மோடி, ஜெகன்மோகனுக்கு கைகொடுத்த `பி.கே.மேஜிக்’ - தேர்தல் வித்தகருடன் கைகோத்த மம்தா | Mamatha signs with the prashanth kishor

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (07/06/2019)

கடைசி தொடர்பு:10:05 (07/06/2019)

மோடி, ஜெகன்மோகனுக்கு கைகொடுத்த `பி.கே.மேஜிக்’ - தேர்தல் வித்தகருடன் கைகோத்த மம்தா

மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பல்வேறு கட்சிகள் களமிறங்கிவிட்டன. பல்வேறு மாநிலங்கள், அடுத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் 2021 -ல் நடைபெற உள்ள தேர்தலுக்காக தற்போதே தயாராகி வருகிறது.

மம்தா பானர்ஜி

அதில் முக்கியமாக,  தேர்தல் வித்தகர் என்று பெயர் பெற்ற பிரஷாந்த் கிஷோருடன் கைகோர்த்திருக்கிறார் மம்தா.  தேர்தலில் வெற்றிபெறுவதெல்லாம் ஒரு கணக்குதான். சரியான யுத்திகளின்மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பது பிரஷாந்த் கிஷோரின் கணக்கு. 2014 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு இவர் வகுத்துக்கொடுத்த யுத்தி கைகொடுத்தது. அதன் பின்னர்தான் பிரஷாந்த் கிஷோர் அரசியல் கட்சிகளின் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார்.

பாஜக

அதன் பின்னர், பீகாரில் நிதிஷ் குமாரின் வெற்றியில் பிரஷாந்த்  முக்கியப் பங்காற்றினார். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு அவரால் வெற்றியைப் பெற்றுத்தர முடியவில்லை. எனினும் அதே ஆண்டு, பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றிக்கு உதவினார். சமீபத்தில், ஆந்திர தேர்தலில் சூறாவளி வெற்றியைப் பதிவுசெய்த ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டிக்கும் இவர்தான் ஆலோசகராகச் செயல்பட்டு, தேர்தல் யுத்திகளை வகுத்துக்கொடுத்தார். 

ஜெகன் மோகன் ரெட்டி

இந்நிலையில், மம்தா பானர்ஜியும் பிரஷாந்த் கிஷோரைத் தனது ஆலோசகராக நியமித்திருக்கிறார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையின் முடிவில், பிரஷாந்த் கிஷோர் மம்தாவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்,  பிரஷாந்த் கிஷோருடன் மம்தா பணியாற்ற விரும்பினாராம். ஆனால், அப்போது உத்தரப்பிரதேசத் தேர்தலில்  காங்கிரஸுடன் பிரஷாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றியதன் காரணமாக, இந்தக் கூட்டணி சாத்தியப்படவில்லை. 

2014 -ம் ஆண்டு, பா.ஜ.க வெற்றிக்குக் காரணமான பி.கே. மேஜிக் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக வேலை செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.