வங்கிக்கடன் மோசடிப் பட்டியலில் பா.ஜ.க இளைஞரணித் தலைவர்! | BJP youth wing chief Mohit Kamboj declared wilful defaulter

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (07/06/2019)

கடைசி தொடர்பு:15:50 (07/06/2019)

வங்கிக்கடன் மோசடிப் பட்டியலில் பா.ஜ.க இளைஞரணித் தலைவர்!

மும்பை பா.ஜ.க இளைஞரணித் தலைவரான மோஹித் காம்போஜ் என்பவரை, வங்கிக்கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவராக பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிவித்துள்ளது. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களில், வருமானம் இல்லாததால் திருப்பிச்செலுத்தாமல் இருப்பது ஒருவகை என்றால், வசதியிருந்தும் வேண்டுமென்றே செலுத்தாமல் இழுத்தடிப்பது இன்னொரு வகை. மோஹித் காம்போஜ் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்.

மோஹித் காம்போஜ்

மும்பை பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவரான மோஹித் காம்போஜ், அவ்யன் ஆர்னமென்ட்ஸ் என்ற நிறுவனத்துக்காக பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வங்கிக்கடன் பெற்றிருந்தார். ஆனால், அதை முறையாகத் திருப்பிச்செலுத்தாமல் இழுத்தடித்ததால் `வேண்டுமென்றே வங்கிக்கடனைக் கட்ட மறுப்பவர்' (wilful defaulter) என்ற பட்டியலில் அவரது பெயர் இணைக்கப்பட்டுள்ளது. 

மோஹித் காம்போஜ், சமீபத்தில்தான் தனது பெயரிலுள்ள காம்போஜ் என்ற வார்த்தைக்குப் பதிலாக பாரதியா என்ற வார்த்தையை இணைத்து மோஹித் பாரதியா என்று மாற்றம் செய்திருந்தார். சாதி, மதங்களால் பிரியாமல், பாரதம் என்ற கோட்பாட்டின்கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக இப்படி பெயர் மாற்றம் செய்ததாக அறிவித்தார். மேலும், தனது பெயர் மாற்றம் குறித்து மும்பை நகர் முழுவதும் பெரிய பெரிய பேனர்கள் வைத்து விளம்பரங்களும் செய்திருந்தார். 

பாங்க் ஆஃப் பரோடா

தற்போது வங்கிக்கடன் மோசடியில் சிக்கியுள்ள இவரது புகைப்படத்துடன், புதிய பெயரான மோஹித் பாரதியா என்பதையும் குறிப்பிட்டு, வேண்டுமென்றே வங்கிக்கடனைச் செலுத்தாதவராக பேங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது. இவரோடு சேர்த்து ஜிதேந்திர கபூர் என்பவரது பெயரையும் வங்கிக்கடன் மோசடிப்பட்டியலில் இணைத்துள்ளது. இதுகுறித்து மோஹித் பாரதியா, தான் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இல்லையென்றும், தான் செலுத்தவேண்டிய 76 கோடியைச் செலுத்திவிட்டதாகவும் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.