`சுத்தியலால கூட முட்டையை உடைக்க முடியல!' - சியாச்சினில் -60 டிகிரி குளிரில் வாடும் ராணுவ வீரர்கள் #ViralVideo | Army soldiers try to break eggs with hammer in this viral video

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (09/06/2019)

கடைசி தொடர்பு:12:32 (09/06/2019)

`சுத்தியலால கூட முட்டையை உடைக்க முடியல!' - சியாச்சினில் -60 டிகிரி குளிரில் வாடும் ராணுவ வீரர்கள் #ViralVideo

சியாச்சின் ராணுவ முகாமில் வீரர்கள் சிலர் சுத்தியலால் முட்டையை உடைக்க முயலும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ராணுவ வீரர்கள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சியாச்சினில் உள்ள இந்திய ராணுவ முகாம், தரையிலிருந்து ஏறக்குறைய 22,000 அடி உயரத்தில் இருக்கிறது. பனிபடர்ந்து அடர்த்தியாக இருக்கும் அந்த மலையில் அமைந்திருக்கும் ராணுவ முகாமில், வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குளிர்காலங்களில் - 60, -70 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கீழிறங்கி உறைய வைக்கும் நிலை அங்கு நிலவும். அதேபோல், பனிச்சரிவு, பனிப்புயல் எல்லாம் அங்கு சர்வ சாதாரணம். கடும் பனி நிலவுவதால், அங்கு பணியாற்றும் வீரர்கள் உணவு எடுத்துக்கொள்வதில் தொடங்கி உடல் உபாதைகள் வரை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

ராணுவ வீரர்கள்

இந்த நிலையில், சியாச்சின் ராணுவ முகாமில் வீரர்கள் சிலர் முட்டையை சுத்தியலால் உடைக்க முயலும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. டேராடூனில் உள்ள ராணுவப் பயிற்சி முகாமின் ஃபேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோவில், 3 வீரர்கள் சியாச்சின் அனுபவங்களைப் பகிர்கின்றனர். முதலில் ஜூஸ் பாக்கெட் ஒன்றை ராணுவ வீரர் ஒருவர் பிரிக்கிறார். பிரித்துப் பார்த்தபோது செங்கல் போன்ற ஒரு ஜூஸ் பனிக்கட்டியாக நிற்கிறது. பின்னர், அந்தக் கட்டியை சுத்தியல் கொண்டு உடைக்க முயன்றும், அது உடையவில்லை. இதையடுத்து, முட்டைகளை மேஜை மீது வைத்தும் கைகளில் வைத்தும், அதை சுத்தியலால் அவர்கள் உடைக்க முயலுகின்றனர். ஆனால், உறைந்தநிலையில் இருக்கும் அவற்றை சுத்தியலால் கூட உடைக்க முடியவில்லை. `பனிப்பொழிவு நிறைந்த சிகரங்களில், உங்களுக்கு இதுபோன்ற முட்டைகள்தான் கிடைக்கும்' என்று விளையாட்டாகக் குறிப்பிடுகிறார் அவர்களில் ஒருவர்.

 

 

அதேபோல், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, இஞ்சி ஆகியவற்றை கத்தி கொண்டும், சுத்தியல் கொண்டும் இரண்டாக்க முயல்கின்றனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை. `இங்கு வெப்பநிலை -70 டிகிரி அளவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. வாழ்க்கை என்பது இங்கு நரகம்' என்று மற்றொரு வீரர் குறிப்பிடுகிறார். இந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. `சியாச்சின் போன்ற சிகரங்களில் வாழ்க்கை என்பது உங்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு இருக்கும்' என்று கூறி ராணுவ வீரர்களுக்கு நெட்டிசன் ஒருவர் மரியாதை செய்திருக்கிறார்.