`வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்!' விப்ரோ தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் அசிம் பிரேம்ஜி | Azim Premji, to call it a day on July 30

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (07/06/2019)

கடைசி தொடர்பு:18:40 (07/06/2019)

`வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்!' விப்ரோ தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் அசிம் பிரேம்ஜி

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி ஜூலை மாத இறுதியில் ஓய்வுபெறப்போவதாக தெரிவித்துள்ளார். விப்ரோ நிறுவனத்தைத் தொடங்கி 53 ஆண்டுகளாக வெற்றிகரமாக வழிநடத்திவந்த அசிம் பிரேம்ஜிக்கு அடுத்த மாதத்தில் 74-வது வயது தொடங்குகிறது. இந்த நிலையில், அடுத்த மாதத்தோடு தனது பணியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். வெஜிடபிள் ஆயில் தயாரிப்பு நிறுவனமாகத் தொழில்துறையில் கால்பதித்தவர், தற்போது பல லட்சம் கோடி மதிப்புள்ள மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உருவாக்கியுள்ளார்.

அசிம் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தில் அசிம் பிரேம்ஜியின் குடும்பத்துக்குச் சொந்தமான 74% பங்குகளில் 33% பங்குகளைத் தனது பெயரில் உள்ள அறக்கட்டளைக்கு ஏற்கெனவே அளித்துவிட்டார். பின்னர், ரூ.1.45 லட்சம் கோடி மதிப்புள்ள 34% பங்குகளையும் அறக்கட்டளைக்கே அளித்தார். இதன்மூலம் கிடைக்கும் டிவிடெண்ட், போனஸ் மற்றும் இதர நன்மைகள் இந்த அறக்கட்டளைக்கே சேரும். இன்றைய தேதியில், உலக அளவில் பில்கேட்ஸுக்கு அடுத்தபடியாக 27 பில்லியன் டாலரைத் தானமாகத் தந்திருக்கிறார் அசிம் பிரேம்ஜி.

விப்ரோ

அசிம் பிரேம்ஜியின் ஓய்வுக்குப்பின்னர், ஜூலை 31-ம் 2019 முதல் அவரின் மகன் ரிஷத் பிரேம்ஜி, விப்ரோ நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். நிறுவனத்தலைவர் பொறுப்பிலிருந்து அசிம் பிரேம்ஜி பதவி விலகினாலும், விப்ரோவின் நிறுவனராகவும், நிர்வாகக்குழுவின் இயக்குநர்களில் ஒருவராகவும் செயல்படுவார் எனத் தெரிகிறது.

தனது ஓய்வுமுடிவு குறித்து விப்ரோ ஊழியர்களுக்கு அசிம் பிரேம்ஜி எழுதியுள்ள கடிதத்தில், `கடந்த 1966-ம் ஆண்டு முதல் தற்போதுவரை விப்ரோ நிறுவனத்துக்கு தலைமைப் பொறுப்பேற்றது, எனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்' என்று நெகிழ்ந்திருக்கிறார்.