`சரியான நபரிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும்!’ - ராகுல் பதவி விலகல் குறித்து வீரப்ப மொய்லி | if Rahul Gandhi wants to leave, he should find right person says Veerappa Moily

வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (09/06/2019)

கடைசி தொடர்பு:11:07 (09/06/2019)

`சரியான நபரிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும்!’ - ராகுல் பதவி விலகல் குறித்து வீரப்ப மொய்லி

ராகுல்காந்தி பதவி விலகினால், கட்சியை சரியான நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். 

வீரப்ப மொய்லி


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு இரண்டாவது முறையாக பலத்த அடி. எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாத நிலையில், இம்முறை நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறது அக்கட்சி. காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் அமேதியிலே அக்கட்சித்தலைவர் தோல்வியைத்தழுவினார். மக்களவைத்தேர்தல் தோல்வியை ஏற்று, கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக ராகுல் அறிவித்தார். இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ராகுல் தலைவராக நீடிக்க வேண்டும் என்று கூறி, அக்கட்சித் தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றனர்.

ராகுல்காந்தி

இதுபோல ராகுல் பொறுப்பில் நீடிக்கக் கோரி நாடுமுழுவதும் அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் காரியக்கமிட்டி குழுவில்கூட, அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்டாலும், தற்போது வரை கட்சியின் தலைவராக அவர் இருக்கிறார். தலைவர் பதவியில் இருந்து அவர் விலகும் பட்சத்தில், கட்சியை மறுசீரமைப்பு செய்துவிட்டுச் செல்ல வேண்டும். நேர்மையான, சரியான நபரை தேர்வு செய்து கட்சியை ஒப்படைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை சீர்குலைவதற்கு வழிவகுத்துவிடக் கூடாது” என்றார்.