நிபா வைரஸை எப்படிக் கையாள்கிறது கேரளா? - வீடு வீடாகச் செல்லும் சுகாதாரத்துறை! | How kerala faced nipha virus

வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (06/06/2019)

கடைசி தொடர்பு:10:19 (06/06/2019)

நிபா வைரஸை எப்படிக் கையாள்கிறது கேரளா? - வீடு வீடாகச் செல்லும் சுகாதாரத்துறை!

கடந்த வருடம் கேரள மாநிலத்தை மிரட்டிய நிபா வைரஸ், இந்த ஆண்டு மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆழப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவருக்குத்தான் முதன் முறையாக நிபா வைரஸ் அறிகுறி தென்பட்டுள்ளது. அறிகுறியைத் தொடர்ந்து, அவர் ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார். மாணவரின் ரத்த மாதிரி, புனேயில் உள்ள வைராலஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில், அவருக்கு வைரஸ் தாக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நிபா வைரஸ்

இதனைத் தொடர்ந்து, நிபாவால் பாதிக்கப்பட்ட மாணவர் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து, தற்போது வடக்கன் பறவூர் மன்னம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு புறம், வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கையும் கடுமையாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நிபா வைரஸ் தாக்கத்தால், கடந்த வரும் ஏற்பட்ட முன் அனுபவத்தினால், இந்த வருடம் அதை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாண்டுவருகிறது கேரள சுகாதாரத் துறை. நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் எச்சில், ரத்தம், சிறுநீர் போன்றவற்றின்மூலம் பிறருக்கு இந்த வைரஸ் பரவுகிறது. அதனால், நோயாளி தனி அறையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்கள் முழுப் பாதுகாப்புடன் அறையினுள் அனுமதிக்கப்படுகிறார்.

நிபா வைரஸ்

நோயாளியின் உறவினர்களுக்கும் இதே கட்டுப்பாடுதான். அவர்கள், நோயாளியை நேரடியாகத் தொடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவரைப் பார்த்துக்கொள்ள ஒரு உறவினர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். நோயாளியின் உறவினர்கள், அவருக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள், செவிலியர் போன்றவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தவிர, காய்ச்சல் மற்றும் நிபா அறிகுறியால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வாகன ஓட்டுநர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோயாளி பயன்படுத்திய உடை, பெட்ஷீட் போன்றவற்றைப் பிறர் தொட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபாவால் பாதிக்கப்பட்ட நோயாளி இருக்கும் அறைக்கு அருகில் பிறர் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், நோயாளியுடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களும் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். 

வைரஸ்

பொது நிகழ்ச்சிகள், திருமணம் போன்றவற்றில் மக்கள் அதிகமாகக் கூடவேண்டாம் என்றும், நீண்ட தூரங்களைத் தவிர்த்து பெரும்பாலும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும்,  விலங்குகளிடமிருந்து தூரமாகவே இருக்க வேண்டும் என்றும் கேரள அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதியானதும், சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்று விவரங்களை அறிகின்றனர். பின்னர், தினமும் சென்று நோயாளியின் வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பவர்களையும் கண்காணித்துவருகின்றனர்.  ஒருவேளை, நிபாவால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினருக்கும் வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறி இருந்தால், உடனடியாக அந்தப் பகுதி முழுவதும் சோதனை நடைபெறுகிறது. கேரள மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் பணியாற்றும் அதிகாரிகளும் இரவு பகலாக வேலைசெய்து வருகின்றனர்.