`எடைக்கு எடை தாமரை; ஒரு மணிநேரம் வழிபாடு!' - குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் பிரதமர் மோடி | PM modi visit to Kerala for offering prayers at Guruvayur

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (08/06/2019)

கடைசி தொடர்பு:12:39 (08/06/2019)

`எடைக்கு எடை தாமரை; ஒரு மணிநேரம் வழிபாடு!' - குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் பிரதமர் மோடி

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் பா.ஜ.க மிகப்பெரும் வெற்றிபெற்றது. இரண்டாவது முறையாக நரேந்திரமோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இன்று கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்துள்ளார்.

மோடி

மோடி, இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பிறகு பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். நேற்று நள்ளிரவு 11:50 மணியளவில், கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்தில் வந்து இறங்கிய பிரதமரை, கேரள ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதர் ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்  எர்ணாகுளத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.

குருவாயூர்

மோடியுடன் விருந்தினர் மாளிகையில் மொத்தம் 40 பேர் தங்கியிருந்துள்ளனர். கேரள சுற்றுலாத்துறை உட்பட, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் நேற்று எர்ணாகுளத்துக்கு வந்துள்ளனர். இதனைத் தொடந்து, இன்று காலை எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு குருவாயூயுர் கோயிலுக்கு வந்தார். கேரளாவின் கலாசாரப்படி வேட்டி அணிந்தபடி வந்திருந்தார். பின்னர், கோயில் சார்பாக அவருக்கு பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

பூர்ண கும்ப மரியாதை

மோடி பிரதமாகப் பதவியேற்ற பிறகு, தற்போது முதல்முறையாக குருவாயூர் கோயிலுக்கு வருகைதந்துள்ளார். இதற்கு முன்னர்  2008-ம் ஆண்டு, குஜராத்தின் முதல்வராக இருந்தபோது வந்துள்ளார். குருவாயூர் கோயிலுக்கு நன்கொடையாக ரூ.40,000 வழங்கியுள்ளார் பிரதமர். இதைத் தவிர தன் எடைக்கு எடை தாமரை மலர்களை கோயிலுக்கு வழங்கினார். இதன் மதிப்பு ரூ.22,000 இருக்கும் என கூறப்படுகிறது. 1000 ரூபாய்க்கு நெய்விளக்கு செய்து, சுமார் ஒரு மணி நேரம் கோயிலில் வழிபாடு நடத்தினார். 

துலாபாரத்தில் மோடி

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மைதானத்தில் நடக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பா.ஜ.க-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். பிற்பகல் 12:40 மணிக்கு மீண்டும் கொச்சியில் உள்ள கடற்படைத் தளத்துக்கு வந்து ஓய்வெடுத்துவிட்டு, அங்கிருந்து டெல்லி புறப்பட உள்ளார். 


அதிகம் படித்தவை