால் உற்பத்தியை அதிகரிக்க மற்றும் பசு பராமரிப்பை உறுதிசெய்ய `காமதேனு ஆயோக்' எனும் சிறப்புத் திட்டமும் புதிதாக அறிவிக்கப்பட்டது. மேலும், கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றும் அதில் கூறப்பட்டது. இதன்படி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான தகுதிப் பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு. 

விவசாயி

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். பிரதமராகப் பதவியேற்ற மோடி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. பதவியேற்ற 24 மணி நேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூடியது. அந்தக் கூட்டத்தில் நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்தும் மற்றும் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. இறுதியாக, ஒரு சில தேர்தல் வாக்குறுதி திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்தது. அதன்படி ஏழை விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அன்றே ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னர் வெளியிடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அது இப்போது தளர்த்தப்பட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வரம்புகள் குறித்த அறிவிப்புகள் இன்னும் ஏதும் வெளியாகவில்லை. 

சிறு குறு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க முன்னர் வரையறுக்கப்பட்ட சில நிபந்தனைகளை நினைவுகூர்வதும் அவசியமாகிறது. இந்தத் திட்டப்படி, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இந்தத் தொகை மூன்று தவணையாக வழங்கப்படும். இதைப் பெறுவதற்கு நிறைய வரையறைகள் இருக்கின்றன. கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் கொண்ட குடும்பமாகவும் 2 ஹெக்டேருக்குள்ளும் விவசாயிக்கு நிலம் இருக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர்கள், மியூச்சுவல் பண்ட், இன்ஷூரன்ஸ் கம்பெனி ஆகியவற்றில் முதலீடு செய்திருப்பவர்களுக்கும் இந்தத் திட்டத்தில் பணம் வழங்கப்படாது. மத்திய, மாநில அமைச்சர்கள் முதல் மாநிலத்தில் இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வரை யாருக்கும் இந்தப் பணம் கிடையாது. மத்திய, மாநில அமைச்சகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், கடந்த ஆண்டில் வருமான வரி கட்டியவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், கணக்கர்கள், கட்டடக் கலைஞர்கள் எனப் பூர்வீகமாக இயங்கி வரும் நபர்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்தத் திட்டத்தில் பணம் வழங்கப்பட மாட்டாது. மேற்கண்டப் பிரிவுகளில் பிரிவு 4 மற்றும் குரூப் டி ஊழியர்கள் இதில் அடங்கமாட்டார்கள். இதேபோல விவசாயிகள் பலருக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மட்டுமே பணம் வழங்கப்படும். இவ்வாறு அந்த வரையறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விதி தொடர்ந்தால், அனைத்து விவசாயிகளும் நிதி உதவி பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் மத்திய அரசும் தகுதியுடையோரின் பட்டியலைத் தயாரிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. 

விவசாயம்

கடந்தமுறை அறிவிக்கப்பட்ட நிதியுதவி திட்டத்துக்கு, "மத்திய அரசின் விதிகளைப் பார்த்தால் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் ஒரு குடும்பத்துக்கு மட்டுமே வழங்கப்படும். அதன்படி இந்தியாவிலேயே குறைவான விவசாயிகளுக்கு மட்டும்தான் கிடைக்கும். விவசாயிகள் கமிஷனை அமைக்கச் சொல்லி பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். 2006-ம் ஆண்டு மத்திய அரசிடம் எம்.எஸ்.சுவாமிநாதன் கொடுத்த அறிக்கையை அப்போதைய காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டுவிட்டது. 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி விவசாய கமிஷனை அமைப்பதாகச் சொன்னார். ஐந்து ஆண்டுகள் முடிவடையும் தருணம் வரை அமைக்கவில்லை. இரண்டு அரசுகளும் மாற்றி மாற்றி விவசாயிகளை வஞ்சித்துக்கொண்டே வருகின்றன. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த மறுப்பது, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுப்பது எனப் பலமுறை விவசாயிகள் நடத்தப்பட்டிருக்கிறார்கள். இப்போது அறிவித்திருக்கும் பட்ஜெட்டில் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்று சொல்வதை எப்படி ஏற்பது? எதை வைத்து இரட்டிப்பாக்கப்போகிறார்கள், 2 ஹெக்டேர் நிலத்துக்கு நிதி உதவி என்பதை எப்படி ஏற்கமுடியும், 3 ஹெக்டேர் மானாவாரி நிலம் வைத்திருப்பவர் என்ன செய்வார். 2 ஹெக்டேர் இறவை நிலம் வைத்திருப்பவர் வருமானத்துடன், நிதி உதவியும் சேர்த்து வாங்கிக் கொள்வார். முறைப்படுத்தாமல் எல்லா விதமான திட்டங்களையும் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள்" என்று அப்போதே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மோடி

2006-ம் ஆண்டு மத்திய அரசிடம் எம்.எஸ்,சுவாமிநாதன் கொடுத்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதாக 2014-ம் ஆண்டே பிரதமர் மோடி சொல்லியிருந்தார். அதை விரைந்து அமைக்க வேண்டும். விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல திட்டங்களையும் மத்திய அரசு கவனிக்க வேண்டும்... என்பதே விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக இருக்கிறது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என முன்னர் உறுதிமொழி கொடுத்திருந்தார் பிரதமர் மோடி. அதற்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் முக்கியம்.


டிரெண்டிங் @ விகடன்