ரெப்போ விகிதம் குறைப்பு: வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்! | RBI cuts 25 bps repo rate!

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (06/06/2019)

கடைசி தொடர்பு:13:45 (06/06/2019)

ரெப்போ விகிதம் குறைப்பு: வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்!

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றபின், ரெப்போ விகிதம் குறைக்கப்படுவது மூன்றாவது முறையாகும். இந்த ஆண்டில் பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம், மூன்றாவது முறையாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தை ரெப்போ விகிதம் என்பார்கள். நாட்டின் பணவீக்க விகிதத்தை கருத்தில்கொண்டு இந்த வட்டி விகிதம் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டுவருகிறது. ரெப்போ விகிதத்தை 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. 

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றபின் ரெப்போ விகிதம் குறைக்கப்படுவது, இது மூன்றாவது முறையாகும். இந்த ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம், மூன்றாவது முறையாகத் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.50 சதவிகிதத்திலிருந்து 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6.25 சதவிகிதம் என்ற அளவிற்கு வந்து, மீண்டும் ஏப்ரல் மாதத்தில் 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6 சதவிகிதம் என்ற நிலைக்கு வந்தது. தற்போது, இன்று மீண்டும் அதில் 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரெப்போ விகிதம் 5.75 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
 
ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால், வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வீட்டுக் கடன், வாகனக்கடன் வாங்கியவர்களுக்கான மாதாந்தர தவணைத் தொகை குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, வங்கிக்கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.