`என்னை விட்டுவிடுங்கள்!’ - ஹைதராபாத்தில் பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்! | Hyderabad man stabbed by in-laws

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (09/06/2019)

கடைசி தொடர்பு:10:30 (09/06/2019)

`என்னை விட்டுவிடுங்கள்!’ - ஹைதராபாத்தில் பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்!

ஹைதராபாத்

ஹைதராபாத்தைச் சேர்ந்த இம்தியாஸ்  - ஃபாத்திமா இருவரும் கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை ஃபாத்திமாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜூன் 6-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ஃபாத்திமா காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதன்பேரில் எஸ்.ஆர். நகர் காவல்துறையினர் விசாரித்ததில் ஃபாத்திமா - இம்தியாஸை காதலித்து வந்தது தெரியவந்தது. இம்தியாஸ் - ஃபாத்திமா திருமணம் செய்ததையடுத்து இருவீட்டாரையும் சமாதானம் பேசுவதற்காக அழைத்துள்ளனர். ஃபாத்திமாவின் குடும்பத்தினர் பிரச்னை எதும் செய்யவில்லை. ஃபாத்திமாவின்  தந்தை இம்தியாஸை தொடர்புகொண்டு உங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இருவரையும் வீட்டுக்கு அழைத்துள்ளனர். இதனை நம்பிய இம்தியாஸின் குடும்பத்தினர் அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஹைதராபாத் சாலையில் வைத்து 9 பேர் கொண்ட கும்பல் இம்தியாஸை கத்தியால் தாக்கியது. அந்தப் பெண்ணின் சகோதரர்கள்தான் கத்தியால் அவரைக் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிக்னலில் இம்தியாஸ் சென்ற கார் நிற்கிறது. ஒரு கும்பல் காரை மறிக்கவும் அவர் வாகனத்தில் இருந்து வெளியே சாலையில் ஓடுகிறார்.

பின்னால் இருவர் அவரைத் துரத்திச் செல்கின்றனர். கைகளில் வைத்திருக்கும் கத்தியால் கடுமையாகத் தாக்குகிறார்கள். தன்னை விட்டு விடுமாறு கெஞ்சுகிறார். இருப்பினும் அந்த  இருவர் தங்களது வெறியாட்டத்தைத் தொடர்கின்றனர். பர்தா அணிந்த மூன்று பெண்கள் சுற்றி நிற்கிறார்கள். சாலையில் செல்லும் 100-க்கும் அதிகமான நபர்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்கின்றனர். பின்னர் அந்தக்கும்பல் அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள்.

இந்தத் தாக்குதலில் இம்தியாஸுக்கு தலை மற்றும் உடம்பு பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இம்தியாஸை தாக்கியது ஃபாத்திமாவின் சகோதரர்கள் முகமது அலி மற்றும் அஹமது அலி என்பது தெரியவந்துள்ளது.