ஆன்லைன் பணப்பரிமாற்றங்களுக்குக் கட்டணமில்லை! - ரிசர்வ் வங்கி அதிரடி | RBI removes NEFT, RTGS payment charges

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (06/06/2019)

கடைசி தொடர்பு:15:20 (06/06/2019)

ஆன்லைன் பணப்பரிமாற்றங்களுக்குக் கட்டணமில்லை! - ரிசர்வ் வங்கி அதிரடி

இன்றைய நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. ரெப்போ விகிதம் குறைக்கப்பட்ட அறிவிப்பு முதலில் வெளியானது. அடுத்ததாக, ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் நெஃப்ட் (NEFT) முறைகளில் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ரிசர்வ் வங்கி

ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு மக்களை மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திவந்தன. உதாரணத்திற்கு, எஸ்.பி.ஐ வங்கியில் நெஃப்ட் முறையிலான பணப்பரிமாற்றத்திற்கு ரூ.1 முதல் ரூ.5 வரை வசூலிக்கப்படுகிறது. ஆர்டிஜிஎஸ் முறை பணப்பரிமாற்றத்திற்கு ரூ.5 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டணங்களால் ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. எனவே, ஆன்லைன் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்விதமாக, ஆர்டிஜிஎஸ், நெஃப்ட் முறையிலான பணப்பரிமாற்றத்தை இலவசமாக அனுமதிக்கும்படி வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, ஒரு வார காலத்திற்குள் அனைத்து வங்கிகளுக்கும் அறிக்கை அனுப்பப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

ஏடிஎம்

இதற்கிடையே, ஏடிஎம்-களில் வசூலிக்கப்படும் பல்வேறு வகையிலான கட்டணங்கள் குறித்தும் ரிசர்வ் வங்கி ஆய்வுசெய்யுமென்று கூறப்படுகிறது. எனவே, ஏடிஎம்வழி பரிமாற்றக் கட்டணங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளன.