`மகளின் திருமணத்துக்காக 860 மரங்களை வெட்டிய தந்தை' - வனத்துறை அளித்த `சரியான’ தண்டனை | Man cut 860 trees for daughter marriage

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (06/06/2019)

கடைசி தொடர்பு:10:50 (06/06/2019)

`மகளின் திருமணத்துக்காக 860 மரங்களை வெட்டிய தந்தை' - வனத்துறை அளித்த `சரியான’ தண்டனை

தஸ்ரத் கார்டே

Photo Credit:mid-day.com

மகளின் திருமணச் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால், மரங்களை வெட்டிய நபருக்கு அதற்கேற்ற வகையில் தண்டனை கொடுத்திருக்கிறது வனத்துறை. இந்தச் சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தின் பட்லாபூர் பகுதியில் நடந்திருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த தஸ்ரத் கார்டே  (Dasharath Kurhade) என்பவர், அவர் வசித்துவந்த இடத்துக்கு அருகே இருந்த பெரும்பாலான மரங்களைக் கடந்த சில நாள்களுக்கு முன்னால் வெட்டியிருக்கிறார். எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், இயந்திரத்தின் உதவியால் இரண்டே நாள்களில்  மரங்கள் அனைத்தையும்  வெட்டி வீழ்த்தியிருக்கிறார். விஷயம் அறிந்து வந்து இடத்தைப் பார்வையிட்ட வனத்துறையினர், மொத்த இடமும் காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். மரங்கள் இருந்த இடம் அவரது சொந்த இடம்தான் என்றாலும் அவற்றை வெட்ட அவர் முறையாக அனுமதி வாங்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ``தகவல் கிடைத்தவுடன், எங்கள்  அதிகாரிகள் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க அங்கே விரைந்திருக்கிறார்கள். ஆனால் அவர், அதற்கு முன்னரே அனைத்து மரங்களையும் வெட்டியிருந்தார். அதில் பல மரங்கள் குறைந்த வயதுடையவை. மகாராஷ்டிரா மாநிலத்தின் மரம் அழிப்பு தடுப்புச் சட்டம் 1964-ன் கீழ் அவர்மீது நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்" என வனத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஜிதேந்திரா ராம்கோகர் தெரிவித்திருக்கிறார்.

வனத்துறை

Photo Credit:mid-day.com

பிறகு, அவரது செயலுக்குத் தண்டனையாக, அடுத்த நான்கு மாத காலத்துக்குள் வெட்டியதை விடவும் இருமடங்கு மரங்களை அதே இடத்தில் நட வேண்டும் எனவும், அதைச் செய்ய மறுத்தால், மரம் நடுவதற்கு ஆகும் செலவை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வனத்துறை உத்தரவிட்டிருக்கிறது. '40 வருடங்களுக்குப் பிறகு எங்களின் குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம். ஆனால், அதை நடத்தத் தேவையான பணம் என்னிடம் இல்லை. எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை. ஆகவேதான் மரத்தை வெட்டி விற்றோம். எங்களுக்கு அது குற்றம் என்பதுகூடத் தெரியாது. தண்டனை கொடுங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அபராதம் செலுத்த பணம் எங்களிடம் இல்லை' என தஸ்ரத் கார்டே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Credit:.mid-day.com


அதிகம் படித்தவை