20 வருடப் போராட்டம்; அரசின் பணியைச் செய்துமுடித்த தனி ஒருவன்! - ஒடிசாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் | Odisha Man Completes Bridge With Own Savings

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (07/06/2019)

கடைசி தொடர்பு:11:08 (07/06/2019)

20 வருடப் போராட்டம்; அரசின் பணியைச் செய்துமுடித்த தனி ஒருவன்! - ஒடிசாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

ஒடிசா மாநிலம் கெயோஞ்சர்  (Keonjhar) மாவட்டத்தில் உள்ளது ஹடதில்லி பஞ்சாயத்து. அங்குள்ள இரண்டு கிராமங்கள் நகரை நோக்கிச் செல்ல ஒரே ஒரு வழி மட்டும்தான் உள்ளது. அது, அவர்களே உருவாக்கிய மூங்கில் ஆற்றுப் பாலம். ஒவ்வொரு பருவ மழைக் காலத்தின்போதும் இந்தப் பாலம் உடைந்து விடுவதால், அதைத் தங்களால் சரிசெய்ய முடியவில்லை. எனவே, புதிதாக கான்கிரீட் பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என 20 வருடங்களாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒடிஷா பாலம்

PC : OdishaTV

ஆனால், இந்தக் கிராம மக்களின் கோரிக்கை சற்றும் ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. ஒரு வழியாக, அந்தப் பாலத்தைக் கட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். அதற்காக, 10 வருடங்களுக்கு முன்பு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கி, பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. தங்கள் பகுதிக்கு புதிய பாலம் வரப்போகிறது என்ற கிராம மக்களின் மகிழ்ச்சி கொஞ்ச காலம்கூட நீடிக்கவில்லை. பாலத்தின் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. காரணம் கேட்டதற்கு அரசு ஒதுக்கிய பணம் போதாததால், பணிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பாலம் கட்டியவர்

PC : OdishaTV

முன்பாவது மூங்கில் பாலத்தில் மக்கள் ஆற்றைக் கடந்துகொண்டிருந்தனர். ஆனால், புதிய பாலம் என்ற பெயரில் அது பாதியிலேயே நிறுத்தப்பட்டு கம்பிகள் நீட்டிக்கொண்டிருந்ததால், அப்பகுதி மக்கள் இன்னும் சிரமப்பட்டுள்ளனர். கட்டாமல் விட்ட பாதி பாலத்தை மூங்கில்கள் மட்டுமே தாங்கிக்கொண்டிருந்துள்ளது. இதைக் கவனித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர், தன் சொந்தச் செலவில் அந்த பாலத்தைக் கட்டி முடித்துள்ளார். 10 லட்சம் ஒதுக்கியும் நிதி போதவில்லை எனக் கூறிய அதிகாரிகளுக்கு மத்தியில், வெறும் இரண்டு லட்சத்தில் தடைபட்ட பாலத்தைக் கட்டியுள்ளார். வரும் ஜூன் இறுதி அல்லது ஜூலைக்குள் பாலத்தின் கட்டுமானம் முழுவதுமாக நிறைவடையும். தனி ஒருவனாக பாலத்தைக் கட்டி முடித்த அவருக்கு, பாராட்டுகள் குவிகின்றன. 

கட்டுமான பணி

PC : OdishaTV

இதுபற்றிப் பேசியுள்ள அவர், “ நான் நீண்ட காலமாக இந்த கிராம மக்களின் பிரச்னைகளைப் பார்த்துவருகிறேன். பாலம் கட்ட பல முறை கோரிக்கை வைத்தும் அது நிறைவேறவில்லை. இறுதியில், என் சொந்தச் செலவில் பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என முடிவுசெய்து, தற்போது இதைச் செய்துவருகிறேன். என் முடிவை குடும்பத்தினர் ஆதரித்தனர். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் என்னை நம்பி இல்லை. அதனால், நான் சேர்த்துவைத்திருந்த மொத்த பணத்தையும் பாலம் கட்ட கொடுத்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். 

“ சில நாள்கள் தாமதமானாலும், அரசு அந்தப் பாலத்தை கட்டி முடிக்கும். எங்கள் தரப்பிலிருந்து ஒரு குழு ஏற்கெனவே அந்த இடத்தைப் பார்வையிட்டுவிட்டது. விரைவில் பாலம் கட்டி முடிக்கப்படும்” என்று மாவட்ட ஆட்சியர் அசிஷ் தாக்ரே கூறியுள்ளார். 

 “அரசு சார்பில் கூறப்பட்டுள்ள இந்த அறிவிப்பு மிகவும் தாமதமானது. இதனால், எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. பாலத்தின்மீது சாலை அமைத்தால், மக்களின் போக்குவரத்து இன்னும் வசதியாக இருக்கும். அதையாவது முறையாகச் செய்து கொடுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளார், அந்த மக்கள் நேயர்.


அதிகம் படித்தவை