``உருவம் விகாரமாகிவிட்டது, தோல் உரிந்துவிட்டது, முடிகொட்டிவிட்டது'' - தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ரஞ்சனி! | Woman in Kerala mistakenly diagnosed with Cancer treated with Chemotherapy

வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (08/06/2019)

கடைசி தொடர்பு:19:15 (11/06/2019)

``உருவம் விகாரமாகிவிட்டது, தோல் உரிந்துவிட்டது, முடிகொட்டிவிட்டது'' - தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ரஞ்சனி!

"எனக்கு கீமோதெரபி அளிக்க வந்த மருத்துவரிடம், கோட்டயம் மெடிக்கல் கல்லூரிக்குச் சென்றுள்ள மாதிரியின் முடிவு வரட்டும் அதன்பிறகு கீமோ ஆரம்பியுங்கள் என்றேன். அவர் கேட்கவேயில்லை."

``உருவம் விகாரமாகிவிட்டது, தோல் உரிந்துவிட்டது, முடிகொட்டிவிட்டது'' - தவறான  சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ரஞ்சனி!

"கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வந்த மருத்துவரிடம், ஆய்வு முடிவு வந்ததும் சிகிச்சை ஆரம்பிக்கலாமே என்றேன். அதை அவர் காதுகொடுத்து கேட்கவில்லை. கீமோவால் நான் உருக்குலைந்ததுதான் மிச்சம்'' என வெடித்துக் கதறுகிறார், ஆலப்புழாவைச் சேர்ந்த ரஞ்சனி. புற்றுநோய் எனக் கருதப்பட்டு அளித்த தவறான கீமோ சிகிச்சையால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார் ரஞ்சனி. அவரிடம் பேசியபோது...

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த ரஞ்சனிக்கு, மார்பில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை எடுக்க, கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். அவருடைய திசுக்களை தனியார் ஆய்வகத்துக்கும் மெடிக்கல் கல்லூரியில் உள்ள ஆய்வகத்துக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள் அங்கிருந்த மருத்துவர்கள். தனியார் ஆய்வக முடிவில் ரஞ்சனிக்கு புற்றுநோய் இருப்பதாக வர, அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு வந்ததிருக்கிறது மெடிக்கல் கல்லூரி ஆய்வு. அதில், ரஞ்சனிக்கு புற்றுநோய் இல்லை என்ற செய்திதான் இன்று ஒட்டுமொத்த கேரள மக்களையும் உலுக்கியிருக்கிறது.

"எனக்கு திருமணம் ஆகி ஒரு மகள் பிறந்தாள். மகளுக்கு ஒன்றரை வயது இருக்கும்போது என்னை உதறித்தள்ளிவிட்டு கணவர் பிரிந்து சென்றுவிட்டார். வயதான அம்மா, அப்பா, பாசமான மகளுக்காக நம்பிக்கையுடன் நானே குடும்பத்தை நிர்வகிக்கத் தொடங்கினேன். பி.எஸ்சி படித்த நான், ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் வேலை செய்துகொண்டிருந்தேன். வருவாய் குறைவு என்றாலும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் எனது மார்பில் ஏற்பட்ட கட்டி குணமாகாமல் வலியை ஏற்படுத்தியது. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சிகிச்சைக்காக சென்றேன். ரெஞ்சின் என்ற மருத்துவர் என்னைப் பரிசோதித்து அட்மிட் செய்தார்.

