‘மோடியிடம் தெரிவித்தால் நிச்சயம் நடக்கும்’ - 37 முறை பிரதமருக்கு கடிதம் எழுதிய உ.பி சிறுவன் | UP boy write 37th Letter To PM, Asks For Father's Job

வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (08/06/2019)

கடைசி தொடர்பு:10:08 (08/06/2019)

‘மோடியிடம் தெரிவித்தால் நிச்சயம் நடக்கும்’ - 37 முறை பிரதமருக்கு கடிதம் எழுதிய உ.பி சிறுவன்

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் சர்தக் திரிபாதி. இவரது தந்தை சத்யஜித் திரிபாதி உத்தரபிரதேச பங்குச் சந்தையில் பணியாற்றி வந்துள்ளார். வேலை நன்றாக சென்றுகொண்டிருந்த போது திடீரென சத்யஜித்தை பணியில் இருந்து தூக்கியுள்ளனர் அதிகாரிகள். 

கடிதம் எழுதிய சிறுவன்

சத்யஜித்துக்கு வேலைப் பறிபோனதால் அவரின் குடும்பம் வறுமையின் பிடியில் தவித்து வந்துள்ளது. இந்நிலையில் சத்யஜித்தின் மகன் சர்தக், ‘ தன் தந்தைக்கு உதவி செய்ய வேண்டும்’ என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ உத்தரபிரதேச பங்கு சந்தையில் வேலை செய்துகொண்டிருந்த என் தந்தை திடீரென பணியிலிருந்து நிறுத்தப்பட்டார். அதனால் எங்கள் குடும்பம் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறது. எனவே அந்த வேலையை என் தந்தைக்கு மீண்டும் தர நீங்கள் உதவி செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மோடி

கடந்த 2016-ம் ஆண்டு முதல் இது போன்ற கடிதங்களை அந்த சிறுவன் எழுதிவருகிறான். இதுவரை 36 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் நேற்று 37-வது கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். ஆனால் இதுவரை அவனது ஒரு கடிதத்துக்கு விடை கிடைக்கவில்லை என வேதனைத் தெரிவித்துள்ளான் சிறுவன் சர்தக் திரிபாதி.

இது பற்றி பேசியுள்ள அவன், “ பிரதமர் மோடிக்கு நான் தொடர்ந்து கடிதம் எழுதுவதினால் என் தந்தைக்கு நிறைய தொலைப்பேசி மிரட்டல்கள் வருகின்றது. அவர்கள் என் தந்தை மற்றும் குடும்பத்தை கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்கள். என் தந்தைக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.  ‘மோடியிடம் தெரிவித்தால் நிச்சயம் நடக்கும்’ எனப் பலர் கூறி நான் கேட்டிருக்கிறேன். அதனால்தான் தொடர்ந்து கடிதம் எழுதுகிறேன். ஒரே ஒரு முறை என் கடிதத்தை பார்த்து அதற்குப் பதில் கூறினால் மகிழ்ச்சியடைவேன்” எனப் பேசியுள்ளான். 


அதிகம் படித்தவை