`இந்தியக் குடிமகனே இல்லை' - பெயர் குழப்பத்தால் முன்னாள் ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடுமை! | Assam Retired army officer released from detention center

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/06/2019)

கடைசி தொடர்பு:18:00 (09/06/2019)

`இந்தியக் குடிமகனே இல்லை' - பெயர் குழப்பத்தால் முன்னாள் ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடுமை!

30 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவைபுரிந்து பணி ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், இந்த நாட்டின் பிரஜையல்ல என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், அசாமில் சிறைவைக்கப்பட்டிருந்தார். கௌஹாத்தி உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.  

முன்னாள் ராணுவ வீரர் முகமது சனாவுல்லா

அசாமின் கோலோஹிகாஷ் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சனாவுல்லா. 53 வயதான இவர் கடந்த 1987-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். 2017-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற சனாவுல்லா, அசாமில் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டினர் குறித்து விசாரிக்கும் மாநில அரசின் எல்லைப் பிரிவு காவல்துறையில் பணியாற்றி வந்திருக்கிறார்.

இந்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) அவர் சந்தேகத்துக்கிடமான வாக்காளர் என்று பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சட்டவிரோத குடியேற்றம் குறித்த வழக்குகளை விசாரிக்கும் காம்ரூப் நீதிமன்றம், சனாவுல்லா, இந்தியக் குடிமகனல்ல என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த மே மாதம் 28-ம் தேதி கைது செய்யப்பட்ட சனாவுல்லா, கோபால்புரா பகுதியில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டார். அவர் பணியாற்றி வந்த துறையைச் சேர்ந்த காவல் அதிகாரிகளே, அவரைக் கைது செய்தனர். இதை எதிர்த்து அவரின் குடும்பத்தினர் கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். 

பெயரால் வந்த சோதனை:

சனாவுல்லா மீது கடந்த 2008-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், 2018-ம் ஆண்டு வரை தன் மீது அப்படி ஒரு வழக்கு இருப்பதாகத் தனக்குத் தெரியாது என்பது சனாவுல்லா தரப்பு வாதம். அசாமின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள போகோ காவல்நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சனாவுல்லா மீதான வழக்கை துணை ஆய்வாளர் சந்திரமால் தாஸ் என்பவர் விசாரித்து வந்திருக்கிறார். தற்போது அவர் ஓய்வுபெற்றிருக்கும் நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. 

முன்னாள் ராணுவ வீரர் முகமது சனாவுல்லா

வழக்கில் சாட்சிகளாக தாஸ் சேர்ந்திருந்த முகமது குரான் அலி, சுவாஹன் அலி மற்றும் அஜ்மல் அலி ஆகியோர், தாஸுக்கு எதிராகப் புகார் அளித்திருக்கிறார்கள். அவர்களது கூற்றுப்படி, சனாவுல்லா வழக்கில் தாஸ் தங்களிடம் எந்தவிதமான வாக்குமூலமும் பெறவில்லை. அவரது ஆவணங்கள் பொய்யானவை என்கிறார்கள். இதையடுத்து தாஸ் மீது 3 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

தான் விசாரித்துவந்த சனாவுல்லா, இவரே இல்லை. பெயரால் வந்த குழப்பம் இது என்று தாஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருவரின் பெயரும் ஒரேமாதிரியாக இருந்ததால், நிர்வாகரீதியில் ஏற்பட்ட குழப்பம் இது என்கிறார் அவர். அதேபோல், வழக்கு விசாரணை நடந்ததாகக் கூறப்படும் கடந்த மே 2008 முதல் ஆகஸ்ட் 2009 வரை சனாவுல்லா, அஸ்ஸாமிலேயே இல்லை. அவர் மணிப்பூரில் பணியாற்றிவந்தார் என்பது ராணுவம் அளித்துள்ள தகவல்களின்படி உறுதியாகியிருக்கிறது. 

முன்னாள் ராணுவ வீரர் முகமது சனாவுல்லா

Photo Credit: News18

30 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவையாற்றிய சனாவுல்லா, ஓய்வுபெறும்போது கௌரவ லெப்டினன்ட்டாக பணி நிறைவு செய்திருக்கிறார். அதேபோல், சிறப்பாகச் சேவையாற்றியதற்காகக் கடந்த 2014-ம் ஆண்டில் குடியரசுத் தலைவர் விருதையும் அவர் பெற்றிருக்கிறார். இந்தச்சூழலில், போலியான ஆவணங்கள் மற்றும் திரித்துக் கூறப்பட்ட சாட்சியங்கள் மூலம் அவர் இந்த நாட்டின் குடிமகனே இல்லை என்று நிரூபிக்க சதி செய்வதாக அஸ்ஸாம் எல்லையோரப் படைப்பிரிவு மற்றும் அம்மாநில அரசு மீது சனாவுல்லாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள். காவல்துறை அதிகாரி தாஸ் மீது சனாவுல்லா தரப்பில் ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. 

ஜாமீனில் வெளிவந்திருக்கும் சனாவுல்லா பேசுகையில், ``நான் இந்தியக் குடிமகன்தான். இந்தியனாகவே இருப்பேன். 30 ஆண்டுகளாக தேசத்துக்காக சேவையாற்றிய நிலையில், இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுவது மிகப்பெரிய மனவேதனையை அளிக்கிறது. நான் இந்தியக் குடிமகன்தான் என்பதால், இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கௌஹாத்தி நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் எனக்கு நீதி கிடைக்கும் என திடமாக நம்புகிறேன்'' என்றார்.