தந்தையின் கடனுக்காகக் கொல்லப்பட்ட உ.பி குழந்தை! - தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் விசாரணை | aligarh child murder to be investigated under NSA

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (07/06/2019)

கடைசி தொடர்பு:20:20 (07/06/2019)

தந்தையின் கடனுக்காகக் கொல்லப்பட்ட உ.பி குழந்தை! - தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் விசாரணை

கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இரண்டரை வயதுக் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட இருப்பதாகவும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் உத்தரப்பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது.

அலிகாரைச் சேர்ந்த இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று கழுத்து அறுக்கப்பட்டு கண்கள் இரண்டும் பிடுங்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் தாங்கள் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடனை திருப்பித் தராததால் குழந்தை கடத்திக் கொலை செய்யப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து அலிகார் காவல்துறை ஆய்வாளர் கூறுகையில், ``கொலை செய்த இருவரின் பெயர் ஜாகித் மற்றும் அஸ்லாம் எனக் கண்டுபிடித்துள்ளோம். இதில் கொலையாளி ஜாகித், அஸ்லாம் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார். மற்றபடி குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவோ அல்லது ஆசிட் வீசிக் கொல்லப்பட்டதாகவோ வரும் தகவல்கள் பொய்யானது. இதுதொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த ஐந்து பேர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.   

இந்தக் கொடூரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த மாயாவதி, ``குற்றவாளியை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டிருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் கவலை தெரிவித்திருந்த ராகுல்காந்தி, ``ஒரு குழந்தையிடம் இப்படிக் கொடூரமாக நடந்துகொள்ள எப்படி அவர்களுக்கு மனது வந்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க