10,000 ரூபாய் கடன் வாங்கிய தந்தை - கொடூரமாகக் கொல்லப்பட்ட 3 வயது குழந்தை#JusticeForTwinkle | 3-year-old Twinkle brutally murdered in up

வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (06/06/2019)

கடைசி தொடர்பு:14:04 (06/06/2019)

10,000 ரூபாய் கடன் வாங்கிய தந்தை - கொடூரமாகக் கொல்லப்பட்ட 3 வயது குழந்தை#JusticeForTwinkle

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர், பன்வாரிலால் சர்மா. அவருக்கு ட்விங்கிள் சர்மா என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த மே 31-ம் தேதியன்று, குழந்தை ட்விங்கிள் திடீரென காணாமல் போயுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

தன் வீட்டுக்கு அருகில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் குழந்தையைத் தேடிவிட்டு, எங்கும் கிடைக்காமல்போகவே, டப்பால் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அவரின் பெற்றோர். இந்நிலையில், அலிகார் பகுதியில் உள்ள ஒரு குப்பை மேட்டில் நேற்று தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், துப்புரவுப் பணியாளர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

பாலியல் வன்கொடுமை

சம்பவ இடத்துக்கு வந்த பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த குப்பை மேட்டில், ட்விங்கிளின் உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. உடனடியாக சிறுமியின் பெற்றோர்களுக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ட்விங்கிளின் உறவினர்கள், சடலத்துடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர்.

கடன் கொடுத்து கொலை செய்தவர்கள்

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். குழந்தை இறந்ததைவிட ,அவர் கொல்லப்பட்ட விதம்தான் கொடுமையிலும் கொடுமை. யாரோ ட்விங்கிளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால், குழந்தை சுய நினைவை இழந்து மயங்கியுள்ளது. பின்னர், ட்விங்கிளின் ஒரு கையை வெட்டியுள்ளனர். ஒரு கண்ணைத் தோண்டி எடுத்துள்ளனர். இறுதியாக, குழந்தை அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது உடலில் ஆசிட் ஊற்றி கொடூரமாகக் கொலை செய்து குப்பையில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

சமூக வலைதள ட்ரெண்டிங்

இதுபற்றிப் பேசியுள்ள ட்விங்கிளின் தாத்தா, “ மே 31-ம் தேதி இரவு எங்கள் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரெனக் காணாமல் போனாள். நாங்கள் எங்கு தேடியும்  கிடைக்கவில்லை. எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள ஸாகித் என்பவரின் மீதுதான் சந்தேகமாக உள்ளது. நாங்கள் அவரிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தோம். அவர் அதை திருப்பிக் கேட்கும்போது, எங்கள் அனைவரையும் கொலை செய்துவிடுவேன் என்ற அளவுக்கு மிரட்டினார். அதனால், எங்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையே பெரிய சண்டை வந்தது. சண்டை ஓய்ந்து சில மணி நேரங்களில்தான் குழந்தை காணாமல்போனாள்” என்று தெரிவித்துள்ளார். 

இதன் அடிப்படையில், ஸாகித் மற்றும் அவருக்கு உதவி செய்தவர் என இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், ட்விங்கிளை அவர்கள்தான் கொன்றார்கள் என்பதை  ஒப்புக்கொண்டுள்ளனர்.  ‘ நாங்கள் புகார் அளித்த உடனேயே குழந்தையைத் தேடியிருந்தால், தற்போது என் மகள் இறந்திருக்க மாட்டாள். காவல் துறையினரின் அலட்சியமும் என் மகள் இறப்புக்கு காரணம்' என ட்விங்கிளின் தந்தை தெரிவித்துள்ளார்.  ட்விங்கிளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் குரல்கள் வலுத்துவருகின்றன.