`11 டன் குப்பைகள், 4 மனித உடல்கள்!' - எவரெஸ்ட் சிகரத்தை சுத்தம் செய்த நேபாள அரசு | 11 tons of garbage in Mount Everest

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (06/06/2019)

கடைசி தொடர்பு:16:20 (06/06/2019)

`11 டன் குப்பைகள், 4 மனித உடல்கள்!' - எவரெஸ்ட் சிகரத்தை சுத்தம் செய்த நேபாள அரசு

டந்த இரண்டு மாதத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் 11 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், நான்கு உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

எவரெஸ்ட்

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம், கடல் மட்டத்துக்கு மேல் 8,848 மீட்டர்கள் உயரம் கொண்டது. மலையேற்ற வீரர்களின் அதிகபட்ச கனவு எவரெஸ்ட் சிகரத்தை ஏறிவிட வேண்டும் என்பதுதான். அந்த அளவுக்கு எவரெஸ்ட் சிகரப் பயணம் மிகப்பெரிய சவால்களைக் கொண்டது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் அதிகமான வீரர்களும், அவர்களுக்கு உதவியாக உள்ளூர் ஷெர்பாக்களும் மலையேறுகிறார்கள். 

இப்படி மலையேறுபவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர், மது பாட்டில்கள், பேட்டரிகள், உணவுப் பொருள்கள், சமையல் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், முதலுதவிப் பொருள்கள் எனப் பலவிதமான பொருள்களை தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். அவற்றை முழுமையாக பயன்படுத்திய பின்னர், அங்கேயே விட்டுவிட்டுக் கீழிறங்கி விடுகின்றனர். இதனால் ஆண்டுக்கு ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் அதிகமாகத் தொடங்கியுள்ளன. இதனால் சுற்றுச்சூழல் மிக அதிகமான அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் மலையேறும் வீரர்கள் கீழிறங்கிய பின்னர் நேபாள அரசு ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து வருகிறது, இந்த முறை நேபாள ராணுவத்துடன் நேபாள மலையேறுதல் சங்கம், சுற்றுலாத்துறை அமைச்சகம் மற்றும் எவரெஸ்ட் மாசுக் கட்டுப்பாட்டு அமைப்பு இணைந்து, ஏப்ரல் 14-ம் தேதியில் இருந்து சுத்தம் செய்யும் பணியைத் துவங்கியது. இப்பணி நேற்றோடு முடிவடைந்தது. 

இதில், மொத்தமாக 11 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 4 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சேகரித்த குப்பைகள் காத்மாண்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்தக் கழிவுப் பொருள்கள் மறு சீரமைக்கப்பட இருக்கின்றன. அந்த உடல்கள், காத்மாண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்துவருகிறது. மலையேற்ற வீரர்கள், தங்களுடன் வருபவர்கள் யாராவது இறந்துவிட்டால், அவர்கள் உடல்களைக் கீழே சுமந்து வர இயலாத காரணத்தால் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.