`என் பிள்ளைகளை வெட்ட வேண்டாம்!’ - திம்மக்கா பாட்டியின் கோரிக்கையால் திட்டத்தை மாற்றிய முதல்வர் | karnataka CM Drop the project road widening project

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (06/06/2019)

கடைசி தொடர்பு:12:10 (06/06/2019)

`என் பிள்ளைகளை வெட்ட வேண்டாம்!’ - திம்மக்கா பாட்டியின் கோரிக்கையால் திட்டத்தை மாற்றிய முதல்வர்

கர்நாடகாவின் பேஜ்பள்ளி - ஹலகுரு பகுதியில் சாலையை விரிவு படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், அங்குள்ள நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தான் வளர்த்த மரங்களுடன் திம்மக்கா

மரங்களை வெட்டுவதை அறிந்த `சாலுமரத’ திம்மக்கா மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். திம்மக்கா கர்நாடகாவின் குமரஹள்ளியைச் சேர்ந்தவர். தன் சொந்த ஊரிலிருந்து சுமார் 4 கி.மீ வரை சாலையின் இரு புறங்களிலும் 384 ஆலங்கன்றுகளை நட்டு தற்போது வரை அதைப் பாதுகாத்து வருகிறார். தனக்குப் பிள்ளைகள் யாரும் இல்லாததால் இந்த மரங்களை தன் பிள்ளைகளாக வளர்த்து வருவதாக திம்மக்கா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். தற்போது தனக்கு 107 வயது ஆன நிலையிலும் தொடர்ந்து மரங்கள் நடும் சேவையைச் செய்து வருகிறார். இவரின் பெயருக்கு முன்னால் உள்ள `சாலுமரத’ என்பதற்கு `தன் வாழ்நாள் முழுவதும் மரங்களின் மீதான காதல் குறையாமல் வாழ்பவர்’ என அர்த்தம்.

கர்நாடகா முதல்வர் குமாரசாமி

Photo Credit: udayavani

இந்நிலையில் பேஜ்பள்ளி - ஹலகுரு பகுதியில் அமையவுள்ள புதிய சாலையால் தான் வளர்த்த 384 ஆலமரங்களை வெட்டவுள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளார். பின்னர் உடனடியாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ``நான் 1960-ம் ஆண்டில் இந்த அனைத்து ஆலங்கன்றுகளையும் நட்டேன். அவற்றை என் பிள்ளைகள் போல் வளர்த்து வருகிறேன். நான் வளர்த்த மரங்களை வெட்ட விடமாட்டேன். அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் திட்டத்தையும் அனுமதிக்கமாட்டேன். அப்படி அனுமதித்தால் நிறைய இயற்கை வளங்கள் பாதிக்கப்படும்’ எனக் கூறினார்.

குடியரசு தலைவருக்கு ஆசிர்வாதம் செய்த திம்மக்கா

மரங்களை வெட்டக் கூடாது என்ற திம்மக்காவின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் குமாரசாமி, அந்தத் திட்டத்துக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளை அழைத்து உடனடியாகச் சாலை அமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இது பற்றி பேசியுள்ள அவர்,``திம்மக்கா அந்த மரங்களை தன் பிள்ளைகளைப் போல வளர்த்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. எனவே, அந்தப் பகுதியில் உள்ள மரங்கள் பாதிக்கப்படாதவாறு சாலை அமைக்க புதிய திட்டங்களைக் கொண்டுவர உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். தன் வாழ் நாள் முழுவதும் மரங்கள் நட்டு சமூக சேவை செய்து வந்த `சாலுமரத’ திம்மக்காவுக்கு இந்த வருடம் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 


அதிகம் படித்தவை