656 மில்லியன் லிட்டர் நீர் சேமிப்பு! - மாற்றி யோசித்த மாருதி சுசூகி | Maruti Suzuki Saved 656 Million Litres Of Water

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (06/06/2019)

கடைசி தொடர்பு:18:49 (06/06/2019)

656 மில்லியன் லிட்டர் நீர் சேமிப்பு! - மாற்றி யோசித்த மாருதி சுசூகி

மாருதி சுசூகி

ஒரு சிறிய ரக காரை உற்பத்தி செய்ய சுமார் 4.44 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது. அதேபோல பயன்படுத்தப்பட்ட காரை சுத்தப்படுத்த (வாட்டர் வாஷ்) அதிகமான அளவில் நீர் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் தண்ணீர் பிரச்னையை மனதில் கொண்டு பிரபல கார் தயாரிக்கும் நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா செய்திருக்கும் செயல் மற்றும் அதன் மூலமாகக் கிடைத்திருக்கும் ரிசல்ட் எல்லோரையும் திரும்பிப் பார்க்க  வைத்திருக்கிறது.

இந்நிறுவனத்துக்கு இந்தியாவிலுள்ள குறிப்பிட்ட 1,750 நகரங்களில் சுமார் 3,600 சர்வீஸ் சென்டர்கள் இருக்கின்றன. இந்த சர்வீஸ் சென்டர்களில் கார் சர்வீஸ்களுக்கு டிரை கிளீனிங் நடைமுறையை மேற்கொண்டிருக்கிறது. இதன்மூலம் கடந்த 2018-19-ம் ஆண்டில், 69 லட்சம் வாகனங்களுக்குச் செய்யப்பட்ட டிரைவாஷ் மூலம் 656 மில்லியன் லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தியிருப்பதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது இதற்கு முந்தைய 2016-17-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 203% அதிகமாகும். அந்த ஆண்டில் 216 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே சேமிக்கப்பட்டது.  

இதனால் தண்ணீர் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பெங்களூரில் 4,77,270 கார்கள் டிரை வாஷ் செய்ததிலிருந்து 45.34 மில்லியன் லிட்டர் தண்ணீர் மிச்சமாகியிருக்கிறது. அதேபோல, டெல்லியில் 3,74,024 கார்களை டிரைவாஷ் செய்ததிலிருந்து 35.53 மில்லியன் லிட்டர்கள், ஹைதராபாத்தில் 3,52,546 கார்களை டிரைவாஷ் செய்ததிலிருந்து 33.49 மில்லியன் லிட்டர்கள், நாக்பூரில் 1,62,446 கார்களை டிரைவாஷ் செய்ததிலிருந்து 15.43 மில்லியன் லிட்டர்கள், சென்னை 1,40,462 கார்களை டிரைவாஷ் செய்ததில் 13.34 மில்லியன் லிட்டர்கள் என மொத்தம் 160 மில்லியன் லிட்டர் தண்ணீர் கடந்த 2018-19-ம் ஆண்டில் மட்டும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய நிர்வாக இயக்குநர் பர்தோ பானெர்ஜி, ``இயற்கை வளங்களைக் காக்கும் விதமாக, பேப்பர் லெஸ் சேவைகள், டிரை வாஷ் போன்ற சேவைகளை மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் வாசகர்களின் அனுமதியுடன் அவர்களின் கார்களுக்கு டிரை வாஷ் முறை கடந்த ஓரிரு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் மூலம் கணிசமான அளவில் தண்ணீரை மிச்சப்படுத்தியிருக்கிறோம்" என்றார்.