`அரை டஜன் கார்; ஆயிரம் லிட்டர் தண்ணீர்' - விராட் கோலிக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்! | Virat Kohli fined Rs 500 for washing cars with drinking water

வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (07/06/2019)

கடைசி தொடர்பு:18:07 (07/06/2019)

`அரை டஜன் கார்; ஆயிரம் லிட்டர் தண்ணீர்' - விராட் கோலிக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

இந்திய அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதே நம்பிக்கையில் இரண்டாவது போட்டியில் வரும் 9-ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் விராட். இப்படியான நிலையில், கோலிக்கு ஒரு சிறிய தர்மசங்கடம் உருவாகியுள்ளது. கோலி தற்போது டெல்லிக்கு அருகே உள்ள குருகிராமில் வசித்து வருகிறார். கார் பிரியர் என்பதால் தனது வீட்டில் அரை டஜன் கார்களை நிறுத்தி வைத்துள்ளார். இந்த கார்களால்தான் கோலிக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கோலி வீட்டுக்கு வந்த குருகிராம் மாநகராட்சி அதிகாரிகள், அங்கு அவரது உதவியாளர்கள் கார் கழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவருக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். 

விராட் கோலி

கார் கழுவியதற்கு எதற்கு அபராதம் என்கிறீர்களா.... வட மாநிலங்களில் வறட்சி அதிகமாகியுள்ளதால் குடிநீருக்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் டெல்லியும் தப்பவில்லை. டெல்லி குருகிராம் பகுதியும் கடும் வறட்சியில் சிக்கியுள்ளது. இதனால் சமீபத்தில் ``குடிநீரை வீணாக்கக் கூடாது. அப்படி வீணாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த எச்சரிக்கையை மீறித்தான் குடிநீரைக் கொண்டு கார்களை கோலியின் உதவியாளர்கள் சுத்தம் செய்துள்ளனர். இதற்காகத்தான் ரூ.500 அபராதம் விதித்துள்ளார்கள் அதிகாரிகள். ஆனால், கோலியின் வீடு மட்டும் இந்த தவற்றைச் செய்யவில்லை. அதேபகுதியில் வசிக்கும் இன்னும் சில பேர் வீடுகளுக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலி

கோலி ஒரு கார்பிரியர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவரது வீட்டில் பல்வேறு மாடல் கார்கள் உள்ளன. இந்த கார்களை எல்லாம் சுத்தம் செய்வதற்காக ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனம் DNA தெரிவித்துள்ளது. இதை அவரது பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் புகாராக தெரிவிக்கவே தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக்  கூறப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க