‘6 நாள்களாக முடியாததை 6 நிமிடங்களில் முடித்துவிட்டார்’- மாணவர்களை நெகிழவைத்த ஜெகன்மோகன் ரெட்டி | YSR jagan mohan reddy helps cancer patient on road

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (05/06/2019)

கடைசி தொடர்பு:11:33 (07/06/2019)

‘6 நாள்களாக முடியாததை 6 நிமிடங்களில் முடித்துவிட்டார்’- மாணவர்களை நெகிழவைத்த ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, அம்மாநிலத்துக்கு நிறைய புதிய திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். இவரின் செயல் திட்டங்களால் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி

விசாகப்பட்டினத்தில் உள்ள சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு நேற்று சென்றுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. அவரைப் பார்த்துவிட்டு, விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வரும்போது, விமான நிலையத்தின் வெளியில் சில கல்லூரி மாணவர்கள் கையில் பதாகைகளுடன் நின்றுகொண்டு, முதல்வரின் கவனம் ஈர்த்துள்ளனர். அதனைக் கண்ட ஜெகன்மோகன் ரெட்டி, உடனடியாக காரை விட்டு இறங்கி மாணவர்களிடம் சென்று விசாரித்துள்ளார்.

மாணவர்களை சந்தித்த ஜெகன்

அப்போது, ‘ எங்கள் நண்பன் நீரஜ்ஜுக்கு ரத்தப் புற்றுநோய் உள்ளது. அதனால், அவன் தற்போது கல்லூரிக்கு வருவதில்லை. ஹைதராபாத்தில் உள்ள ஒரு கேன்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறான். நீரஜ்ஜின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அதனால், அவனது மருத்துவச் செலவுகளை அவர்களால் செய்ய முடியவில்லை. அரசு ஏதேனும் உதவி செய்தால், எங்கள் நண்பன் பிழைத்துக்கொள்வான்” என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட ஜெகன்மோகன் ரெட்டி, உடனடியாக  விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து, நீரஜ்ஜுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆந்திர அரசு சார்பாக அந்த மாணவனுக்கு ரூ.20,00,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

உதவிக்கேட்ட மாணவர்கள்

இதுபற்றிப் பேசிய பெண் ஒருவர்,” நாங்கள் அனைவரும் முதல்வரின் கவனம் ஈர்ப்பதற்காகவே இங்கு நின்றிருந்தோம். எங்களைப் பார்க்கக்கூட மாட்டார் என நினைத்திருந்த நிலையில், அவர் காரில் இருந்து இறங்கிவந்து எங்களின் குறை கேட்டது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நீரஜ், கடந்த ஒரு வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு ஆபரேஷன் செய்ய 20 லட்சம் செலவாகும் எனக் கூறிவிட்டனர். பணத்துக்காக எங்கள் நண்பரின் உயிர் போகக் கூடாது என்பதால், நாங்கள் ஒரு வாரமாக சாலைகளில் சுற்றித்திரிந்து மக்களிடம் உதவிக் கேட்டு வருகிறோம். இன்று, முதல்வர் விசாகப்பட்டினம் வருவதை அறிந்து இங்கு வந்து நின்றோம். ஆறு நாள்களில் கிடைக்காத அந்தப் பணத்தை வெறும் ஆறு நிமிடங்களில் அளித்துவிட்டுச் சென்றுவிட்டார். அவருக்கு எப்படி நன்றி கூறுவது என்றே எங்களுக்குத் தெரியவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். 


அதிகம் படித்தவை