`தண்ணீர் கேன்களுக்கு பூட்டு; 10 நாள்களில் ஒருமுறைதான் விநியோகம்!' - வறட்சியில் வாடும் ராஜஸ்தான் | Rajasthan villagers lock their water

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (05/06/2019)

கடைசி தொடர்பு:17:30 (05/06/2019)

`தண்ணீர் கேன்களுக்கு பூட்டு; 10 நாள்களில் ஒருமுறைதான் விநியோகம்!' - வறட்சியில் வாடும் ராஜஸ்தான்

மிழ்நாட்டில் மட்டுமில்லாமல், இதர மாநிலங்களிலும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் இருக்கும்  ஹர்தா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பரஸ்ரம்புரா கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் 10 நாள்களுக்கு ஒருமுறைதான், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் கேனில் நிரப்பப்பட்டிருக்கும் நீரைச் சிலர் திருடிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

தண்ணீர் பஞ்சம்

10 நாள்களுக்கு ஒருமுறை கிடைக்கும் தண்ணீரை அப்பகுதி மக்கள் கோன்களில் சேகரித்து, எஞ்சியுள்ள நாள்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையினால், ஒருவர் மற்றொருவர் வீட்டிலிருந்து தண்ணீரை திருடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதால், பஞ்சத்தைத் தாண்டிய சோகம் அவர்களைத் தாக்கியுள்ளது. தங்கத்தைவிடத்  தண்ணீர் அதிக விலை மதிப்புள்ள பொருளாக மாறியுள்ளதால், அதைப் பத்திரமாக பூட்டிப் பாதுகாத்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட் கூறுகையில், ``பரஸ்ரம்புரா கிராமத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு விரைவில் போக்கப்படும். தற்போதைய நிலையைத் தொடராமல், இரண்டு அல்லது மூன்று நாள்கள் இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் பல மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை தலைதூக்கி இருக்கும் நிலையில், மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் `ஜல் சக்தி' என்ற புதிய துறை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.