`முதலில் சிக்குவது சந்திரபாபு நாயுடுவும் அவரது மகனும்தான்!'- ஜெகன் எடுத்த சிபிஐ அஸ்திரம் | Y S Jagan Reddy has gave permission to Central agencies to carry out investigation.

வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (07/06/2019)

கடைசி தொடர்பு:14:22 (07/06/2019)

`முதலில் சிக்குவது சந்திரபாபு நாயுடுவும் அவரது மகனும்தான்!'- ஜெகன் எடுத்த சிபிஐ அஸ்திரம்

'சிபிஐ அமைப்பு தங்கள் மாநிலத்தில் விசாரணை நடத்தக் கூடாது' என ஆறு மாதங்களோ ஒரு வருடமோ தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. கடந்த இரண்டு வருடங்களாக, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நடந்துவந்த பெரும் போர், உலகம் அறிந்ததே. இருவருக்கும் இடையேயான மோதலின்போது, ஆந்திராவின் பல இடங்களில் சிபிஐ சோதனை  நடத்தப்பட்டது. 

சந்திரபாபு நாயுடு

இது பிடிக்காத சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்குள் சிபிஐ விசாரணை நடத்த தடை விதித்து அரசாணை வெளியிட்டார். அந்த நேரத்தில் சிபிஐ அதிகாரிகள்மீது தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால், தடைவிதிக்கப்பட்டதாகக் காரணம் கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த மே 30-ம் தேதி, ஆந்திராவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் அரசு விதித்த அரசாணையை ரத்துசெய்து, ஆந்திராவில் சிபிஐ நுழைய அனுமதி அளித்து, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். இதனால் சந்திரபாபு நாயுடுவின் மொத்த குடும்பமும் பீதியில் உறைந்துள்ளது.

அமராவதியைப்  புதிய தலைநகர் ஆக்கும் திட்டத்தில் சந்திரபாபு நாயுடு கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளார் என்பதுதான் ஜெகனின் முதல் குற்றச்சாட்டாக இருந்தது. அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருந்த நிலையில், தற்போது இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சி.பி.ஐ

2013-ம் ஆண்டு மே மாதம், சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ், முதன்முறையாக அரசியலில் காலடி எடுத்துவைத்தார். அதன் பிறகு அவர் ஆந்திராவில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு, முதலீடு என்ற பெயரில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இல்லாத நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, ரூ.21,000 கோடி மோசடி செய்ததாக லோகேஷ் மீது பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.   

ஆந்திரா முழுவதும் உள்ள பல்வேறு அரசு நிலங்களை சட்டத்துக்குப் புறம்பாக லோகேஷ் வாங்கிவைத்துள்ளதாக 2017-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், சிபிஐ-யில் புகார் அளித்தது. அந்தப் புகாரை சிபிஐ-யும் ஏற்றுக்கொண்டது. ஆனால், அப்போது ஆந்திராவில் சிபிஐ-க்கு தடைவிதித்திருந்ததால் வழக்கு விசாரிக்க முடியாமல் போனது. லோகேஷின் மனைவி ப்ரஹ்மணி 2011-ம் ஆண்டு சட்ட விதிகளை மீறி ஒரு பங்களா வாங்கியதாக அவரின் மீதும் சிபிஐ வழக்கு பதியப்பட்டது. 

ஜெகன்மோகன் ரெட்டி

சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான அமராவதிக்கு விசாகப்பட்டினத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, ஆந்திராவுக்குள் சிபிஐ நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதால், இவை அனைத்தின் மீதான விசாரணையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையில் ஊழல் உறுதிசெய்யப்பட்டால், முதலில் சிக்குவது சந்திரபாபு நாயுடுவும் அவரது மகனும் என கூறப்படுகிறது.

 சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த காரணத்தால், அவரின் பங்குக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான ரெய்டுகள் நடக்கும் என்றும் பேசப்படுகிறது. இதனால், நாயுடுவின் மொத்த குடும்பமும் அச்சத்தில் உள்ளது.