இந்திய வரலாற்றில் இது முதன்முறை! - திரும்பி பார்க்க வைத்த ஜெகன்மோகன் ரெட்டி | Andhra CM Y S Jagan Mohan Reddy will be appointing 5 Deputy Chief Ministers for the state

வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (07/06/2019)

கடைசி தொடர்பு:12:07 (08/06/2019)

இந்திய வரலாற்றில் இது முதன்முறை! - திரும்பி பார்க்க வைத்த ஜெகன்மோகன் ரெட்டி

இந்திய அரசியல் வரலாற்றை மாற்றி தன் அமைச்சரவையில் ஐந்து துணை முதல்வர்களை நியமித்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. குண்டூரில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்த கட்சிக்கூட்டத்தில் இது முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், கபூ சமூகத்தினர். இந்த ஐந்து பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஜெகனின் ஐந்து துணை முதல்வர்கள்.

ஜெகன்மோகன் ரெட்டி

இதில் நான்கு பிரிவினர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள், கபூ பிரிவினர் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம், விழிநகரம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக வாழ்கின்றனர். இந்தப் பகுதியில் வாழும் மக்களின் ஓட்டுதான் ஆந்திர அரசியலைத் தீர்மானிக்கிறது. சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் இவர்களுக்கு முறையாகக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்காததால் பெரும் போராட்டம் நடத்தினர். அந்த அனைத்துப் போராட்டமும் பின்னர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஓட்டாக மாறியது. 

நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய அரசு வழங்கும் அனைத்து இடஒதுக்கீடுகளும் உங்களுக்கு வழங்கப்படும் எனத் தெலுங்கு தேசம் கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி, என்னால் எது முடியுமோ அதை நிச்சயமாக உங்களுக்குச் செய்வேன் என்றும் கபூ மக்களின் வளர்ச்சி திட்டத்துக்காகத் தனியாக நிதி ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தார்.  

ஜெகன்மோகன் ரெட்டி

ஜெகன் தன் அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமித்துள்ளார். இவர்கள் அனைவரும் நாளை பதவியேற்கவுள்ளனர். 25 அமைச்சர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதற்குப் பிறகு, புதிய தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், தன் திட்டங்களை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இத்தனை துணை முதல்வர்களை நியமித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

ஆந்திர முதல்வரின் இந்தப் புதிய அரசியல் மாற்றத்துக்குக் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. வெறும் அரசியல் விளம்பரத்துக்காகவே அவர் இவ்வாறு செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர். ஒரு மாநிலத்தில் 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவது இந்திய வரலாற்றில் இது முதன்முறை. ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த நடவடிக்கை மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.


அதிகம் படித்தவை