சிகிச்சை

கோட்டயம் மெடிக்கல் கல்லூரியில் ஆய்வுக்கூடம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இருப்பினும் மருத்துவமனைக்கு வெளியே உள்ள சி.எம்.சி ஆய்வகத்தின் விளம்பரம் உள்ள லெட்டர்பேடில் சோதனைக்காக எழுதித்தந்தார்கள். சி.எம்.சி ஆய்வகம் அளித்த தவறான முடிவால், எனக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் கடந்த மார்ச் 19-ம் தேதி கீமோதெரபி சிகிச்சை அளித்தார்கள். இதற்கிடையில் மெடிக்கல் கல்லூரி ஆய்வகத்தில் கொடுத்த மாதிரியில், எனக்குப் புற்றுநோய் இல்லை என்ற தகவல் மார்ச் 27-ம் தேதி வந்தது. இருப்பினும் சந்தேகம் கொண்ட மருத்துவர்கள், தனியார் ஆய்வகத்தில் கொடுத்த மாதிரிகளை எடுத்து மீண்டும் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் ஆய்வகத்தில் சோதனை செய்தனர். ஏப்ரல் 2-ம் தேதி வந்த முடிவில், புற்றுநோய் இல்லை என்று அறிக்கை கொடுத்தார்கள்.

இதையடுத்து, ஏப்ரல் 9-ம் தேதி எனக்கு அளிக்க இருந்த இரண்டாம்கட்ட கீமோதெரபி சிகிச்சையைக் கைவிட்டார்கள். அப்போது நான் கேட்டதற்கு, உங்களுக்கு கேன்சர் இல்லை என்று கூறி வீட்டுக்கு போகச் சொன்னார்கள். எனது சிகிச்சைகுறித்த அனைத்து ஃபைல்களும் மருத்துவமனையில்தான் உள்ளன. ஏப்ரல் 10-ம் தேதி, மெடிக்கல் கல்லூரியில் நடந்த ஆய்வுகூட்டத்தில், பிறகு எனக்குத் தகவல் சொல்லுவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு, எந்தத் தகவலும் வராததால், எனக்கு கீமோதெரபி சிகிச்சையளித்த டாக்டர் சுரேஷ் என்பவரைத் தேடி மருத்துவமனைக்குச் சென்றேன். புறநோயாளிகள் பிரிவுகளில் அலைந்து பார்த்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது மார்பில் உள்ள கட்டி உடைந்து மிகவும் வலியாக உள்ளது என்பதை மெடிக்கல் கல்லூரிக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன். அதன்பேரில், கடந்த மாதம் 25-ம் தேதி அறுவைசிகிச்சை மூலம் அகற்றினார்கள்.

chemo

இனி, கோட்டயம் மருத்துவமனையை நம்பி பயனில்லை என்று முடிவுசெய்து, திருவனந்தபுரம் ஆர்.சி.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றேன். வரும் திங்கள்கிழமையில் இருந்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளேன். சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை. கோட்டயம் மெடிக்கல் கல்லூரிக்குச் செல்லும் சர்க்கரை நோயாளிகள் போன்ற அனைவருக்கும் வெளியில் உள்ள ஆய்வகத்துக்குத்தான் பரிசோதிக்க அனுப்பிவைக்கிறார்கள். எனக்கு கீமோதெரபி அளிக்க வந்த மருத்துவரிடம், கோட்டயம் மெடிக்கல் கல்லூரிக்குச் சென்றுள்ள மாதிரியின் முடிவு வரட்டும் அதன்பிறகு கீமோ ஆரம்பியுங்கள் என்றேன். அவர் கேட்கவேயில்லை. தனியார் ஆய்வகத்துக்கு எதிராகவும் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றவர் தொடர்ந்து, 

"என் ஆரோக்கியம் பழையபடி இல்லை. தலையில் இருந்த முடிகள் எல்லாம் கொட்டிவிட்டன. நகங்கள் கறுத்துப்போய்விட்டன. வாயில் தோல் உரிந்துபோனதால் சாப்பிடுவதில் சிரமம் உள்ளது. உணவின் ருசி எதுவும் தெரியவில்லை. நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. என் உருவம் விகாரமாக மாறிவிட்டது. என்னை எனக்கே அடையாளம் தெரியாதவாறு மாற்றிவிட்டார்கள். மீண்டும் வேலைக்குப் போகும் அளவுக்கு எனக்குத் தெம்பு இல்லை. அரசியல் பிரமுகர்கள் எல்லோரும் என்னை வந்து பார்த்து பேசிச் செல்கிறார்கள். ஆனாலும் உதவி செய்ய யாருமே இல்லை" என வெடித்துக் கதறுகிறார்.


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை