ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை - ரோஜாவுக்கு இடமில்லை! | No Ministry for Roja in jagan cabinet

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (08/06/2019)

கடைசி தொடர்பு:16:45 (08/06/2019)

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை - ரோஜாவுக்கு இடமில்லை!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் நிச்சயம் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஜா, புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரா மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருந்த தெலுங்கு தேசத்தை காலிசெய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி. மது விலக்கு, சனிக்கிழமைகளில் குழந்தைகள் பள்ளிகளுக்கு பேக் எடுத்துச்செல்ல தேவையில்லை, உயர்த்தபட்ட ஓய்வூதியம், இப்படி அதிரடித் திட்டங்களால் மக்கள் மனத்தைக் கவர்கிறார், ஜெகன். `என்னால் எது முடியுமோ அந்த வாக்குறுதியை மட்டும்தான் கொடுப்பேன்’ என்று கூறி அசரவைக்கிறார்.

 

ஜெகன்

இந்திய அரசியல் வரலாற்றில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த 5 துணை முதல்வர்களை நியமித்து, அனைவரின் கவனத்தையும் தம் பக்கம் திருப்பியிருக்கிறார். பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், கபூ சமூகத்தினர். இந்த ஐந்து பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் ஜெகனின் ஐந்து துணை முதல்வர்கள்.ஜெகன், தன் அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமித்துள்ளார். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்றும், அதற்குப் பிறகு புதிய தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ரோஜா

மேலும், தன் திட்டங்களை எளிதாக மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காகவே இத்தனை துணை முதல்வர்களை நியமித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 25 அமைச்சர்களின் பெயர்ப் பட்டியல் மற்றும் 5 துணை முதல்வர்களின் பெயர்ப் பட்டியலையும், ஆளுநர் நரசிம்மனை சந்தித்து நேரில் வழங்கினார். ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில், இன்று காலை பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

 ரோஜா

நகரி சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா, இந்த அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். நகரி தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரோஜா. அவருக்கு உள்துறை அமைச்சகம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ரோஜாவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜெகன் அமைச்சரவையில் குறைவான பெண் அமைச்சர்களே இடம்பெற்றுள்ளனர்.